Tuesday, 14 June 2011

ஆரோக்கியம் தரும் மூலிகைக் குடிநீர்...


நோயில்லாத வாழ்வே சிறப்பான வாழ்க்கையாகும். இத்தகைய வாழ்வு வாழ நாம் கடைப்பிடிக்க வேண்டியது சுகாதாரமே.. சுகாதாரம் என்பது உண்ணும் உணவு முதல் உடுத்தும் உடை வரை எல்லாமே அடங்கும். அதுபோல், உடலும், மனமும் நன்றாக இருந்தால் அதுவே ஆரோக்கியமாகும்.
இன்றைய சூழலில் குடிநீர், உணவு, இருப்பிடம், காற்று என அனைத்தும் மாசுபட்டுக் கிடக்கின்றன. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் குடிநீரினால் உண்டாகும் நோய்களே மக்களை அதிகம் பாதிப்பதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து விற்கும் நீர் கூட சுத்தமானது என்பதை உறுதி செய்ய முடியாது. இவைகள் பெரும்பாலும் இரசாயன வேதிப் பொருட்கள் கலந்ததாக உள்ளன. இவற்றை அருந்துவதால் பல நோய்களுக்கு இதுவே அஸ்திவாரமாக அமைந்து விடுகிறது. இதனால் நன்கு சுத்தமான நீரை அருந்த வேண்டும். உணவின் மூலமும், நீரின் மூலமும் நோய் தடுக்கும் மருந்துகளை உட்கொள்ள சித்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அதில் வெறும் குடிநீரை அருந்துவதை விட சித்தர்கள் கண்டறிந்து கூறியுள்ள மூலிகைக் குடிநீரை அருந்தினால் உடலுக்கு சக்தி கிடைப்பது மட்டுமின்றி நோயும் தடுக்கப்படும்.
அந்த வகையில் ஆவாரம் பூ குடிநீர், கரிசாலை குடிநீர், நன்னாரி குடிநீர், துளசி குடிநீர், வல்லாரை குடிநீர், சீரகக் குடிநீர், நெல்லிப்பட்டைக் குடிநீர், மாம்பட்டைக் குடிநீர், ஆடாதோடைக் குடிநீர், போன்றவை அடங்கும்.
ஆவாரம்பூ குடிநீர்
“ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ..”
என்ற மருத்துவப் பழமொழி உண்டு. ஆவாரம் பூ எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது. இது நோய்களைக் குணப்படுத்துவதால் நோயினால் மனிதன் இறப்பதை தடுக்கிறது. இன்றைய உலக மக்கள் தொகையில் பாதிபேர் சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர். இந்த சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் குணம் ஆவாரைக்கு உண்டு. மேலும் மேனிக்கு தங்க நிறத்தைக் கொடுக்கும் தங்கநிறப் பூவும் இதுதான்.
நீரில் ஆவாரம் பூக்கள் அல்லது காயவைத்த ஆவாரம் பூ பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, குடிநீராக அருந்தி வரலாம்.
இது உடல் சூடு, பித்த அதிகரிப்பு, நீர்க்கடுப்பு, அதிக உதிரப்போõக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், குடற்புண் வயிற்றுப்புண் போன்றவை நீங்கும்.
நீரிழிவு நோயாளிக்கு இது மிகவும் சிறந்த மூலிகைக் குடிநீர் ஆகும்.
இரத்தத்தைச் சுத்தப்படுத்தும், உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வியர்வை மூலம் வெளியேற்றி, சருமத்திற்கு மினுமினுப்பைக் கொடுக்கும்.
பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலை அறவே நீக்கும்.
இதனைத் தொடர்ந்து அருந்தி வந்தால், உடலை நோயின்றி அரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
துளசி குடிநீர்
துளசி நமக்கு அருமருந்தாகும். துளசி இலையுடன் சீரகம் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து குடிநீராக அருந்தி வந்தால் உடலுக்கு பல நன்மைகள் உண்டு.
அடிக்கடி வெளியூர் பயணம் செய்பவர்களுக்கும், வெயில் மற்றும், மழைக்காலங்களில் அலைந்து திரிபவர்களுக்கு துளசி குடிநீர் அருமருந்தாகும். இது உடற்சூடு, பித்தம் போன்றவற்றைத் தணிக்கக் கூடியது.
டைபாய்டு, மஞ்சள்காமாலை, மலேரியா, காலரா நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். தொண்டைச்சளி, வறட்டு இருமல், புகைச்சல், தலையில் நீர் கோர்த்தல், அடிக்கடி தும்மல், போன்றவற்றைப் போக்கும். இரத்தத்தில் உள்ள சளியை நீக்கி இரத்தத்தை சுத்தப்படுத்தும்.
வல்லாரை குடிநீர்
எல்லா நோய்களுக்கும் கொடுக்கப்படும் மருந்தில் முதல் மருந்தாகவும், துணை மருந்தாகவும் இருப்பது வல்லாரை.
இதனை சரஸ்வதி மூலிகை என்று அழைக்கின்றனர். இது மூளைக்கும், அதன் செயல்பாட்டிற்கும் அதாவது அறிவுத் திறனுக்கும், ஞாபக சக்திக்கும் ஏற்ற மூலிகையாகும்.
காயவைத்த வல்லாரை பொடியை நீரில் போட்டு கொதிக்க வைத்து அனைவரும் அருந்தலாம்.
இது ஞாபக சக்தியைத் தூண்டுவதுடன், பித்த அதிகரிப்பைக் குறைக்கும். இரத்தத்தில் ஏற்படும் இரும்புச் சத்துக் குறைபாட்டைப் போக்கி இரத்தச் சோகையை நீக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுக்கும். தொழுநோய், யானைக்கால் நோய், மூலம், மூட்டுவலி போன்ற வற்றிற்கு சிறந்த மருந்தாகும்.
கரிசாலை குடிநீர்
“ஏர்தரும் ஆன்ற கரிசாலையால் ஆன்மா சித்தி”
என்றார் வள்ளலார் இராமலிங்க அடிகள். அத்தகைய சிறப்பு வாய்ந்த கரிசாலை கண்களுக்கு ஒளியையும் உடலுக்குத் தேவையான இரும்புச் சத்தையும் தரக்கூடியது.
வெள்ளை கரிசாலை இலைச் சூரணம் 200 கிராம் எடுத்து அதனுடன் முசுமுசுக்கை இலை 35 கிராம், நற்சீரகத்தூள் 35 கிராம் அளவு சேர்த்து கொதிக்க வைத்து தேவையான அளவு பனங்கற்கண்டு அல்லது பனைவெல்லம் கலந்து காலை, மாலை தேநீருக்குப் பதிலாக அருந்தலாம். அல்லது, கரிசாலையுடன் நற்சீரகம் சேர்த்துகொதிக்க வைத்து குடிநீராகவும் அருந்தலாம்.
கரிசாலை இரத்த சோகையைப் போக்கக் கூடியது. இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. இரத்தத்தில் உள்ள பித்தத்தைக் குறைக்கும்.
இரத்தக் கொதிப்பு, காசநோய், எலும்பு தேய்மானம் போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.
சீரகக் குடிநீர்
சீர்+அகம் =சீரகம். அகம் என்னும் உடலை சீர்படுத்துவரே சீரகத்தின் சிறப்பான குணமாகும்.
சீரகத்தை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி ஆறிய நீரை தினம் பருகி வருவது நல்லது.
இது உடற் சூட்டைத் தணிக்கும்.பித்தத்தைக் குறைக்கும்.
ரத்தத்தில் உள்ள தேவையற்ற பொருட்களை நீக்கி, ரத்தத்தைக் சுத்தப்படுத்தும். வியர்வை மற்றும் சிறுநீரைப் பெருக்கும்.
கண் சூடு குறைக்கும். வாய்ப்புண் வயிற்றுப்புண்ணைப் போக்கும்.
சரும நோய்கள் வராமல் தடுக்கும். இதயத்திற்கு இதமான குடிநீர்தான் சீரகக் குடிநீர்.
மாம்பட்டைக் குடிநீர்
மாம்பட்டையை இடித்து நீரில் கொதிக்க வைத்து குடிநீராக்கி அருந்தினால், நரம்புகள் பலப்படும், உடல் சூடு தணியும், சரும நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். பித்தத்தைக் குறைக்கும். அஜீரணக் கோளாறை நீக்கும்.
நெல்லிப்பட்டைக் குடிநீர்
நெல்லி மரப் பட்டையை காயவைத்து இடித்து பொடியாக்கி குடிநீரில் இட்டு காய்ச்சி அருந்துவது நல்லது.
இது ஆஸ்துமா, சளி, இருமல், வறட்டு இருமல், தொண்டைக்கட்டு, நுரையீரல் சளி, இரத்தச் சளி போன்றவற்றைப் போக்கும். ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். உடல் சூட்டைத் தணிக்கும். குடல்புண்களை ஆற்றும். மூலநோய்க் காரர்களுக்கு மூலநோயின் பாதிப்பைக் குறைக்கும்.
ஆடாதோடைக் குடிநீர்
ஆடாதோடை இலைகளை சிறிதாக நறுக்கி தேன் விட்டு வதக்கி நீரில் போட்டு கொதிக்க வைத்து குடீநீராக அருந்தி வந்தால்,
சளி, இருமல், கோழைக்கட்டு, நாள்பட்ட நெஞ்சுச் சளி, மூக்கில் நீர் வடிதல், நுரையீரல் சளி போன்றவை நீங்கும்.
வாந்தி, விக்கல் போன்றவை குணமாகும்.
சைனஸ், ஆஸ்துமா நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு இது சிறந்த மருந்து.

No comments:

Post a Comment