ஐந்து கண்டங்களிலும் அமெரிக்கா நடத்தியிருக்கும் ஆக்கிரமிப்புகளை கேள்விப்பட்டிருப்போம். அமெரிக்க அரசின் அரசியல் மேலாதிக்கத்தை ஓரளவுக்கு புரிந்து கொண்டிருக்கும் நமக்கு அந்த ஆக்கிரமிப்பின் கருவிகளாய் செயல்படும் அமெரிக்க அதிகாரிகள், இராணுவத்தினர், சி.ஐ.ஏ உளவாளிகள் குறித்து என்ன தெரியும்? காற்றைக் கிழித்துச் சீறிப் பாயும் போர் விமானங்களில் அமர்ந்து கொண்டு ஏவுகணைகளின் பட்டனைத் தட்டும் விமானி அந்த ஒரு கணத்தில் எவ்வாறு உணர்ந்திருப்பார்? ஆக்கிரமிப்புப் போர்களை நடத்தும் அமெரிக்க அதிகாரிகள் பெரும் மனிதப் பேரழிவை உண்டாக்கப் போகும் தமது கட்டளைகளை அளிக்கும் அந்தக் கணங்களில் எவ்வாறு உணர்ந்திருப்பர்?
இவர்கள் ஒன்றும் கடைவாயில் கோரைப் பற்களும், துருத்திய நாக்கும், தலையில் கொம்பும் வைத்துக் கொண்டும் அலையும் சாத்தான்கள் அல்ல. மனிதர்கள் தான். குடும்பங்கள் இருக்கும். அழகான குழந்தைகள் இருப்பார்கள். தான் வழங்கிய உத்திரவின் பேரில் ஆப்கானில் வீசப்பட்ட தொமஹாக் ஏவுகணையினால் பிய்த்தெறியப்பட்ட குழந்தைகளின் புகைப்படத்தைப் பார்த்து விட்டு வீட்டுக்குச் செல்லும் ஒரு அமெரிக்க அதிகாரி, எப்படி தன் குழந்தைகளிடம் அன்பாகப் பேச முடிகிறது? பாடி ஆஃப் லைய்ஸ் என்ற ஹாலிவுட் திரைப்படம் அது குறித்த சித்திரத்தை வழங்குகிறது.
இயக்குனர் ரிட்லி ஸ்காட்டினால் இயக்கப்பட்டு, லியார்னாடோ டிகாப்ரியோ, ரஸ்ஸல் க்ரோ ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்க 2008-ல் வெளியான Body of Lies திரைப்படம் அமெரிக்காவை முழுமையாக விமரிசிப்பதாக சொல்ல முடியாது. ஆனால், அப்படத்தின் காட்சிகளினூடே நாம் காணும் அவர்களின் உலகம் ஒன்றை நமக்குச் சொல்கிறது - அது, அவ்வுலகத்தில் வெற்றிகரமான ஒரு மனிதனாய் வாழ விரும்பும் எவனும் முதலில் தனது மனசாட்சியைக் கழட்டியெறிந்து விட வேண்டும். ஆனால் மனசாட்சியை துறப்பது குறித்த போராட்டங்களோ, நேர்மறை விழுமியங்களோ இல்லாமல் அதுவும் கடந்து போகக் கூடிய சாதாரணமான ஒன்றாக இருந்தால்? அறம் குறித்த ஒழுக்கம் அமெரிக்க விழுமியங்களின் படி எப்படி இருக்கும்?
கதையினூடாக அதைப் பரிசீலிப்போம்
கதை:
இங்கிலாந்து மான்செஸ்டர் நகரில் அல் சலீம் (பின்லாடனின் அல்கைதா போன்ற) என்கிற தீவிரவாதத் தலைவனின் கீழ் இயங்கும் ஒரு சிறிய குழுவொன்றைப் பிடிப்பதற்கான அதிரடி நடவடிக்கையொன்றிலிருந்து படம் துவங்குகிறது. இராணுவ அதிரடிப்படை வீரர்கள் தீவிரவாதக் குழு தங்கியிருக்கும் கட்டிடத்தைச் சூழ்ந்து கொள்கிறார்கள் – இதை உணர்ந்து கொண்ட அந்தக் குழுவைச் சேர்ந்த இளைஞர்கள் வெடிகுண்டைத் தூண்டி வெடிக்கச் செய்து தம்மைப் பிடிக்க வந்த வீரர்களோடு சேர்ந்து தாமும் மரணிக்கிறார்கள்.
இதைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளின் பல்வேறு பகுதிகளில் திடீர் திடீரென்று வெடிக்கும் குண்டு வெடிப்புகளைத் தடுப்பதற்கும் அதன் சூத்திரதாரியான அல்-சலீமை வேட்டையாடுவதற்கான உத்திகளை வகுப்பதற்காகவும் சி.ஐ.ஏ(CIA)வின் உயர்நிலைக் கூட்டம் ஒன்று நடக்கிறது.
அக்கூட்டத்தில் சி.ஐ.ஏவின் முக்கிய அதிகாரியான எட்வர்ட் ஹாப்மென் (Russel Crowe) தனது சக அதிகாரிகளுக்கு மத்தியக் கிழக்கில் நிலவும் சூழல் பற்றி விளக்குகிறான்.
“இந்தப் போரின் முடிவைக் காண முடியாத களைப்பில் ஆழ்ந்துள்ளோம். நம் எதிரியும் நம்மைப் போலவே களைத்துப் போயிருப்பதாக நினைத்து நம்மை சமாதானம் செய்து கொள்ளவும் முடியவில்லை. ஏனெனில் அவர்கள் களைப்படையவில்லை. நீடித்த ஆக்கிரமிப்புப் போர் எதிராளியைப் பணியவைத்து விடும் என்று நம்புவது முட்டாள்தனம். அது நம் எதிரியை வலுவடைய வைக்கிறது. தொடர்ச்சியாக அடக்குமுறைகளுக்கு முகம் கொடுப்பது அவர்களை அந்தச் சூழலுக்குத் தகவமைத்து விடுகிறது. அவர்கள் திருப்பியடிக்கத் துவங்கி விடுகிறார்கள்”
மேலும் அவன், தாங்கள் எதிர்காலத்திலிருந்து வருவதாகவும் (நாகரீகமான உலகத்தைச் சேர்ந்தவர்கள்) தமது எதிரிகள் இறந்த காலத்தவர்கள் (அநாகரீகமான காட்டுமிராண்டிகள்) என்றும் சொல்கிறான். தொடர்ச்சியான நிறுவனமயமான ஒடுக்குமுறைகள் மட்டுமே தமது எதிரிகளை கட்டுக்குள் வைத்திருக்கும் என்கிறான். அவர்களது குரல்வளையை நெறித்துக் கொண்டிருக்கும் தங்கள் காலை ஒரு நொடி விலக்கி விட்டாலும் கூட தங்கள் உலகமே மொத்தமும் சிதிலமாகிவிடும் என்கிறான். தமது உலகம் ஒரு நாகரீக உலகமாயிருப்பதாலேயே அது எளிதான இலக்காகவும் இருக்கிறது என்றும் விளக்குகிறான்.
படத்தின் வேறு சில இடங்களிலும், ஹாப்மேன் தொலைபேசியில் கட்டளைகள் பிறப்பித்துக் கொண்டிருக்கும் போது குறுக்கீடு செய்யும் மனைவிக்கு மறுமொழியாக இதையே சொல்வான் – “நாகரீக உலகைக் காக்கும் போரில் பிஸியாக இருக்கிறேன் அன்பே”
நாகரீக அமெரிக்கா எதைக் கண்டு பயப்படுகிறது?
ஹாப்மெனின் கருத்துப்படி இந்தப் போர் அநாகரிக இசுலாமிய உலகால் நாகரீக உலகான அமெரிக்கா மேல் திணிக்கப்பட்டிருக்கிறது. சராசரி அமெரிக்கனின் நம்பிக்கையும் அதுதான். மூன்றாம் உலகைச் சேர்ந்த நம்மைப் போன்றோர் அமெரிக்காவின் போர்களை ஆக்கிரமிப்பு என்று கருதுவதற்கு நேரெதிராக அவர்கள் கருதுகிறார்கள். மதுவறை உரையாடல்களில் நீந்தியபடி இந்தக் காட்டுமிராண்டிகளை எதிர்த்து போர் செய்ய வேண்டிய கட்டாயம் குறித்து அலுத்துக் கொள்கிறார்கள்.
நேரடி ஆக்கிரமிப்பு, படுகொலைகளைவிட இந்த நாகரீக உலகின் தவிர்க்க முடியாத யுத்தம் என்பதான மேன்மக்களின் கருணைதான் அபாயகரமானது. ஈராக்கிலும், ஆப்கானிலும் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் இரத்தத்தை எந்தக் குற்ற உணர்ச்சியுமில்லாமல் இந்த ‘நாகரீக’ கருத்து துடைத்து விடுகிறது. ஹிட்லரும் கூட தனது ஆரிய இனத்தின் மேன்மை குறித்தும், காட்டுமிராண்டிகளை அழித்தோ திருத்தியோ மாற்றும் கடமை குறித்தும் இப்படித்தானே பேசினான்?
தாம் கொஞ்சம் அசந்தாலும் தமது உலகமே மாறி விடும் என்றும் தாம் மிக எளிதான இலக்கு என்கிற அச்சம் ஹாப்மெனின் வார்த்தைகளில் தொனிக்கிறது. ஒசாமா பின்லேடனைக் கொல்லும் அதிரடி நடவடிக்கைகளுக்கு முன், பாகிஸ்தானின் சிறையில் ஒரு கொலை வழக்கின் நிமித்தம் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒரு சி.ஐ.ஏ உளவாளியை எப்படியாவது திரும்ப அழைத்துக் கொள்வதில் அமெரிக்கா எந்தளவுக்கு முனைப்பு காட்டியதென்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஒருவேளை அந்த உளவாளி சிறையிலிருக்கும் போதே ஒசாமா கொல்லப்பட்டு விட்டால் அவனுக்கு சக கைதிகளால் ஏதும் பாதிப்புகள் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக அந்த உளவாளி நாடு திரும்பும் வரை அவர்கள் ஒசாமாவை கொல்லும் நடவடிக்கையை கூட ஒத்திப்போட்டார்கள். மத்திய கிழக்கில் நூற்றுக்கணக்கில் விழும் பிணங்களை விட அரிதாக விழும் ஒன்றிரண்டு அமெரிக்கப் பிணம் தோற்றுவிக்கும் அதிர்ச்சி அலைகள் அமெரிக்காவில் அதிகம்.
60-70களில் வியட்நாமிலிருந்து விமானம் மூலம் இறங்கிய அமெரிக்க பிணங்கள்தான் போர் எதிர்ப்பு போராட்டங்கள் ஏற்படக் காரணமாயிற்று. அதன் பிறகு எல்லா ஆக்கிரமிப்புகளும் நவீன போர் உத்திகளால் அமெரிக்க சேதாரங்கள் குறைக்கப்பட்டே நடக்கிறது. தான் கொல்லும் ஆயிரக்கணக்க்கான மக்கள் குறித்து அலட்டிக் கொள்ளாத ‘நாகரீக’ உலகம் தான் அதுவும் ஓரிருவர் கொல்லப்பட்டாலே முழு உலகமும் அழிந்து போவதான எண்ணத்தை தோற்றுவிக்கிறது.
பாசிஸ்ட்டுகள் தமது நிழலைக் கண்டு கூட அஞ்சுவார்கள் என்று ஒரு பழமொழி உண்டு. படுகொலை, ஆக்கிரமிப்பில் அதீத தைரியம், வீரத்தை காட்டும் இவர்களின் பின்னே அத்தகைய ஆழ்ந்ததொரு பயம் இருக்கிறது. சொல்லப் போனால் அந்த பயமே அவர்களது அநீதியான போர் குறித்த நடைமுறையிலிருந்தே எழுகிறது. அந்த வகையில் அமெரிக்காவைப் பொறுத்த வரை இந்த உலகம் என்பது எப்போதும் சந்தேகத்திற்குரியது; அபாயத்திற்குரியது; நம்பிக்கை இல்லாதது. மேற்கு உலகைத் தவிர்த்து விட்டு பார்த்தால் ஏனைய நாடுகள் அனைத்தும் அமெரிக்கர்களின் சுற்றுலாவுக்கு கூட பாதுகாப்பனதில்லை என்று அவர்களே அறிவித்திருக்கிறார்கள்.
அந்த வகையில் ‘நாகரீக’ உலகின் பரப்பு வர வர மிகவும் சுருக்கமடைந்துதான் வருகிறது. பார்த்து பயமடையும் பொருட்கள், நபர்கள், இயக்கங்களின் பட்டியலும் அதிகரித்தே வருகிறது. எனினும் இவையெல்லாம் ‘நாகரீக’ உலகின் மனசாட்சியை தட்டி எழுப்ப போதுமானதல்ல. ‘நாகரீக’ உலகம் இளைப்பாறும் வசதி நிறைந்த வாழ்க்கையும் அதன் அடித்தளமும் இருக்கும் வரை அவர்களால் அதை விட்டு வெளியே வர முடியாது.
அமெரிக்க சொர்க்கத்தில் வாழ யாருக்குத்தான் ஆசையில்லை?
படத்தின் ஆரம்பக் காட்சிகளைத் தொடர்ந்து, ஹாப்மெனின் கீழ் ஈராக்கில் கள அதிகாரியாகப் பணிபுரியும் ஃபெர்ரிஸ் (Leonardo), தனக்கு வந்த ஒரு தகவலை அடுத்து அல் சலீமின் இயக்கத்தைச் சேர்ந்த ஆள்காட்டி ஒருவனைச் சந்திக்க தனது சகாவோடு செல்கிறான். தற்கொலைப் போராளியாக மடிந்து போகவேண்டிய பட்டியலில் இருக்கும் அவன் அச்சப்படுகிறான். தான் முனைவர் பட்டபடிப்பு படித்திருப்பது குறித்து தெரிவிக்கிறான். முக்கியமாக அமெரிக்காவில் தஞ்சம் அடைந்து நிம்மதியான வாழ்க்கை வாழ ஆசைப்படுகிறான்.
‘நாகரீக’ உலகில் வாழுவதற்கு யார்தான் ஆசைப்படுவதில்லை? கல்வியோ, பொழுது போக்கோ, தொலைக்காட்சியோ அந்த உலகம் குறித்தான படிமங்களையே நிரந்தர நினைவுகளாக்குகின்றன. எனினும் அமெரிக்காவில் வாழ வேண்டும் என்பதை விட அந்த நாடு அழிக்கப்பட வேண்டும் என்று நினைப்பவர்கள்தானே அதிகம்? குறைந்தபட்சம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நாடுகளில்? ஆனால் அப்படி இல்லை என்று காட்டுவதற்காக இங்கே இசுலாமிய தற்கொலைப் போராளி ஒருவன் அமெரிக்காவில் தஞ்சம் அடையத் துடிப்பதாக காட்டப்படுகிறது.
அமெரிக்காவில் புகலிடம் அளிப்பதாக உறுதியளித்து அந்த ஈராக்கியனிடமிருந்து வேண்டுமளவிற்குத் தகவல்களைக் கறக்கிறார்கள். பின், இந்த விசயத்தைத் தனது மேலதிகாரியான ஹாப்மென்னிடம் சொன்ன போது, அவன் அந்த உறுதிமொழியை மதிக்க வேண்டிய தேவையில்லையென்றும், அவனை அப்படியே விட்டு விட்டால் அந்தக் கூட்டமே அவனைக் கொல்ல முயற்சிக்குமென்றும், அதன் மூலம் அவர்களைத் தொடரும் வாய்ப்பு கிட்டும் என்றும் சொல்கிறான். ஃபெர்ரிஸ் ஆரம்பத்தில் அளித்த உறுதிமொழியை மீறித் தனக்குத் தகவல் கொடுத்த ஈராக்கியனைக் கைவிட, அவன் தனது சகாக்களால் கொல்லப்படுகிறான்.
ஈராக்கியனிடமிருந்து கிடைத்த தகவல்களை நூல் பிடித்துக் கொண்டு ஈராக்கின் பலாட் பகுதியிலிருக்கும் ஒரு தீவிரவாத பதுங்கு முகாமுக்குச் செல்கிறார்கள் ஃபெர்ரிஸும் அவனது ஈராக்கைச் சேர்ந்த கூட்டாளியும். அங்கே நடக்கும் சண்டையின் இறுதியில் அந்த முகாம் அழிக்கப் படுகிறது – ஃபெர்ரிஸின் கூட்டாளியும் கடுமையாக பாதிப்படைகிறான். அந்த நேரத்தில் அங்கே வரும் மீட்புப் படை, அதற்கு முன்னதாக முகாமிலிருந்து சில சி.டிக்களைக் கைபற்றியிருந்த ஃபெரிஸ்ஸை மட்டும் காப்பாற்றுகிறது – குற்றுயிரும் குலை உயிருமாகக் கிடக்கும் அவனது ஈராக்கிய சகாவை சாக விட்டு விட்டுத் திரும்புகிறது.
உலங்குவானூர்தியில் ஃபெர்ரிஸைக் கிடத்தும் அமெரிக்க அதிரடிப்படை வீரன் தனது தலைமையகத்திற்கு இவ்வாறு தகவல் அனுப்புகிறான் “உளவுத் தகவல்கள் பாதுகாக்கப்பட்டது”
சி.ஐ.ஏவின் பலம் வெற்றியை ஈட்டுவதில்தான், நேர்மையான வழிமுறையில் அல்ல!
அங்கே கிடைத்த உளவுத் தகவல்களின் அடிப்படையில் ஃபெர்ரிஸ் ஜோர்டானில் இருக்கும் இன்னொரு இரகசிய முகாமைக் கண்காணிக்க அனுப்பப்படுகிறான். இதற்கிடையே பலாடில் கொல்லப்பட்ட தனது சகாவின் நிலைமைக்காக ஃபெர்ரிஸ் தனது மேலதிகாரி ஹாப்மெனிடம் முறையிடுகிறான். கொல்ல்ப்பட்டவனது குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்குமாறு கோருகிறான். ஹாப்மெனோ, அதைப் பற்றி கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் பதிலளிக்கிறான். அதை ஃபெர்ரிஸ் கேள்விகள் ஏதுமின்றி ஏற்றுக் கொள்கிறான்.
நேரடிக் களத்தில் இருக்கும் ஃபெர்ரிஸ் இப்படி உள்ளூர்வாசிகளின் துணை கொண்டு இயங்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஆனாலும் அவர்களை ஒரு தூக்கியெறியப்பட வேண்டிய கறிவேப்பிலை மாதிரி பயன்படுத்துமாறு ஹாப்மென் கோருகிறான். ஆரம்பத்தில் கொஞ்சம் முரண்பட்டாலும் ஃபெர்ரிஸ் அதை ஏற்கிறான். இது மேலதிகாரியை பின்பற்றும் அதிகார நிறுவன வழிமுறையா இல்லை மூன்றாம் உலக மனித உயிரின் மதிப்பற்ற தன்மையை குறிக்கிறதா என்று நமக்குத்தான் கேள்வி எழும். இரக்கமற்ற சி.ஐ.ஏ மேலதிகாரியாக ஹாப்மென் சித்தரிக்கப்பட்டாலும் அந்த இரக்கமின்மை ‘நாகரீக’ உலகைக் காப்பாற்றும் கடமையுணர்விலிருந்து வருவதாகவே ஒரு அமெரிக்கன் நினைக்க வாய்ப்புண்டு.
ஃபெர்ரிஸை ஜோர்டானுக்கு அனுப்பும் ஹாப்மென், அங்கே ஃபெர்ரிஸையும் நம்பாமல் அவனது நடவடிக்கைகளுக்கு இணையான வேறு நடவடிக்கைகளை அவனுக்கே தெரியாமல் செயல்படுத்துகிறான். ஜோர்டான் உளவுத் துறையுடன் ஃபெர்ரிஸ் சேர்ந்து இயங்க விரும்புகிறான். ஏனெனில் உள்ளூர்வாசிகளின் உதவி கொண்டுதான் மத்திய கிழக்கில் சிறப்பாக இயங்க முடியுமென்பது அவனது நிலை. ஆனால் ஹாப்மென் அதை ஏற்காமல் தனியாக உத்தரவு போட்டு நடைமுறைப்படுத்துகிறான். இதனால் விளையும் குழப்பத்தில் ஃபெர்ரிஸின் முயற்சிகள் தோற்றுப் போகின்றன.
இந்தக் குறுக்கீடுகளால் ஒருவேளை ஃபெர்ரிஸ்ஸுக்கு ஆபத்தை உண்டாக்கி விட்டிருக்கலாம் என்கிற நிலையில் இது பற்றி தனது அதிகாரியான ஹாப்மெனிடம் ஆத்திரத்துடன் விளக்கம் கோருகிறான். அதற்கு ஹாப்மெனோ சிறிதும் அலட்டிக் கொள்ளாமல், தமது ஸ்தாபனமே (சி.ஐ.ஏ) உடனடி வெற்றிகளை ஈட்டும் இலக்கில் உள்ள நிறுவனமென்றும், எனவே அப்படியான வெற்றியை அடையத் தேவையான எல்லா நடவடிக்கைகளும் சரியானதே என்றும் சொல்கிறான். வேலை நடந்தாக வேண்டும். அது எப்படி நடக்கிறது என்பதைப் பற்றிய கவலையில்லை. நம்பிக்கை, தோழமை, பொய்யுரைக்காதிருத்தல், நேர்மையான அணுகுமுறை இவையெல்லாம் சி.ஐ.ஏ எனும் ‘உலக அமைதி’க்காக வேலை செய்யும் மாபெரும் நிறுவனம் வைத்திருக்க முடியாத விழுமியங்கள் என்பது ஹாப்மெனது நிலை.
ஃபெர்ரிஸோ நேரடி களப்பணியில் இருப்பதால் இத்தகைய விழுமியங்களை வைத்திருந்தால்தான் உள்ளூரில் நம்பிக்கை ஏற்படுத்தி வேலைகளை சாதிக்க முடியும் என்பது அவனது நிலை. ஆனால் உலகம் முழுவதும் சி.ஐ.ஏ என்பது ஹாப்மெனது அணுகுமுறையில்தான் செயல்படுகிறது. சி.ஐ.ஏவின் உள்ளூர் ஏஜெண்டுகள் கூட அமெரிக்காவின் அடிமைத்தனத்தை ஏற்றுக் கொண்டே வேலை செய்கிறார்கள். யாரும் சுயமரியாதையோடு சி.ஐ.ஏவிற்காக வேலை செய்ய முடியாது. நமது பிரதமர் மன்மோகன் சிங்கின் அமெரிக்க அடிமைத்தனத்தை இங்கே ஒப்பிட்டு பாருங்கள். இந்தியாவின் இறையாண்மையைக் காப்பாற்றிக் கொண்டுதான் அமெரிக்காவோடு உறவு வைத்திருக்க முடியும் என்று அவர் கனவில் கூட கருதமாட்டாரே?
தமது வேலைக்காக யாரையும் பலிகொடுக்கலாம் என்பதே அடிப்படை சித்தாந்தம் என்று நாசூக்காக ஃபெரிஸ்ஸுக்குப் புரியவைக்கிறான் ஹாப்மென்.
நாகரீக உலகத்தைக் காப்பதற்காக நாகரீகமற்ற காட்டுமிராண்டுகளோடு சண்டையிடும் இரக்கமற்ற யுத்தம் என்று ஹாப்மென் வருணிக்கும் இந்த சண்டையில் தனது உடல் உயிர் என்று அனைத்தையும் எந்தக் கேள்விக்கும் இடமின்றி அர்ப்பணிக்கும் படத்தின் நாயகனான ஃபெரிஸ் தனது மேலதிகாரியின் இந்த விளக்கத்தை ஏற்று மௌனமாகிறான்.
ஹாப்மென் – பெர்ரிஸ் முரண்பாடு வழிமுறையில்தான், நோக்கத்தில் அல்ல!
படம் நெடுக ஹாப்மெனுக்கும் ஃபெர்ரிஸுக்கும் இடையே நடைமுறை சார்ந்து கடும் முரண்பாடு இருப்பதாக காட்டப்பட்டிருந்தாலும், ஒட்டுமொத்த நலன்களை ஒட்டிய செயல்பாடுகள் என்று வரும் போது அந்த முரண்பாடுகள் முற்றி வெடிக்காமல் நமுத்துப் போய் விடுகின்றன. எதார்த்த நிலைமைகளை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கப் பெற்ற ஃபெர்ரிஸ், தான் செய்யவிழைவதைக் கொஞ்சம் நெகிழ்வுப் போக்கோடும் விட்டுக் கொடுப்புகளோடும் செய்து முடிப்பதே புத்திசாலித்தனம் என்கிறான் – ஹாப்மெனோ ஈவு இறக்கம் ஏதுமின்றி வலுக்கட்டாயமாகச் செய்து முடிக்க வேண்டும் என்கிறான்.
ஆனால், இருவரும் ஒன்று படும் புள்ளியென்பது ஏகாதிபத்திய நலன் என்பதால் இருவருக்குள்ளும் வரும் முரண்பாடுகளும் அதையொட்டிய வாக்குவாதங்களும் ஃபெர்ரிஸ் பணிந்து போவது என்கிற அளவிலேயே முடிந்து போகிறது. குறைந்தபட்சம் எதார்த்த நிலைமைகளை நேரில் காண்பதால் தனக்கு உண்டாகும் மனவுளைச்சலைத் தடவிக் கொடுப்பதற்குக் கூட ஃபெர்ரிஸின் ஆத்திரமான வாக்குவாதங்கள் பயனளிக்காமல் போகிறது.
தனக்கு ஆதாயம் ஏற்படும் என்றால் தனது சொந்த மக்களாகவே இருந்தாலும் கூட தூக்கியெறியத் தயங்காத பண்பு தான் முதலாளித்துவத்தின் சமூகப் பண்பு. உறவுகள், பாச நேசங்கள் உட்பட சகலத்திற்கும் ஒரு விலை உண்டு. நேற்றுவரை சிரித்துப் பேசிப் பழகிய தனது சக ஊழியனுக்கு திடீரென்று வேலை நீக்க உத்தரவான ‘பிங்க்’ சிலிப் அளிக்கப்பட்டு வீட்டுக்குத் துரத்தப்பட்டதைக் கண்டும் கூட அந்த அநீதிக்கு எதிராகப் போராடாமல் தன்னுடைய வேலை மிஞ்சியதா என்று பார்த்துக் கொண்டு போகும் கார்ப்பரேட் நிறுவன ஊழியரின் உணர்வும் ஹாப்மென் / ஃபெர்ரிஸின் உணர்வும் ஒத்துப் போகும் இடம் இது தான். முதலாளித்துவ ஆட்ட விதிகளின் முக்கியமானதும் முதலாவதுமான தனிநபர்வாதம், போட்டிகளில் இரக்கமற்று முன்னேறும் சுயநலம் என்பவற்றிலிருந்து தான் இவையனைத்தும் நியாயப்படுத்தப்படுகிறது. முன்பு தமக்குத் தகவல் அளித்து உதவ முன்வந்த ஈராக்கியனைக் கைவிட நேர்ந்த சந்தர்பத்திலாகட்டும், இப்போதும் இதற்குப் பின் வரும் வேறு சந்தர்பங்களில் ஃபெர்ஸைக் கைவிட நேரும் சந்தர்பங்களிலாகட்டும், ஹாப்மெனை இயக்குவது இந்த உணர்ச்சி தான்.
ஹாலிவுட்டின் மாறுபட்ட யதார்த்தமான காதல்?
இதற்கிடையே, அல் சலீம் கும்பலைத் தேடி ஜோர்டானுக்குச் செல்லும் ஃபெர்ரிஸ், அங்கே ஆயிஷா என்கிற நர்ஸை சந்திக்கிறான். பலவருடங்கள் குடும்பத்தை மறந்து மத்திய கிழக்கில் அலைந்து திரிந்து கொண்டிருந்ததால் அவனது திருமணம் ஏற்கனவே முறிந்து போயிருந்த நிலையில், இந்த புதிய உறவு அவனது மனதுக்கு ஆறுதலாய் இருக்கிறது. வழக்கமான ஹாலிவுட் பட நாயகர்கள் நாயகிகளை அவர்கள் எந்த நாட்டவராக இருந்தாலும் நேரடியாக படுக்கையறைக்கு கொண்டு சென்று விடுவார்கள். இங்கே அது இல்லை. ஒரு அரபுப் பெண்ணின் யதார்த்தமான மரியாதையான நேசிப்பை இயக்குநர் அப்படியே ஏற்றுக் கொண்டிருப்பது ஆச்சரியமளிக்கிறது. ஒரு வேளை ஃபெர்ரிஸின் பாத்திரத்தை இயல்பாக காட்டவேண்டியிருப்பதற்கு கூட இது உதவியிருக்கலாம். போகட்டும்.
ஏற்கனவே அபு சலீமைப் பிடிப்பதற்காக தீவிரமாக முயற்சி செய்து வரும் ஜோர்டானிய உளவுத் துறைக்கு ஃபெர்ரிஸின் இந்தக் காதல் தெரியவருகிறது. ஆயிஷாவைத் தீவிரவாதிகள் கடத்திச் சென்றது போல் ஒரு நாடகத்தை ஜோர்டான் உளவுத்துறையே நடத்துகிறது. தனது காதலியைக் காப்பாற்ற ஃபெர்ரிஸ் தன்னையே பணயம் வைக்கிறான் – அபு சலீம் கும்பலிடம் சிக்கிக் கொள்கிறான். இறுதிக் காட்சியில் அவனைக் கொல்ல தீவிரவாதிகள் முயல்கிறார்கள். ஆனால், அதற்குள் குறுக்கிடும் ஜோர்டானிய உளவுத்துறை ஃபெர்ரிஸைக் காப்பாற்றுகிறது.
ஃபெரிஸ் ஒரு பாலைவனத்தின் நடுவே தன்னந்தனியே நிற்கிறான். அப்போது ஆயிஷாவைக் கடத்திய தீவிரவாதிகள் வந்து அவனை அழைத்துச் செல்வதாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் இருக்கும் ஹாப்மென் தனது ஆள் அம்பு சேனைகளோடு கணினித் திரையின் முன் அமர்ந்து சாடிலைட் உதவியுடன் நேரடியாக அந்தக் காட்சியைப் பார்க்கிறான். ஃபெரிஸைப் பொறியாக வைத்து தீவிரவாதிகளைத் தொடர்வது தான் ஹாப்மெனின் திட்டம். ஆனால், ஃபெரிஸை அழைத்துப் போக வரும் தீவிரவாதிகளோ ஐந்தாறு ஒரே மாதிரியான கார்களில் வந்து ஃபெரிஸ் நிற்கும் இடத்தை ஒரு வட்டமாகச் சுற்றுகிறார்கள். அதனால் எழும் புழுதிப் புயல் மேலே சாட்டிலைட்டின் கண்களை மறைக்க, அதனூடே ஃபெரிஸை அழைத்துச் செல்கிறார்கள். எந்தக் கார் அவனைக் கொண்டு செல்கிறது என்று தெரியவில்லை. எதாவது ஒரு காரைத்தான் சேட்டிலைட் பின்தொடர முடியும் என்பதால் குழப்பம் வருகிறது.
செல்பேசியில் கொடூரமான கட்டளைகள்! குடும்பத்தினரிடம் அன்பான தருணங்கள்!
தமது அதிநவீன உளவுக் கருவிகள் பல்லிளித்து விட்ட நிலையில் ஹாப்மென் ஃபெரிஸை சுலபமாகக் கைகழுவி விட்டு வீட்டுக்குக் கிளம்பிவிடுகிறான். தனது பணியில் கறாராகவும் இரக்கமற்றும் நடந்து கொள்ளும் ஹாப்மெனுக்கு அன்பான ஒரு குடும்பமும் அழகான குழந்தைகளும் இருக்கிறார்கள். ஒரு கையில் செல்போனில் தனது உத்தரவுகளை வழங்கிக் கொண்டே இன்னொரு கையால் தனது செல்ல மகளை அணைத்து முத்தமிடுகிறான். ஒரு நேர்ப்பேச்சில் ஹாப்மெனுடன் உரையாடும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்தால் அவனது கனிவான பார்வையையும் மிருதுவான பேச்சையும் வைத்துக் கொண்டு அவனைப் போல் ஒரு உத்தமர் உலகிலேயே இருக்க முடியாது என்று நீங்கள் சத்தியம் செய்யக் கூடும். ஆனால், அந்த கனிவும், மென்மையும் தான் சதித்தனமான நடவடிக்கைகளின் மறுபக்கங்களாக இருக்கின்றன.
போர்கள் என்பதைப் பற்றி நீங்களும் நானும் கொண்டிருக்கும் அதே புரிதலை அவர்கள் கொண்டிருப்பதில்லை. பொருளாதார நோக்கில் தமது வியாபாரத்திற்கு பயன்படக் கூடிய ஒரு பொருளியல் நிகழ்வு என்பதே ஏகாதிபத்தியத்தின் புரிதல். அதில் ஏற்படும் மரணங்கள் வெறுமனே நடக்கும் சாதாரண நிகழ்வுகள் தாம். எனவே தான் ஒரு தொழில் நேர்த்தியுடனும் உணர்ச்சியற்றும் வெகு இயல்பாக தமது நடவடிக்கைகளை அவர்களால் முன்னெடுத்துச் செல்ல முடிகிறது.
கசாப்புக் கடையில் ஆடுகளையும் கோழிகளையும் கழுத்தைத் திருகிக் கொல்லும் ஒருவருக்கு அது எப்படி தொழில் ரீதியிலான கடமை என்பதாகத் தெரிகிறதோ அப்படியே தமது போர்களின் காரணமாக சக மனிதர்கள் படும் பாடுகளும், அவர்கள் அனுபவிக்கும் சித்தரவதைகளும், மரணங்களும், இழப்புகளும் அமெரிக்க அதிகாரிகளுக்கு கடமையாகத் தெரிகிறது. அந்தக் கடமையை இடையூறுகளின்றி நிறைவேற்றுவதையே நியாயம் என்கிறார்கள். ஏகாதிபத்திய நலன்களுக்கு பங்கம் ஏற்படுத்தும் தடைகளை இவ்விதமான வழிமுறைகளில் களைந்து கொள்ளும் ‘கடமைகளை’ ‘நியாயமாக’ செயல்படுத்தினால் கிடைப்பது தான் “நீதி”.
மனிதர்கள், உறவுகள், உயிர்கள் என்பதைப் பற்றியெல்லாம் நாம் கொண்டிருக்கும் மதிப்பீடுகளிலிருந்து ஏகாதிபத்திய அறிவாளிகளின் மதிப்பீடுகள் முற்றிலும் வேறானது. முதலாளித்துவ உலகின் இரக்கமற்ற விதிகள் அம்மனிதர்களை எப்போதோ இதயமற்ற இயந்திரங்களாக்கி விட்டன.
ஹாப்மெனுக்கோ ஃபெரிஸுக்கோ தமது செயல்பாடுகளும் அதனூடாய் எழும் முரண்பாடுகளும், அச்செயல்பாட்டை ஒட்டி நிகழும் கொலைகளும் பெரியளவில் உறுத்தாத நிகழ்வுகளாகச் சுருங்கிப் போவதற்குக் காரணம் அவர்கள் முதலாளித்துவத்தின் ஆட்ட விதிகளுக்கு உட்பட்டே அந்த விளையாட்டை விளையாடுகிறார்கள் என்பதே. இதில் ஹாப்மெனுக்கும் ஃபெர்ரிஸுக்குமான முரண்பாடுகள் என்பது கழுத்தைக் கரகரவென்று அறுப்பதா – இல்லை குடிப்பதற்கு கொஞ்சம் தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தி சத்தமில்லாமல் தண்ணீரில் முக்கிக் கொன்று விடுவதா என்பதில் தான்.
‘காட்டுமிராண்டிகளாகிய’ நாம் ‘நாகரீக’ உலகின் மீது கொள்ள வேண்டிய உணர்ச்சி எது?
விளைவு என்னவாய் இருக்க வேண்டும் என்பதில் அவர்களிருவரும் தெளிவாகவே இருக்கிறார்கள். மட்டுமல்லாமல் அந்த விளைவின் மூலம் எழும் எதிர்விளைவை எவ்வாறு பார்ப்பது என்பதிலும் மிகத் தெளிவாகவே இருக்கிறார்கள். தனது காதலியின் சகோதரியைச் சந்திக்கச் செல்லும் ஃபெர்ரிஸ், தன்னை ஜோர்டானிய மன்னரின் அரசியல் ஆலோசகர் என்று அறிமுகம் செய்து கொள்கிறான். அதற்கு அவள் மத்திய கிழக்குப் போர்களுக்கு முன் அரசர் உங்களிடம் ஆலோசனை கேட்டாரா என்று கேட்கிறாள். ஆயிஷாவின் சகோதரியான அப்பெண்மணி ஈரான் – ஈராக் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஈரானியப் பின்னணி கொண்டவள். அந்தத் தருணத்தின் சங்கடத்தைப் புரிந்து கொள்ளும் ஃபெர்ரிஸ், தானும் ஈராக்கில் நிலவும் சூழ்நிலைமைகளால் வருத்தமுறுவதாக சொல்லித் தப்பிக்கப் பார்க்கிறான். உடனே சூழ்நிலைமை என்று நீங்கள் குறிப்பிடுவது எதை என்று அப்பெண் கேட்கிறாள். ஒரு தயக்கத்திற்குப் பின் பதிலளிக்கும் ஃபெர்ரிஸ், அங்கே ஈராக்கிய போலீஸ் தாக்கப்படுவதும், மக்கள் தற்கொலைப் போராளிகளாக முன்வருவதையுமே அவ்வாறு குறிப்பிட்டதாகச் சொல்கிறான்.
எதிர்விளைவு குறித்துப் பேசும் ஃபெர்ரிஸ், அதனை உண்டாக்கிய விளைவான தமது அரசின் ஆக்கிரமிப்புப் போர் குறித்துப் பேச மறுக்கிறான். அது நாகரீகத்தை நிலைநாட்டும் ஒரு நடவடிக்கையாகவே ஃபெர்ரிஸ்ஸும் கருதுகிறான். ஆனால், ஹாப்மெனைப் போல் அல்லாது எதார்த்தத்தோடு நேருக்கு நேராக நிற்க வேண்டிய கட்டாயத்தில் ஃபெர்ரிஸ் இருப்பதால் அவனது நடவடிக்கைகள் ஒரு நெகிழ்வுப் போக்கோடு இருக்கிறது.
ஒரே நோக்கத்தின் பாற்பட்ட கறார்த்தன்மையும் நெகிழ்வுத்தன்மையும் ஒரு கட்டத்திற்கு மேல் முரண்பட்டு எதிர்த்து நிற்க முடியாது. இறுதிக் காட்சியில் காதலிக்காக தனது வேலையைத் துறக்க முடிவு செய்யும் ஃபெர்ரிஸ், அதற்கும் முன் தனது நண்பனைப் பறிகொடுத்த போதும் சரி – தனது உயிருக்கே ஆபத்து வந்த தருணங்களிலும் சரி, ஹாப்மெனின் இறக்கமற்ற அணுகுமுறையோடு சமரசமாகவே செல்கிறான். பிங்க் சிலிப் வாங்கிய ஐ.டி தமிழன் இத்தனை வருடங்களாக தான் வருந்தி உழைத்த நிறுவனம் தன்னைக் கைவிட்டதையும் அதனால் தான் நிர்கதியாய் நிற்க நேர்ந்ததையும் அநீதி என்பதாகப் புரிந்து கொள்வதில்லை – அதை எதிர்த்து போராடவும் முன்வருவதில்லை. அதை மௌனமாக ஜீரணித்துக் கொண்டு வேறு ஒரு நிறுவனத்தில் வேலை கிடைக்குமா என்று ஒதுங்கிப் போகிறான் – ஃபெர்ரிஸ் தனது வேலையை விடுத்து ஆயிஷாவைத் தேடி ஒதுங்கிப் போவதைப் போல.
ஊழல்படிந்த மேற்குல முதலாளித்துவத்தின் அரசியலை ஃபெர்ரிஸ் புரிந்து கொண்டது உண்மையா?
தீவிரவாதிகளின் பிடியில் கொல்லப்பட இருக்கும் ஃபெர்ரிஸை ஜோர்டானிய உளவுத்துறை காப்பாற்றுகிறது. அதிநவீன தொழில்நுட்பத்தைக் கொண்ட சி.ஐ.ஏவின் வழிமுறைகளைவிட மரபு ரீதியாக மனிதர்களின் திறனை நம்பி செயல்படும் ஜோர்டானிய உளவுத் துறை வெற்றிபெறுகிறது. இது உண்மையென்றாலும், மக்களிடம் பிடிப்போ, ஐக்யமோ, ஒன்றிணைவோ இல்லாத எத்தகைய உளவு அமைப்பும் அவை எத்தகைய வழிமுறைகளைக் கொண்டிருந்தாலும் இறுதியில் வெற்றி பெறுமா என்பது ஐயமே. நோக்கத்தில் பிழை இருக்கும்போது வழிமுறைகளின் திறன் மட்டும் என்ன செய்துவிடும்?
இறுதிக்காட்சியில் அல்சலீமோடு உரையாடும் பெர்ரிஸ் ஆச்சரியமூட்டும் வசனம் ஒன்றைப் பேசுகிறான். ஊழல் படிந்த மேற்குலகின் முதலாளிகளுக்கும், வாகாபி ஷேக்குகளின் நிதியுதவியால் எழுந்திருக்கும் இசுலாமிய மதவாதத்திற்கும் எந்த வேறுபாடும் இல்லை என்று அவன் பேசும் போது கொஞ்சம் அதிசியமாகத்தான் இருக்கிறது. அவனும் கூட அந்த ஊழல் படிந்த முதலாளிகளின் நலனுக்காக செயல்படும் சி.ஐ.ஏவின் ஊழியன்தான் என்ற நினைப்பு நமக்கு வருவது போல அவனுக்கு வருகிறதா என்று சொல்ல முடியவில்லை.
தனது சகாக்கள் கைவிடப்பட்டு அதனால் கொல்லப்பட்ட போதெல்லாம் சில ஆத்திரமான கேள்விகளைக் கொண்டே உறுத்தும் தனது மனசாட்சியை ஆற்றுப்படுத்திக் கொள்ளும் ஃபெர்ரிஸ், அதே போன்றதொரு நிலை தனக்கே ஏற்படும் போது தான் அதற்கொரு அடையாள எதிர்ப்பை பதிவு செய்கிறான். ஒரு கொடும் கொலைக் கருவியாக உலகமெங்கும் வியாபித்திருக்கும் சி.ஐ.ஏவையும் அதனை இயக்கும் மூளையான ஏகாதிபத்தியத்தையும் தனது சொந்த வாழ்வின் அனுபவத்தினூடாக மட்டுமே விளங்கிக் கொள்வதன் இழிந்த நிலை தான் அதனை ஏற்றுக் கொண்டு விலகிச் செல்லும் முடிவுக்கு அவனைத் தள்ளுகிறது. மாறாக, இதன் முழுமையான பரிமாணத்தை அதன் நாசாகாரச் செயல்கள் உண்டாக்கிய சமூக விளைவிலிருந்தும் அந்த விளைவினால் உலகெங்கும் சீரழிந்து போயிருக்கும் மனித வாழ்க்கையின் பின்னணியில் இருந்தும் தனது எதிர்ப்பை ஒரு போராட்டாமாகவே அவனால் முன்வைத்திருக்க முடியுமா?
அரசியல் சமூக நிலைமைகள் சொல்லிக் கொடுக்காத விசயத்தை நேரடி அனுபவத்தின் மூலம் அவன் கற்றுக் கொண்டானா என்று நாம் ஊகித்தறிய முடியவில்லை. ஆனாலும் அவன் சி.ஐ.ஏவிலிருந்து விலகித்தான் செல்லுகிறான். அவனை “buddy” என்று அன்பாக அழைக்கும் ஹாப்மெனும் கூட ஒரு உளவாளி அதிகபட்சம் இவ்வளவுதான் பங்களிக்க முடியும் என்பது போல எந்த வேதனையோ, உணர்ச்சியோ அற்று விடை கொடுப்பதிலிருந்து அறிய முடிகிறது. அவன் போனாலென்ன, அடுத்த பலிகடாக்கள் மந்தையிலிருந்து வராதா என்ன?
ஆனால் நாம் இந்தப் படத்தை அப்படி உணர்ச்சியற்று அதாவது தொழில் நுட்ப ரீதியில் மட்டும் பார்த்து இரசிக்க முடியாது. ஏனெனில் நாமெல்லாம் அந்த ‘நாகரீக’ உலகால் அடிமைப்படுத்தப்பட்டிருக்கும் ‘காட்டுமிராண்டிகள்’. விடுதலை உணர்வுள்ளவர்கள் இந்த படத்தை பாருங்கள், எழுச்சி கொள்ளுங்கள்!
படத்தை நேரில் பார்த்தது போன்ற உணர்வு ..........நன்றி
ReplyDelete