Sunday, 29 May 2011

நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம் உம்மத்துக்காக விட்டு சென்ற இரண்டு விஷயங்கள்

நபி (ஸல்) அவர்கள் தங்களின் இறுதிக் காலத்தில் மக்களுக்கு அறிவுரை கூறுகையில் ‘உங்களுக்கு இரண்டை விட்டுச் செல்கிறேன். 


ஒன்று : அல்லாஹ்வின் வேதம் (திருக்குர்ஆன் ) –
மற்றொன்று : நபி (ஸல்) அவர்களின் வழிமுறை (ஸுன்னத்-ஹதீஸ்) 

இவ்விரண்டையும் நீங்கள் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கும் காலமெல்லாம் நீங்கள் வழிதவறவே மாட்டீர்கள் என்று கூறினார்கள். 

சிறு விளக்கம்: மேற்கண்ட ஹதீஸின் இறுதியில் நபி (ஸல்) அவர்கள் கூறியதை நாம் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். ‘இவ்விரண்டையும் நீங்கள் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கும் காலமெல்லாம் நீங்கள் வழிதவறவே மாட்டீர்கள்’ என்று கூறுகிறார்கள். இன்று நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? குர்ஆன் மற்றும் ஹதீஸ் இவ்விரண்டையும் தவிர்த்து மற்றவற்றையெல்லாம் பற்றிப்பிடித்துக் கொண்டிருக்கின்றோம். திருக்குர்ஆனை சடங்கு சம்பிரதாயங்களுக்காகவும், ஹத்தம், பாத்திஹா ஓதுவதற்காகவும் தான் பயன்படுத்துகிறோமே தவிர குர்ஆன் என்பது “நாம் எப்படி வாழ வேண்டும்” என்று அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்ட வாழ்க்கை நெறிமுறைகள் அடங்கிய சட்டபுத்தகம் என்பதை உணர்வதில்லை.

மிக வேதனையான விஷயம் என்னவென்றால் நம்முடைய முஸ்லிம் சகோதர, சகோதரிகள் சிலர் குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் உள்ள அடிப்படை வேறுபாட்டைக்கூட அறிந்து கொள்ளாமல் இருக்கின்றனர். அதாவது குர்ஆன் என்பது அல்லாஹ்வால் இறக்கப்பட்டது என்பதையும், ஹதீஸ் என்பது நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் என்பதைக்கூட அறியாமல் இருக்கின்றனர். இதற்குக் காரணம் அவர்கள் மார்க்க அறிவின்றி வளர்க்கப்பட்டதுதான். இதற்கு அவர்களின் பெற்றோர்களே பொறுப்பாளர்களாவார்கள்.

இன்று நம்மிடையே இருந்து கொண்டிருக்கும் இந்த திருக்குர்ஆன் உலக மக்கள் அனைவருக்கும் நேரான வாழ்க்கை நெறிமுறைகளைக் கூறிக்கொண்டிருக்கிறது என்பதை பின்வரும் வசனங்களில் இறைவன் கூறுகிறான்.

“அறிவுடையோர் தாம் குர்ஆனைப் பின்பற்றுகின்றனர்” (அல்குர்ஆன்: 39:9)
“கல்வி ஞானம் அளிக்கப்பட்டவர்கள் குர்ஆன் நேர்வழியில் சேர்க்கிறது என்று காண்கிறார்கள்” ( 34:6)
“குர்ஆனைப் பின்பற்றாதவனுக்கு ஷைத்தான் நண்பனாக்கப்படுவான்” (அல்குர்ஆன்: 43: 36-39) 
“குர்ஆன் மூலமாக அல்லாஹ் நேர்வழி காட்டுகிறான்” (அல்குர்ஆன்: 42:52)
“குர்ஆன் மனிதர்களுக்கு தெளிவான அத்தாட்சிகளை கொண்டதாகவுள்ளது” (அல்குர்ஆன்: 45:20)
“குர்ஆன் நம்பிக்கையாளர்களுக்கு நேர்வழியாகவும், ரஹ்மத்தாகவும் இருக்கிறது” (அல்குர்ஆன்: 45:20, 27:77) 
“குர்ஆனை செவிதாழ்த்திக் கேட்பவருக்கு படிப்பினை இருக்கிறது” (அல்குர்ஆன்: 50:37)
“குர்ஆன் அறிந்துணரும் மக்களுக்கு தெளிவாக்கப்பட்டுள்ளது” (அல்குர்ஆன்: 41:3)
“குர்ஆன் அகிலத்தார் அனைவருக்கும் நினைவூட்டும் நல்லுபதேசமாகும்”( 68:52, 69:48, 73:19, 76:29-30, 80:11- 12)
“குர்ஆன் பிரித்து அறிவிக்கக் கூடியது” (அல்குர்ஆன்: 86:13-14)
“குர்ஆனில் எத்தகைய சந்தேகமும் இல்லை” (அல்குர்ஆன்: 2:2)
“தெளிவான வசனங்களை இறக்கி இருக்கின்றோம். பாவிகளைத் தவிர வேறொருவரும் அவற்றை நிராகரிக்க மாட்டார்கள்” (அல்குர்ஆன்: 2:99)
“குர்ஆனைப் பின்பற்றுங்கள் என்று கூறினால் எங்கள் முன்னோர்களைப் பின்பற்றுகிறோம் என்று கூறுகிறார்கள்” (அல்குர்ஆன்: 2:170)
“உங்களுக்கு இறைவனின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது” (அல்குர்ஆன்: 33:21) 

இவைகள் போன்ற இன்னும் ஏராளமான திருமறை வசனங்களும் மற்றும் ஹதீஸ்களும் அல்லாஹ்வின் வேதத்தையும், நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளான ஆதாரபூர்வமான ஹதீஸ்களையும் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தைக் கூறுகிறது. ஆனால், நாமோ இவைகளையெல்லாம் ஓரம்கட்டி விட்டு, நாற்பெரும் இமாம்களின் பெயரால் பிற்காலத்தில் வந்தவர்களால் உருவாக்கப்பட்ட மத்ஹபுகளையும், வழிகேடாகிய தரீக்காக்களையும், இன்னும் பிற பித்அத்களையும் மார்க்கம் என எண்ணி செயல்பட்டு வருகிறோம். சிந்தியுங்கள் சகோதர, சகோதரிகளே!

நபி (ஸல்) அவர்களின் கூற்றுபடி குர்ஆன் மற்றும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளான ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மட்டுமே நமது வாழ்க்கை நெறியாக ஆக்கி, அவற்றை வலுவாகப் பற்றிப்பிடித்துக் கொண்டு, நபி (ஸல்) அவர்களால் கற்றுத்தரப்படாத மத்ஹபுகள், தரீக்காக்கள் போன்றவற்றிலிருந்து விலகியிருக்க அல்லாஹ் நமக்கு அருள்புரிவானகவும் ஆமீன்!

No comments:

Post a Comment