Monday, 30 May 2011

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உப்பு மோகம் குறை!


தண்ணீரிலிருந்துதான் சுவை தோன்றுகிறது. அது முதலில் தனிப்பட்ட முறையில் அறியப்படாத ஒரு பொருள். வருடம் என்ற காலம், ஆறு பருவங்களாகப் பிரிக்கப்பட்டிருப்பதாலும் பஞ்ச மஹா பூதங்களான நிலம், நீர், நெருப்பு, வாயு, ஆகாயம் இவற்றின் குணங்களின் ஏற்றத் தாழ்வின் கலப்பினாலும் சுவை என்பது இனிப்பு முதலான ஆறு தனித்த தனிச் சுவையாகத் தோற்றம் அடைகிறது.

நீர் மற்றும் நெருப்பின் அதிகச் சேர்க்கையினால் ஏற்படும் சுவை உப்பு. உப்புச் சுவை உமிழ் நீரை பெருகச் செய்கிறது. உணவிற்குச் சுவையூட்டுகிறது. அதிக சேர்க்கை தொண்டையையும் தாடைகளையும் எரிக்கிறது. உங்களைப் பொறுத்தவரை உப்புச் சுவையிலுள்ள நீர் மற்றும் நெருப்பின் தேவை, உடலில் ஏதோ ஒரு பகுதியின் தேய்மானத்தை ஈடுகட்டுவதற்காக, அதன் மீது நாட்டத்தை ஏற்படுத்துகிறது.

உப்புச் சரியான அளவில் சேர்க்கும் போது, பசித்தீயைத் தூண்டுகிறது. நாக்கிலுள்ள ருசி கோளங்களில் படிந்துள்ள தேவையற்ற அழுக்குகளை நீக்கி சுத்தப்படுத்தி சுவையை உணரும்படி செய்கிறது. உண்ட உணவைச் சீரணிக்க உதவுகிறது. வயிற்றில் ஈரப்பசையை ஏற்படுத்துகிறது. குடல் முழுவதும் எண்ணெய்ப் பசையை ஏற்படுத்தி குடலின் இயற்கையான அசைவுகளுக்கு உதவுகிறது.

வியர்வை கோளங்களைச் சுறுசுறுப்புடன் இயங்கச் செய்கிறது. குடலில் சேர்ந்துள்ள இறுகிய மலத்தை உடைத்து வெளியேற்றுகிறது. உடல் முழுவதும் விரைவில் பரவிவிடும் திறன் உடையது. உடலிலுள்ள எண்ணற்ற ஓட்டைகளைச் சுத்தப்படுத்திவிடும். ஊடுருவும் தன்மையும் சூடான வீரியமும் உள்ள உப்புச் சுவையின் நன்மைகளை நீங்கள் அடைந்தாலும் அதன் அதிக அளவிலுள்ள சேர்க்கையினால் ஏற்படும் கெடுதிகளில்- தலை வழுக்கை, நரை, நாவறட்சி, உடல் எரிச்சல், மயக்கம், தோலின் மேல் பரவும் நோய்கள், வீக்கம், இசிவு எனும் கை,கால்களில் உண்டாகும் வலிப்பு நோய், பித்தம், ரத்தத்தில் கலப்பதால் ஏற்படும் ரத்த பித்த நோய் போன்றவற்றை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும்.

உணவில் நாம் பொதுவாக கடலுப்பைத்தான் பயன்படுத்துகிறோம். பொதுவாக உப்பு என்றால் இந்துப்பையே பயன்படுத்த வேண்டும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. ஆனால் இன்று அது பயன்பாட்டில் இல்லை. இந்துப்பு சிறிதளவு சுவையுடையது. ஆண்மையை வளர்ப்பது. மனதிற்கு நல்லது. வாதம், பித்தம், கபம் மூன்றையும் போக்கவல்லது. இலேசானது, சிறிதளவு உஷ்ணமுள்ளது. நாட்டு மருந்துக் கடைகளில் இந்துப்பு கிடைக்கிறது.

அதனால் உப்பின் மீதுள்ள மோகத்தை நீங்கள் முடிந்தவரை குறைத்துக் கொள்வது நல்லது. அப்படி முடியாமல் போனால் உப்பு வகைகளில் சிறந்ததான இந்துப்பை நீங்கள் பயன்படுத்தலாம். அயோடின் சேர்க்கை தேவை என்று கூறி அதை உப்பில் சேர்த்து விற்பதால் அதன் பயன்பாட்டையும் நாம் உதாசீனப்படுத்த இயலாது என்பதால் நீங்கள் அயோடின் கலந்த உப்பைச் சமையலுக்கும் சாப்பிடும்போது மேலும் உப்பு வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், இந்துப்பையும் சேர்க்கலாம்.

கடலுப்பு சீரண இறுதியில் இனிப்பாக மாறிவிடும். ஆனாலும் அது விரைவில் செரிப்பதில்லை. அதன் அதிக அளவிலான சேர்க்கை கபம் எனும் தோஷத்தைத் தூண்டுகிறது. இந்துப்பு இதற்கு எதிர்மறையான குணங்களைக் கொண்டுள்ளதால் கடலுப்பினால் ஏற்படும் கெடுதல்களைக் கூட இந்துப்பு குறைத்து விடக்கூடும். இதைக் கருத்தில் கொண்டுதான் சில ஆயுர்வேத மருந்துகளாகிய அஷ்ட சூரணம், ஹிங்குவசாதி, வைச்வாநரம் போன்றவற்றில் இந்துப்பு சேர்க்கப்படுகிறது.


No comments:

Post a Comment