(மரித்து உக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா?
அன்று; அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம்.
(அல் கியாமா 75:3-4 )
அல்லாஹ்வின் திருமறையாம் அல்குர் ஆனில், இறந்தவர்களை மீள உயிர்ப்பிப்பது அல்லாஹ்வுக்கு மிக இலகுவானது எனக் குறிப்பிடும் சந்தர்ப்பத்தில், அதனுடன் இணைத்து குறிப்பாக விரல் நுனிக்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பது சிந்திக்கத் தூண்டும் உட்கருத்து பொதிந்த விடயமாகும்.
பூமியில் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு தனி மனிதனது விரல் அடையாளமும் அவரவருக்கு தனித்துவமானது. ஒரே விரல் அடையாளத்தைக் கொண்ட இருவரை நாம் எங்கும் காண முடியாது. ஏன்? ஒத்த இரட்டையர்களுக்கு கூட அவர்களது விரல் அடையாளம் மாறுபட்டதாகவே இருக்கும். இதனாலேயே குற்றப் புலனாய்வு மற்றும் இதர வேளைகளில் தனி மனிதர்களை அடையாளம் காணும் முக்கிய சாட்சியாக விரல் பதிவு பயன்படுத்தப்படுகிறது.
இங்கு கவனிக்க வேண்டிய விடயம் யாதெனில், விரல் அடையாளம் பற்றிய இவ்வுண்மை 19 ஆம் நூற்றாண்டிலேயே மனிதனுக்கு தெரிய வந்தது. 1880 ஆம் ஆண்டு Sir.Francis Golf என்பவரின் ஆராய்ச்சியின் விளைவாக விரல் பதிவானது, தனி நபர்களை அடையாளம் காணும் விஞ்ஞான முறையாக நடைமுறைக்கு வந்தது. அதற்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்தவர்கள், விரல் ரேகைகளை யாதொரு முக்கியத்துவமுமற்ற சாதாரண வளை கோடுகளாகவே கருதிவந்தனர்.
ஆனால் அல்குர் ஆனோ 14 ஆம் நூற்றாண்டிலேயே விரல் அடையாளம் பற்றி பேசி, அதற்கு ஒரு முக்கியத்துவம் இருப்பதனை மனிதனுக்கு உணர்த்தி நின்றது.
மறுமை சம்பவிக்க இருப்பதை நிராகரிப்பவர்கள், பூமியில் இறந்தவர்களின் மக்கிப் போன எலும்புகளை மீண்டும் ஒன்றிணைத்து உயிர் கொடுக்க முடியாத நிலையில் மறுமையில் மட்டும் அது எவ்வாறு சாத்தியமாகும் என கேள்வி எழுப்பினர். அப்படியே ஒன்றிணைத்தாலும் அவ்வுடல்கள் யார் யாருடையவை என்று எவ்வாறு இனம் கண்டு, எவ்வாறு கணக்குக் கேட்பது என கேலி செய்தனர்.
இதற்கு பதிலளிக்கும் முகமாகவே, திருமறை அவ்வாறு மனிதனை உள்ளபடியே மீள் எழுப்புவது அல்லாஹ்வுக்கு மிகவும் இலகுவானதெனக் கூறுகிறது. எலும்புகளை மட்டுமல்ல, விரல் நுனிகளைக் கூட இருந்தபடியே மீளமைக்க அல்லாஹ் ஆற்றலுடையவன் என பிரஸ்தாபிக்கிறது. மனிதனை உள்ளபடியே மீள் எழுப்பி, யாரென இனம் காணும் விடயம் பற்றி பேசும் இடத்தில் அல் குர் ஆன், குறிப்பாக விரல் நுனிகளும் இருந்தபடியே மீள உருவாக்கப்படும் என்று கூறியதிலிருந்து விரல் அடையாளங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்துவமானது, இதன் மூலம் ஒவ்வொரு தனி மனிதனும் இனம் காணப்படலாம் என்பதனையே அல் குர் ஆன் சுட்டிக்காட்டி நின்றது என்பது தெளிவாகும்.
14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த எவருக்கு இவ்வுண்மை தெரிவது சாத்தியம்? அப்படியே தெரிவதானாலும், அது மனிதனைப் படைத்து போஷிக்கும் இறைவன் அல்லாமல் வேறு யாரால் தான் அது அறிவிக்கப்பட்டிருக்கும்... ....???
நன்றி Miracles in Quran - facebook பக்கம்
"இது (குர்ஆன்) மனிதர்களுக்கு தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டதாகவும், உறுதியான நம்பிக்கையுடைய சமூகத்தாருக்கு நேர்வழியாகவும், ரஹ்மத்தாகவும் இருக்கிறது." (45:20)
No comments:
Post a Comment