Monday, 6 June 2011

ஆதி மனிதரின் தோற்றம்!

ஆதிமனிதத் தோற்றம் மத்திய கிழக்குப் பகுதியில் (இன்றைய சவூதி, பாலஸ்தீனம்) தான் அமைந்துள்ளது என அண்மையில் வெளிவந்துள்ள ஆய்வு முடிவு ஆழமான சிந்தனைக்குரியதாகும்.

ஆதிமனிதர்கள் ஆப்பிரிக்காவில் தோன்றினர், என்றும், அங்கிருந்து புலம் பெயர்ந்து பல நாடுகளுக்கும் பரவினர் என்றும் இதுவரை கூறப்பட்டு வந்தது. ஆனால் இப்போது வெளிவந்துள்ள புதிய ஆய்வு ஆதி மனிதத் தோற்றம் மத்திய கிழக்கில் தான் ஏற்பட்டுள்ளது என்பதற்கு பல ஆதாரங்களைத் தருகிறது. மனிதனின் பரிணாம வளர்ச்சி பற்றி இதுவரை இருந்து வந்த கருத்துகள் தொல்லியவாளர்களின் கருதுகோள்கள் யாவற்றையும் இந்த புதிய ஆய்வு மாற்றியுள்ளதாக, மானுடவியல் துறை அறிஞர்கள் கூறுகின்றனர்.

டெல்அவிவ் பல்கலைக்கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஆதிமனிதத் தோற்றம் குறித்த ஆய்வுக்கு அறிஞர்கள் அவி கோஃபர் மற்றும் நான்பர்காய் ஆகியோர் தலைமையேற்றனர். இந்தக் குழுவினர் இஸ்ரேலின் பென்குரியன் விமான நிலையத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள ரோஷ்ஹா அய்ன் என்ற இடத்திற்கு அருகில் உள்ள ‘கெசம்’ குகையில் இன்றைய மனிதப்பற்களின் அமைப்போடு மிகவும் பொருந்திப்போகிற, 8 மனிதப் பற்களைக் கண்டு பிடித்துள்ளனர். இப்பற்களின் வயதை ஆய்வு செய்தபோது, இவை நானூறாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையவை எனத் தெரியவந்துள்ளது.

ஆப்பிரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட ஆதிமனிதத் தோற்றத்திற்கான ஆதாரங்கள் இருநூறாயிரம் ஆண்டுகள் பழமை கொண்டவை. மத்திய கிழக்கில் கிடைத்துள்ள ஆதிமனித ஆதாரங்களோ நானூறாயிரம் ஆண்டுகள் தொன்மையானவை. இவை மத்திய பெலிஸ்டோசின் என்ற காலத்தைச் சேர்ந்தவை எனக் கருதப்படுகின்றன.

ஆப்பிரிக்காவில் தோன்றிய ஆதிமனிதர்கள் 70ஆயிரத்திலிருந்து 50ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வடபகுதி, மத்தியகிழக்கு, ஐரோப்பா உள்ளிட்ட இடங்களுக்கு இடம்பெயர்ந்ததாக இதுவரைக் கூறப்பட்டது.

ஆப்பிரிக்காவிலிருந்து, ஆஸ்திரேலியாவுக்கு, கடலோரப் பாதைகளைப் பயன்படுத்தி ஆதிமனிதர்கள் செய்த இடப்பெயர்ச்சி குறித்து, டாக்டர் ஸ்பென்சர் வெல்ஸ் என்பவர் தி ஜர்னி ஆஃப்தமென், (The Journey of the men) என்ற ஆவணப் படத்தைத் தயாரித்தார்.

இது ’நேஷனல்ஜாக்ரபிக்’ தொலைக்காட்சியில் பலமுறை ஒளிபரப்பானது.

ஆப்பிரிக்காவிலிருந்து, ஆஸ்திரரேலியாவுக்கு இடம்பெயரும்போது, இடையிடையே மனிதக் கூட்டங்கள் தங்கிவருவதும், பிறகு பல்கிப் பெருகுவதும், அவ்வாறு பயணித்தவர்களின் மரபணுக்களிடையே ஒற்றுமை இருந்ததையும், டாக்டர் ஸ்பென்சர் வெல்ஸ் வெளிப்படுத்தினார்.

இந்தப் பயண மார்க்கத்தில், தமிழகத்தின் மதுரையும் அமைந்திருந்தது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மதுரை ஒரு கடலோர நகரம் என்ற செய்தி ஆச்சரியம் தான். இமயமலையே கடல் இருந்த இடம் என்பதற்கானத் தடங்களும் கண்டறியப்பட்டுள்ளன. இமயமலையின் உச்சியில், கடல்தாவரங்களின் படிவுகள் கிடைத்துள்ளன. இறைவனின் படைப்பில் இப்படி ஏராள ஆச்சரியங்கள் உண்டு.

மதுரை மற்றும் அதன் சுற்றுப்புறக் கிராமங்களில் ஏராளமானவர்களின் மரபணுக்களை ஆய்வு செய்த டாக்டர் ஸ்பென்சர் வெல்ஸ், அலங்காநல்லூரைச் சேர்ந்த விருமாண்டி என்பவருக்கு ஆப்பிரிக்க ஆதி மனிதக் கூட்டத்தின் மரபணு தொடர்ச்சி இருப்பதைக் கண்டறிந்தார்.

ஆப்பிரிக்காவிலிருந்து, ஆஸ்திரேலியாவுக்கு 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மனிதக் கூட்டம் பயணித்திருக்கலாம். ஆனால் ஆதி மனிதத் தோற்றம் ஆப்பிரிக்காவில் தான் நிகழ்ந்தது என்பதற்கு எதிரான பல ஆதாரங்களை இன்றைய ஆய்வுகள் வெளிக்கொணர்கின்றன. மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்று கூறும் குறைமதியாளர்கள் ஆப்பிரிக்காவின் கடும் வெப்பம், வேறுநிலையில் இருந்து மனித நிலைக்கு வர உதவியதாகச் செல்வதுண்டு.

எனவேதான், ஆப்பிரிக்காவில் தான் மனிதத் தோற்றம் நிகழ்ந்திருக்க முடியும் என்று கூறினர். சமீபகால ஆய்வுகளில் ஸ்பெயினிலும், சீனாவிலும் கிடைத்த ஆதாரங்கள், ஆப்பிரிக்காவில் ஆதி மனிதன் தோன்றியதைக் கேள்விக் குள்ளாக்கின.

மத்திய கிழக்கில் கண்டுபிடிக்கப்பட்டு நானூறாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவையாகக் கருதப்படும் மனிதப் பற்கள் தான் இன்றைய மனிதப் பற்களோடு அமைப்பால் பொருந்தி இருப்பதை ‘அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் பிசிக்கல் ஆந்த்ரோ போலஜி, என்ற ஆய்வுப் பத்திரிகை கட்டுரையாக வெளியிட்டுள்ளது. மத்திய கிழக்கின் ஆதி மனிதர்கள் நெருப்பைப் பயன்படுத்த வேட்டையாடவும், சுரங்கம் தோண்டவும், அறிந்திருந்ததாகக் கூறும் ஆய்வாளர் குழு, சிறப்பான சமூக வாழ்வை ஆதி மனிதர்கள் வாழ்ந்ததற்கும் ஆதாரங்களை அளித்துள்ளது.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர்சர் பால் மெல்லர்ஸ் உள்ளிட்ட மானுடவியல் நிபுணர்கள், மத்திய கிழக்கில் ஆதிமனிதத் தோற்றம் நிகழ்ந்ததாகக் கூறும் ஆய்வு முடிவை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

உறுதிபடுத்தப்படும் இஸ்லாமியச் செய்திகள்

நம் ஆதிபிதா ஆதம்(அலை) அவர்களும் அன்னை ஹவ்வா (அலை) அவர்களும், சுவர்க்கத்தில், ஷைத்தானின் தூண்டுதலால், விலக்கப்பட்டக் கனியைப் புசித்தனர், அதனால், பூமியின் இருவேறு பகுதியில் இறக்கப்பட்டனர்.

தமிழகத்தில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆதம், ஆதம் தந்தையார் (ஆந்தையார்), சேது(ஷீது) அவ்வா, (அவ்வை) ஆகிய சொற்கள் புழக்கத்தில் இருந்து வருகின்றன. இலங்கையில் ஆதம் மலை என்ற மலை உள்ளது. அவர்களின் மகனார் ஷீது பேரில் அமைந்த கால்வாய் தான் சேதுக்கால்வாய் என்றும் சொல்வர்.

“பஃருளி ஆற்று பன்மலை அடுக்கத்து

குமரிக்கோரும் கொடுங்கடல் கொள்ள”

என்ற வரிகள் மூலம், தமிழக மற்றும் இலங்கையை ஒட்டிய ஒரு பெரும் நிலப்பரப்பு, கடலில் மூழ்கிவிட்டதை அறிய முடிகிறது. ஆயினும், ஆதம் என்ற பெயர் தமிழில் தொன்று தொட்டு வழங்கி வருவது, ஆதிபிதா ஆதம் என்பதை உறுதிப்படுத்துகிறது.

ஹவ்வா(அலை) அவர்கள் இன்றைய சவூதியின் ஜித்தா பகுதியில் இறக்கப்பட்டார்கள் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். ஜித்தா என்ற சொல்லுக்கே பாட்டி என்று அரபியில் பொருளாகும். ஆதம், ஹவ்வா இருவரும், பூமிக்கு வந்த பிறகு முதலில் சந்தித்து, அறிமுகமாகிய இடம் தான் அரஃபா பெருவெளி என்றும் சில அறிஞர்கள் கூறுகின்றனர். அரஃபா என்றால் அறிமுக மாதம் என்று பொருள்படும்.

இப்போதும், ஆதிபிதா, ஆதி அன்னையின் வழித்தோன்றல்கள் அரஃபாவில் ஹஜ்ஜின்போது சந்திப்பது சிந்தனைக்குரியது. பூமிக்கு இறக்கப்பட்ட ஆதி பிதா ஆதம், ஹவ்வா, இன்றைய மத்திய கிழக்கில் மறு அறிமுகமாகி, சந்ததிகளை ஈன்று, அவர்களிலிருந்து மனிதகுலம் பல்கிப் பெருகி இருப்பதற்கான ஆதாரமாகவே ஆதிமனிதத் தோற்றம், மத்திய கிழக்கில் அமைந்தது என்ற ஆய்வு முடிவை எடுத்துக் கொள்ளலாம்.

‘மனித குலத்தை ஓர் ஆண், பெண்ணிலிருந்தே படைத்ததாகத் திருக்குர்ஆனின் பல இடங்களில் இறைவன் கூறுகிறான். (4:1,,,,,,,,,,)

அது எதிர்காலத்தில் மிகத் துல்லியமாக அறிவியல் மூலம் நிறுவப்படும் என்பதில் அய்யமில்லை. எடுத்துக்காட்டாக, தந்தை இல்லாமல், உடல் ரீதியாகத் தொடர்பு ஏற்படாமல் ஈஸா (அலை) பிறந்ததாக திருக்குர்ஆன் கூறியபோது அறிவியல்படி அது முடியாதே என அன்று விமர்சித்தார்கள்.

‘க்ளோனிங்’ கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, தந்தையின்றி பிறப்பது மிகச் சாதாரண உண்மையாகிவிட்டது. அறிவியலின் மிக வேகமான வள்ர்ச்சியால், பல மதங்களில் கூறப்பட்ட செய்திகள் காலாவதியாகி வருகின்றன. பூமி தட்டை வடிவம் என்ற பைபளின் கூற்று ஓர் உதாரணம். ஆனால் இஸ்லாமியக் கருத்துக்களை, நாளுக்கு நாள் வளரும் நவீன அறிவியல் மெய்ப்பித்து வருவதுதான் நாம் அறிந்து ஆய்வு செய்ய வேண்டிய செய்தியாகும்.

No comments:

Post a Comment