Saturday, 21 May 2011

விரல் கொண்டு...வலி போக்குங்கள்..

கை, கால் வலிகளுக்கு விரல்களை உருட்டினால் தீர்வு 

சில நேரங்களில் நமக்கு கை கால்களில் வலி ஏற்படுவதுண்டு. அப்பொழுது கைகளை யாராவது அழுத்தி விடமாட்டார்களா? கால் களை சிறு குழந்தைகள் எவராவது மிதித்து விட மாட்டார்களா என்று தோன்றும். வலி நீக்கும் தைலங்களை கை கால்களில் தடவுவோம். மாத்திரைகளை விழுங்குவோம். ஆனாலும் வலி தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். சில வேளைகளில் சிறிது நிவாரணம் கிடைக்கும். இதற்கு முழு தீர்வு கிடைக்குமா என்று ஏங்குவோம். இதற்கு முழுதீர்வு உண்டு.

நாம் சில நேரம் ஆன்மீக பிரசங்களுக்கோ, விழாக்களின் நடக்கும் சொற்பொழிவுகளுக்கோ சென்று தரையில் அமர்ந்திருப்போம். கூட்டம் நிறைய இருக்கும். மேடைப் பேச்சாளரின் திறமையான பேச்சுத் திறமையினால் நெருக்கமாக நீண்ட நேரம் அமர்ந்திருப்போம். கால்களின் மூட்டுகளில் வலி அதிக மாக இருக்கும். கால்களை சற்று நீட்டி உட்கார்ந்தால் சௌகரியமாக இருக்கும் என்று நினைப்போம். கால்களை நீட்டவும் இடம் இருக்காது. காலை மாற்றி வைத்துக் கொள்ள கூட இட வசதி இருக்காது. எழுந்து வரவும் மனமும் இருக்காது அப்பொழுது கால்களில் ஏற்படும் மூட்டுவலி உடனடியாக நீக்குவதற்கு ஒரு வழி உள்ளது. அதைச் செய்தால் கால் மூட்டுகளில் ஏற்படும் வலி உடனே நீங்கிவிடும்.

கால்களை நீண்ட நேரம் மடக்கி அமர்ந் திருப்பதால், அந்த இடத்திலுள்ள நரம்புகள் மடங்குவதால் இரத்தம் ஓடுவதில் தேக்கம் ஏற்பட்டு, ரத்தம் ஓடுவதில் தடை ஏற்படுத்துகிறது. உடலில் எந்த இடத்தில் தடை ஏற்படுகிறதோ, அந்த இடத்தில் வலி உண்டாகின்றது. வலி ஏற்படுவதின் முக்கிய காரணமே இரத்த ஒட்ட தடைதான்.

நமது இருதயம் சுருங்கி, விரிந்து இரத்தத்தை நரம்புகளில் செலுத்துகிறது. அப்பொழுது ஒரு துடிப்பு ஏற்படுத்துகிறது. அந்த துடிப்பின் மூலமே ரத்தத்தை நரம்பு களில் செலுத்த முடிகிறது. அந்த துடிப்பே இருதய துடிப்பு எனப்படுகிறது. இந்த துடிப்பை ஸ்டதஸ்கோப் என்ற கருவியின் மூலம் மருத்துவர்கள் அறிகிறார்கள். இதன் மூலம் மனிதனின் இரத்த ஓட்டத்தின் வலிமையையும், உடல் நலத்தையும் அறிய முடிகிறது. உடல் நலம் பாதிக்கும் பொழுது, இந்த துடிப்பும் மாறுபடு கின்றது. இரத்தம் உடலின் பல பாகங்களுக்கு முறையாகச் செல்வதற்கு பல்வேறு இடங்களில் நரம்புகளில் துடிப்பு ஏற்படுத்தி செலுத்தப்படுகிறது. அந்த துடிப்பை உடம்பில் பல இடங்களில் அறிய முடிகிறது. அவை மார்பு, கைகள், உச்சி, புருவம், கண்டம், நாசி, காது, உந்தி, காமியம், குதிகால் சந்து முதலியன ஆகும்.

மனித உடலில் எழுபத்தியிரண்டாயிரம் நாடி நரம்புகள் இருப்பதாக சித்த வைத்திய நூல்கள் குறிப்பிடுகின்றன. அத்தனை நரம்புகளிலும் இரத்தம் தொடர்ந்து செல்ல, துடித்து தள்ளப்படுகிறது. அந்த துடிப்புகள் வெளியில் தெரிவதில்லை. இரத்தம் நரம்புகளில் தொடர்ந்து முறையாக செல்ல நம் உடலில் மின்சார ஒட்டம் ஏற்பட இரத்தத்தில் உள்ள இரும்பு தாதுக்களும் செம்பு தாதுக்களும், உடலில் ஆகாரம் ஜீரணம் ஆக உருவாகும் அமிலங்களும் கலந்து மின்சார அதிர்வுகள் உருவாகின்றன. அந்த அதிர்வுகள் தான் மின்னோட்டமாக மாறி, இரத்த ஓட்டம் முறையாக செல்ல காரணமாகிறது.

சில நபர்களுக்கு உடலில் நாடித்துடிப்பு குறைபாடு ஏற்படுகிறது. இந்த நாடித் துடிப்பு குறைபாடுகளால் உடலில் நோய்கள் உருவாகின்றன. இந்த நாடித் துடிப்பு குறைபாடு மின்னோட்ட குறைவினால் உண்டாகின்றன. இந்த குறைபாடு நீங்க உலோக சத்து நிறைந்த கீரைகள், காய்கறிகள் ஊட்டச்சத்து உணவுகள் உண்டு வந்தால், உடலில் உருவாகும் ஜீரண அமிலங்களும் இணைந்து, மின்னூட்டம் ஏற்பட்டு நாடித் துடிப்பு குறைபாடு நீங்கி, ஆரோக்கியம் அடைய முடியும்.

உடலில் மின்னூட்டம் இரண்டு மண்டலங்களாக இயங்குகிறது. உடலின் வலது பக்கம் ஒரு மண்டலமாகவும், இடது பக்கம் ஒரு மண்டலமாகவும் இயங்குகிறது. வலது பக்க மண்டலம், வலது கை, கால் விரல்களின் நுனிப்பகுதியிலிருந்து, தலைபகுதி வரை மின்னோட்டம் நடைபெறுகிறது. 

இப்பொழுது நீண்டநேரம் கால்களை மடக்கி உட்கார்ந்திருக்கும் பொழுது உண்டாகும் வலியை நீக்கும் முறையைப் பார்ப்போம். ஒவ்வொரு காலிலிருக்கும் ஐந்து விரல்களிலிருந்தும் தனி வழியாக மின்னூட்டம் தலைப்பகுதி வரை செல்லு கிறது. கால்களை மடக்கி உட்கார்ந்திருப்பதால், அந்த பகுதியில் நரம்புகள் மடங்கி, ரத்த ஓட்டத்தில் தேக்கம் ஏற்பட்டு மெதுவாக சென்று வலி ஏற்படுகிறது. அந்த இரத்த ஓட்டம் தடைபடாமல் விரைவாக செல்வதற் காக நம் கால்களில் மின்னூட்டத்தை விரைவு படுத்த மின்தூண்டுதல் ஏற்படுத்தலாம். கால் களில் உள்ள கட்டை விரல்களிலிருந்து, ஒவ்வொரு விரலாக, இடது கை கட்டை விரலினாலும், சுட்டு விரலினாலும் , இடது கால் கட்டை விரலின் நகத்தின் வலது பக்கத்திலும், இடது பக்கத்திலும் பிடித்து வலது புறமாகவும், இடது புறமாகவும் உருட்டினால் விரலின் நுனியில் மின் தூண்டல் ஏற்பட்டு தலைபகுதி வரை மின்னோட்டம் ஏற்படுகிறது. இந்த மின்தூண்டுதலால் தடைபட்ட இரத்த ஓட்டம் தடையை தாண்டி செல்ல ஆரம்பிக்கிறது. இரத்த ஓட்டம் நடைபெறுவதால் வலி குறைகிறது. இப்பொழுது காலில் உள்ள ஒவ்வொரு விரலையும், இடதுபுறம், வலபுறம் என மாற்றி நாற்பது தடவை உருட்டவும் விரல்களில் தொடர்ந்து மின்ஒட்டத் தூண்டுதல் ஏற்படுவதால், தொடர்ந்து இரத்த ஓட்டம் ஏற்பட்டு தடை விலகி வலியும் நீங்கு கிறது. இதே மாதிரி வலது கால் விரல்களையும். கைவிரல்களில் எல்லா விரல் களையும், கைவிரல்களில் எல்லா விரல் களையும் உருட்டவும். உங்களுக்கு எந்த கால் விரல்களை, எந்த கைவிரல்களினால் உருட்ட முடியுமோ அப்படி செய்து கொள்ளலாம். 

கூட்டத்தில் தரையில் கால்களை மடக்கி உட்கார்ந்திருக்கும் பொழுது, மற்றவர்களுக்கு தெரியாமல் கூட, இடது கால் விரல்களை வலது கை விரல்களினாலும், வலது கால் விரல்களை, இடது கை விரல்களினாலும் உருட்டி விடலாம். விரல்களை உருட்டி சில நிமிடங்களில் வலி மறைந்துவிடும். கால்களில் வலி வரும்பொழுது செய்துதான் பாருங்களேன்.

சிலபேருக்கு கைகளில் வலி, உளைச்சல், கை மூட்டுகளில் வலி, தோள்பட்டையில் வலி, மற்றும் சில பெண்களுக்கு கைகளை தூக்கி தலைவாரி பின்னல் போடமுடியாது. ஜாக்கெட் அணிந்து கொள்ள கையை தூக்க முடியாது. முதலிய தொந்திரவுகளுக்கு கை விரல்களை, அடுத்த கைவிரல்களினால் ஒவ்வொரு விரலையும் நாற்பது தடவை வலது இடதாக உருட்டி விடுவீர்களானால் வலி குறைந்துவிடும், தினமும் காலையும், மாலையும் விரல்களை உருட்டி பயிற்சி செய் வீர்களானால் முற்றிலும் வலி போய்விடும்.

எளிய இந்த பயிற்சியினால் எந்த பக்க விளைவுகளும் இல்லை. மருந்து மாத்திரை இல்லை. பணம் செலவில்லை. சிறிது நேர பயிற்சிதான் சோம்பல் இல்லாமல் செய்ய வேண்டும். இதனால் வலி போய்விடுமா என்று எண்ண வேண்டாம்? செய்துதான் பாருங்களேன் அகல் விளக்கு பிரகாசமாக எரிய தூண்டிவிடுவதுபோல, உங்கள் உடலில் உருவாகும் மின்னூட்டத்தை தூண்டிவிட்டு, ரத்த ஒட்டத்தை முறைபடுத்தி ஆரோக்கியம் அடையுங்கள்.

தினமும் அதிகாலை படுக்கையை விட்டு எழுந்து அமர்ந்து, இந்த நாள் இனிய நாளாக தொடங்கட்டும் என்ற உணர்வுடன் கால் விரல்களையும், கை விரல்களையும், நாற்பது தடவை உருட்டுங்கள், பிறகு உங்களுக்கான வேலைகளை தொடங்குங்கள். உற்சாகம் பிறக்கட்டும் உடல் வலிகள் நீங்கட்டும் வாழ்நாள் முழுவதும் வசந்தமாக மலரட்டும்! இனிமேல் எல்லா நாட்களும் இனிய நாட்களே.

No comments:

Post a Comment