Wednesday, 8 June 2011

முடி உதிர்வதை தடுக்க…

சராசரியாக ஒவ்வொருவரின் தலையிலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான முடிகள் காணப்படும். முடி உதிர்வது என்பது பெண்கள், ஆண்கள் என இருபாலருக்கும் உள்ள பொதுவான பிரச்னை.

இந்த முடி உதிரும் பிரச்னை ஏற்படும் போது, நாம் அனைவருமே மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்வதில் தான் அதிக அக்கறை காட்டுகிறோம். இயற்கையில் கிடைக்கும் சில பொருட்களைக் கொண்டும் கூந்தல் உதிர்வதைத் தடுக்க முடியும். இதோ சில டிப்ஸ்…

வெந்தயம்: 
கூந்தல் உதிரும் பிரச்னை உடைய பெண்கள், சிறிதளவு வெந்தயத்தை 3 முதல் 4 மணி நேரம் ஊற வைத்து அரைத்து தலையில் தேய்த்து குளிக்கலாம். வாரத்திற்கு இரு முறை இவ்வாறு செய்ய, கூந்தல் உதிர்வது மட்டுப்படும்.

எள்ளுச்செடி: 
எள்ளுச் செடியின் இலைகள் சிலவற்றை தண்ணீரில் போட்டு 15 நிமிடங்கள் கொதிக்க வைத்து, பின் ஆறவைக்கவும். இந்த தண்ணீரை தலையில் மசாஜ் செய்வதற்கும், தலையில் தேய்த்து குளிப்பதற்கும் பயன்படுத்தலாம். இவ்வாறு செய்வதால் கூந்தல் உதிர்வு மற்றும் கூந்தலில் விரைவிலேயே நரை ஏற்படுவது போன்றவை தடுக்கப்படும்.

ஆலிவ் ஆயில்: 
ஆலிவ் ஆயில் பயன்படுத்தி முறையாக மசாஜ் செய்தால், அது கூந்தலை வலுப்படுத்துவதுடன், கூந்தல் உதிர்வு மற்றும் முடி நரைத்தல் போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது.

இது பொடுகை நீக்கும் இயற்கையான தீர்வாகவும் அமைகிறது. ஆலிவ் ஆயிலுடன் சம அளவு பாதாம் எண்ணெய் அல்லது ரோஸ்மேரி ஆயில் போன்றவற்றை கலந்தும் பயன்படுத்தலாம். இதுவும் கூந்தல் பராமரிப்பிற்கு சிறந்ததாக கருதப்படுகிறது.

பசும்பால்: 
புதிதாக காய்ச்சப் பட்ட பசும்பாலால் தலையில் மசாஜ் செய்து சிறிது நேரம் ஊறவிட வேண்டும். பின் ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர, நாளடைவில் கூந்தல் உதிர்தல் குறைந்து விடும். இதேபோல் பிரஷ் கிரீம் அல்லது வெண்ணெய் ஆகியவற்றையும் பயன்படுத்தலாம்.

பூண்டு: 
கூந்தல் உதிர்தல் பிரச்னைக்கு பூண்டு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. பூண்டு ஆயில் மற்றும் பூண்டு சாறு ஆகியவற்றால் தலையில் நன்கு மசாஜ் செய்து வந்தால் கூந்தலின் அடர்த்தி அதிகரிக்கும். உணவில் பூண்டை சேர்த்துக் கொள்வது கூந்தல் வளர்ச்சிக்கு துணை புரியும்.


சீரகம்:
சீரகத்தை நன்கு கறுப்பாகும் வரை வறுத்து பொடி செய்து பின் அதை ஆலிவ் ஆயிலுடன் கலந்து வைக்கவும். இந்த எண்ணெயை, தலையில் தேய்க்கும் முன் நன்கு கலக்கி விட்டு தலையில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.

பின்னர் சிறிது நேரம் நன்றாக ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் முடி உதிர்வது நாளடைவில் குறையும்.

தேங்காய் பால்: 
தேங்காய்ப் பாலை தலையில் தேய்த்துவந்தால் கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும். தேங்காய் துருவலை அரைத்து பால் எடுத்து அதை தண்ணீரில் கலந்து, மிதமாக சூடுபடுத்தி தலையில் தேய்க்க வேண்டும். சிறிது நேரம் கழித்த பின், குளிக்க வேண்டும். இவ்வாறு, தொடர்ந்து செய்து வந்தால், நாளடைவில் நல்ல பலன் கிடைக்கும்.

பெண்கள் சிலருக்கு கத்தை கத்தையாக முடி உதிரும். அவர்கள் தாமரை இலை சாற்றை சம அளவு நல்லெண்ணையில் கலந்து அடுப்பி லிட்டு கொதிக்க செய்ய வேண்டும். தைலம் மட்டும் மிதக்கும். அந்த தைலத்தை மட்டும் எடுத்து வைத்து கொண்டு முடி உதிர்கின்ற இடத்தில் தடவினால் முடி கருகருவென்று வளரும்.



அவுரி, கரிசாலை, கறிவேப்பிலை மூன்றையும் சம அளவில் எடுத்து அரைத்து தினமும் மூன்று வேளை 5 கிராம் அளவுக்கு சாப்பிட்டால் தலைமுடி நன்கு வளரும். முடி உதிர்தல் பிரச்னை குறையும்.

No comments:

Post a Comment