Sunday, 5 June 2011

கோடை பிரச்சனை...தவிர்க்கும் வழிமுறைகள்..

வெயில்காலத்தில் வரும் பிரச்சினைகள் பற்றியும், அதை சமாளிக்க நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய வழிமுறைகள், உட்கொள்ள வேண்டிய உணவு வகைகள் பற்றியும் பார்ப்போமா...

வெயில் காலத்தில் வீட்டில் இருக்கும்போது சிலருக்கு எந்த வித பிரச்சினையும் இருக்காது. ஆனால் வீட்டை விட்டு வெளியில் கிளம்பி வெயிலில் அலுவலகத்தை அடையும் சிலருக்கு தோலில் சற்று அரிப்பு ஏற்படும். சில நேரங்களில் திட்டுத்திட்டாகவும் தோலில் அழற்சி ஏற்படும். இதற்கு 'போட்டோ அலர்ஜி' அல்லது 'போட்டோ டெர்மடைட்டிஸ்' அதாவது 'சூரிய ஒளி ஒவ்வாமை' என்று பெயர். அடுத்து, சூரிய கொப்புளம் என்கிற தோல் பாதிப்பு நிலையும் ஏற்படும். சூரிய ஒளியில் இருக்கின்ற புற ஊதாக் கதிர்கள் தான், இந்த பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இந்த புற ஊதாக் கதிர்கள் கோடைகாலத்தில் மட்டும் தான் என்றில்லை குளிர் காலத்திலும் இருக்கும். ஆனால் அதிக பாதிப்பு கோடைகாலத்தில் என்பதால் அதிக கவனமாக இருக்க வேண்டும். சில சமயங்களில் இந்த புற ஊதாக் கதிர் பாதிப்பு புற்று நோய் வரை கூட அழைத்துச் செல்லும் அபாயம் உண்டு.

அடுத்து, கோடை காலத்தில் அதிகமாகத் தோன்றுவது கட்டி, அக்கி, சொறி, சிரங்கு மற்றும் வேர்க்குரு ஆகியவைதான். சொறி, சிரங்கு போன்றவற்றில் நீர் வடிந்து சில சமயங்களில் சீழ் பிடிக்கும் வாய்ப்பு அதிகம். இந்த கிருமிகள் உடலில் உள்ள மற்ற உறுப்புகளையும் பாதிக்கும். மேலும் இந்த கிருமிகள் ரத்தத்தில் கலந்துவிட்டால் சில சமயங்களில் சிறுநீரகத்தைக் கூட தாக்கிவிடும். எனவே சொறி, சிரங்குதானே என்று அலட்சியமாக இருந்துவிடக் கூடாது. சில நேரங்களில் அழுத்தமான, செயற்கை நூலில் தயாரித்த ஆடைகளை அணிவதால் வியர்வை வெளியேறாமல் போய் விடுகிறது. இந்த வியர்வை அதிகரித்து ஆடைகளில் காற்று மூலம் தூசி படிந்து காளான் கிருமிகளால் படர்தாமரை போன்ற நோய்கள் தோன்றும். இவை பெரும்பாலும் தொடைகளுக்கு இடையிலும், பெண்களுக்கு மார்புக்குக் கீழேயும் தோன்றி அரிப்பை உண்டாக்கும். ஆகவே, தோலைப் பாதுகாக்க வேண்டும் என்றால் வருடம் முழுவதும் பாதுகாப்பாக இருப்பது நல்லது. அது முடியவில்லை என்றால் குறைந்தபட்சம் கோடை காலத்திலாவது கவனாக இருக்க வேண்டும். சூரிய ஒளி ஒவ்வாமை உள்ளவர்கள் முழுக்கை, முழுக்கால் சட்டை அணிவது நல்லது. வெளியில் செல்லும்போது குடை பிடிக்கலாம்; தொப்பி அணியலாம்.

சூரிய கொப்புளங்கள் வராமல் தடுக்க புற ஊதாக் கதிர்களில் 'ஏ', 'பி' என்று இரண்டு வகை உண்டு. இரண்டுமே தோலை பாதிக்கும். ஆகவே, 'ஸன்ஸ் கிரின் லோஷன்' பயன்படுத்துவது நல்லது. அந்த லோஷன்களில் 'ஜிங்க் ஆக்ஸைடு' மற்றும் 'டைட்டானியம் டைஆக்ஸைடு' இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும். இந்த ஸன்ஸ் கிரின் லோஷன்கள் அதிகபட்சம் நான்கு மணி நேரம்தான் பயன் அளிக்கும். இந்த இடைவெளியில் மறுபடியும் அவற்றை உபயோகிப்பது நல்லது. தினமும் காலையிலும், மாலையிலும் குளிர்ந்த நீரில் குளிப்பதன் மூலம் சொறி, சிரங்கு, வேர்க்குருவை தடுக்க முடியும். சொறி, சிரங்கால் பாதிக்கப்பட்டவர்கள் தனியாக சோப்பு மற்றும் டவல்களை பயன்படுத்துவது நல்லது. வேர்க்குருவால் பாதிக்கப்பட்டவர்கள் குளித்துவிட்டு வேர்க்குரு பவுடரை உடம்பு முழுவதும் பூசிக்கொள்வது நல்லது. காளான் போன்ற படர்தாமரை நோய்களை தவிர்க்க இறுக்கமான ஆடைகளை அணியாமல் மெல்லிய கைத்தறி ஆடைகளை அணிவதே நல்லது. ஹோமியோபதி மருத்துவத்தில் முகப் பூச்சிற்கும், வெயில் கால தோல் அரிப்பை தடுக்கவும், காக்கவும் நிறைய 'கிரீம்கள்' உள்ளன. இவை தோலை வியர்வையின்றி பாதுகாக்கும். 'பொட்டான்கி' போன்ற மருந்துகளும், பிற பயோகெமிக் கலவை மருந்துகளும் தோலுக்கு ஏற்ற மிகச் சிறந்த ஹோமியோபதி மருந்துகள் என்றால் அது மிகையில்லை.

சிறுநீர் பிரச்சினைகள்!

கோடை காலத்தில் வரும் 'நீர் சுளுக்கு' அல்லது 'நீர்க் கடுப்பு' மற்றும் சிறுநீரகக் கல் வியாதிகளை பற்றி தெரிந்துகொள்வோம்.

நாம் கோடையில் தேவையான அளவில் தண்ணீர் குடிக்காமல் இருப்போமானால் ஏற்கனவே நம் உடலில் இருக்கும் தண்ணீர் வியர்வையாகி அதிக அளவில் வெளியேறும்போது சிறு நீர் கழிக்கும் அளவு குறையும். அதுமாதிரி கோடைகாலத்தில் மிக அதிக நேரம் வெயிலில் வேலை செய்பவர்கள் சரியான அளவு நீர்ச் சத்து ஆகாரங்களை குடிக்காமல் இருப்பதாலும் சிறுநீர் வெளியேறும் அளவு குறையும். இதனால் சிறுநீர் நீர்மம் என்கிற முந்தைய நிலையைவிட சற்று அடர்த்தி அதிகமாகி சற்று அடர் மஞ்சள் நிறமாக வெளியேறும். மேலும் பலர் கோடைகாலங்களில் ரயில் மூலமாகவோ, பேருந்து மூலமாகவோ நெடுந்தூரப் பயணம் மேற்கொள்கிறார்கள். இந்த மாதிரியான நேரங்களில் நாம் நெடுநேரம் சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைப்பதன் மூலம் சிறுநீர் கடுப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இந்த மாதிரியான நேரங்களில் சிறுநீர் பாதையிலுள்ள கிருமிகள் பன்மடங்காகப் பெருக வாய்ப்புள்ளது. இது ஆண்களைவிட பெண்களுக்கு அதிக அளவில் வருகிறது. பெரும்பாலும் 'ஈகோலை' என்கிற பாக்ட்டீரியாவால் இந்த 'நீர் சுளுக்கு நோய்' வருகிறது. இந்த நோய்க்கான அறிகுறிகள் என்ன? அடிக்கடி சிறுநீர் கழிக்கலாம் போல் உணர்வு வரும். அப்படி முயற்சி செய்யும்போது எரிச்சல் அல்லது கடுப்புடன் சிறு நீர் வெளியேறும். லேசாக அடிவயிற்றில் வலியும் ஏற்படும். குழந்தைகள் தன்னை அறியாமல் அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள். நோய் அதிகமாகும்போது சிலருக்கு பயங்கர குளிருடன் கூடிய காய்ச்சல் ஏற்படும். அடுத்தபடியாக கோடைகாலத்தில் நீர் சரியாக பருகாத காரணத்தால் சிறுநீர் வெளியேறும் அளவு குறைவாகும். இதனால் சிறுநீரகத்தில் செயல்பாட்டால் உப்பு கலந்த கழிவுப் பொருட்கள் முழுமையாக வெளியேறாமல் கொஞ்சம், கொஞ்சமாக படிந்து அது கல்லாக உருவாகும் வாய்ப்புகள் அதிகம். இந்த பிரச்சினை வராமல் தடுப்பதற்கு சிறந்த வழி கோடை காலத்தில் தேவையான அளவு நீர்ச் சத்துள்ள பானங்களை குடிப்பதுதான். அப்பொழுதுதான் சிறுநீர் சரியான அளவில் வெளியேறி சிறுநீர் பாதையில் உள்ள கிருமிகளும், சிறுநீரில் உள்ள உப்புகளும் வெளியேற வாய்ப்புகள் ஏற்படும். மேலும் சுற்றுலா மற்றும் நெடுந்தூர பயணம் மேற்கொள்வோர் சிறுநீரை அடக்கி வைக்காமல் அவ்வப்போது கழிப்பது நல்லது. இளநீர், மோர், பழச்சாறு மற்றும் நீர்ச்சத்துள்ள ஆகாரங்களை போதிய அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.

கர்ப்பிணிப் பெண்கள் மற்ற காலங்களை விட நிறைய தண்ணீர் குடிப்பது நல்லது. கோடை காலத்தில் வெயிலில் விளையாடச் சென்றுவிடும் குழந்தைகளை அழைத்து அடிக்கடி நிறைய நீர்ச் சத்து ஆகாரங்களை கொடுப்பதுடன் குழந்தைகளை அடிக்கடி சிறுநீர் கழிக்கவும் அறிவுறுத்த வேண்டும். 'நீர்க் கடுப்பு' அதிகமானாலோ அல்லது அடிவயிற்றில் வலி அதிகமானாலோ மருத்துவரை அணுகி அவரது உதவியோடு எந்த வகை கிருமியால் இந்த 'நீர்க் கடுப்பு' நோய் ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து அதை அழிப்பதற்கு தகுந்த மாத்திரைகளை உட்கொள்வது நல்லது.

சிறந்த உணவு வகைகள்:

தண்ணீர்: 

கோடையில மட்டுமல்லாமல் எல்லா காலத்திலும் தண்ணீர் நமது வாழ்க்கையோடு ஒன்றிணைந்தது. நீரின்றி அமையாது உடலும், உடல் உறுப்புகளும். தண்ணீரின் தலையாய வேலையே வெப்பத்தை, வெப்பத் தாக்குதல்களை தன்னுடன் கொண்ட தாதுப் பொருட்களைக் கொண்டு காப்பதுதான். கோடைகாலத்தில் ஒவ்வொருவரும் குறைந்த பட்சம் 3 லிட்டரிலிருந்து 6 லிட்டர் தண்ணீர் வரை குடிக்க வேண்டும். ஒரே நேரத்தில் நிறைய குடிப்பதற்கு பதிலாக சிறிது சிறிதாக குடிப்பதே நல்லது.

இளநீர்: 

சோடியம் குளோரைடு, பொட்டாசியம், தாது உப்புகள், நீர்ச்சத்து, கால்சியம், வைட்டமின்கள் நிறைந்த இளநீர் வெயில் காலத்தில் வயது வித்தியாசமின்றி எல்லோரும் சாப்பிடக்கூடிய ஒரு சிறந்த நீர் ஆகாரமாகும்.

இயற்கை பழச்சாறுகள்: 

அதிக நீருள்ள திராட்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு, எலுமிச்சை, அன்னாசி, தர்ப்பூசணி போன்றவற்றில் நிறைய வைட்டமின்களும் நீர்ச்சத்தும் உள்ளன. இவற்றுடன் மற்ற பழங்களையும் சாப்பிடலாம்.

வெள்ளரிப்பழம், வெள்ளரிப் பிஞ்சு: 

வெள்ளரியில் நீர்ச்சத்துடன் மாவுச் சத்தும் அதிகம் இருக்கிறது. குறிப்பாக வெள்ளரிப் பழத்தில் நிறைய கார்போஹைட்ரேட்டுகளும், புரோட்டீனும், கால்சியமும், தாது உப்புகளும் உள்ளன. வெள்ளரிப் பிஞ்சைவிட வெள்ளரிப் பழம் கோடைக்கு மிகவும் உகந்தது. ஏனென்றால் வெள்ளரிப் பிஞ்சில் நீர்ச்சத்து மட்டும்தான் உள்ளது. வெள்ளரிப் பழத்தில் உள்ள தித்திப்பான சர்க்கரைச் சத்து உடலுக்கு உடனடியாக கலோரிகளை கொடுத்து வெப்பத் தாக்குதலில் இருந்து வெளியேற உதவுகிறது.

நுங்கு, பதநீர்:

பதநீரில் நீர்ச்சத்து அரை பாகமும், உப்புச் சத்தும், கால்சியம், தாதுப் பொருட்கள் சரி பாகத்தில் உள்ளது. கோடையின் வெப்பத்திற்கும், கோடையில் ஏற்படும் சில அவசரமான பிரச்சினைகளுக்கும் பதநீரில் உள்ள சத்துக்கள் மிகவும் அவசியம். நுங்கு, இளம் நுங்காக இருக்கும்போது தான் அதில் நீர்ச்சத்து அதிகமாக இருக்கும். இது வெயில் காலங்களில் வயிற்றுக் கோளாறைப் போக்கவும் பயன் தரும். நுங்கை குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை எல்லோரும் சாப்பிடலாம்.

கோடை காலத்தில் சைவ உணவுகளே சிறந்தது. அதிலும் பச்சை காய்கறிகள், கீரை வகைகளை அதிகமாக சேர்த்துக்கொள்ளலாம். அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. அத்துடன் அதிக எண்ணெய், காரம், மசாலா, வறுத்த உணவு வகைகளை தவிர்ப்பதும் நல்லது.

No comments:

Post a Comment