Sunday, 25 September 2011

விஞ்ஞானப் பாதையில் செல்ல வேண்டிய தமிழ் மருத்துவம்
மற்றவர் எமது மருத்துவ வளங்களைத் திருடிச் செல்வதா?தமிழ் மருத்துவம் நீண்ட வரலாற்றைக் கொண்டது. ‘கல்தோன்றி மண்தோன்றா காலத்து முன்தோன்றி மூத்த தமிழர்’ என நாம் பீற்றிக் கொள்வதுண்டு. இது அதீத கற்பனையாகவே இருக்கிறது. ஏனெனில் கல்லும் மண்ணும் தோன்றும் முன்னர் தமிழன் என்றில்லை அமீபா, பங்கஸ், கரப்பொத்தான் பூச்சி போன்ற எந்த உயிரினமும் தோன்றுவதற்கு வாய்ப்பில்லை என்பதுதான் உண்மை.

தொன்மையானது தமிழ் மருத்துவம்

ஆயினும் தமிழ் மருத்துவம் தொன்மையானது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
சிந்துவெளி நாகரீக காலத்திலேயே சத்திரசிகிச்சை செய்யும் அளவிற்கு அது பெருவளர்ச்சி அடைந்திருந்தது. ஆயினும் கால ஓட்டத்துடன் நகர்ந்து செல்லாது சற்று பின்தங்கிவிட்டது. விஞ்ஞானத்துறை போல இத்துறையை வளர்க்காமல் ஆன்மீகத் துறைபோல ஆற்றுப்படுத்தப்பட்டதே இந்நிலைக்கு இதற்கு முக்கிய காரணம் எனத் தோன்றுகிறது. நேற்றைய கம்பன் விழாப் பட்டி மன்றத்தில் (18.5.2008) சொல் வேந்தர் சுகி செல்வம் கூறியது போல ‘கேள்வி கேட்பதே அறிவியலின் திறவுகோலாகும்’ என்பதை இத்தருணத்தில் மனத்தில் வைத்துக்கொள்ள வேண்டியதாகிறது.

மாற்றமும், வளர்ச்சியும் அவசியம்

மாற்றமும், வளர்ச்சியும் காலத்தின் நியதி. கலை, கலாசாரம், ஆன்மீகத்துறை, உணவுமுறை, கல்வி என எதை எடுத்துக்கொண்டாலும் அவற்றில் நாளாந்தம் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. நூறு ஆண்டுகளுக்கு முன் நாம் உண்டதை நாம் இப்பொழுது உண்பதில்லை, உடுத்ததை உடுப்பதில்லை, படித்ததை இப்பொழுது படிப்பதில்லை. காலத்தோடு மாறுகிறோம். மாற்றம் எதிலும் நியதி. அதிலும் முக்கியமாக அறிவியலில் மாற்றமும் வளர்ச்சியும் அத்தியாவசியமானவை. அறிவியலின் அடிப்படையே அதுதான். அறிவியல் எதையும் முற்றுமுழுதாக சரியென ஏற்றுக் கொள்வதில்லை எதையும் ஆய்வுக் கண்ணோட்டத்தில் சந்தேகிப்பவன்தான் விஞ்ஞானி.

முன்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதை ஆராய்ச்சி மூலமாக பிழையென நிறுவி புதிய கருத்தை முன்வைப்பவன் அவன். முன்னோர் சொன்னதெல்லாம் சரி, அவற்றை கேள்விக்கு உட்படுத்த முடியாது என்பவன் விஞ்ஞானியாக இருக்க முடியாது. அதற்கு முற்றிலும் மாறானது ஆன்மீகம். அது ஆய்வறிவை விட அனுபவ அறிவை அடிப்படையாகக் கொண்டது. குருவின் சொல்லை வேதவாக்காக ஏற்றுக்கொள்வதுதான் ஆன்மிகத்துறையில் சிஸ்யனுக்கான முதல் கட்டளையாகும்.

ஆனால் விஞ்ஞானம் முற்றிலும் எதிர்மாறானது.
உதாரணமாக மரத்திலிருந்து பழம் கீழே விழுவதை இயற்கையானதாக அல்லது கடவுளின் நியதி என நியூட்டன் ஏற்றுக் கொண்டிருந்தால் புவியீர்ப்புக் கொள்கையே தெரிய வந்திருக்காது.

எதிர்க் கேள்வி கேட்காது ஓலையில் எழுதி வைத்ததையும், குரு சொல்லிய பாடத்தையும் அப்படியே கடைப்பிடித்தமைதான் இதன் வளர்ச்சியை குறைத்திருக்கும் என எண்ணத் தோன்றுகிறது. அத்துடன் தனக்குக் கிட்டிய அறிவை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாது பரம்பரைக்குள் மட்டும் ரகசியம் பேணியதும் மற்றொரு காரணம் எனலாம்.

தமிழ் மருத்துவத்தின் தொன்மைக்குச் சான்றாக சிந்துவெளி முத்திரைகளுடன், தொல்காப்பியம், சங்க இலக்கியம், ஐம்பெருங் காப்பியம், திருக்குறள் போன்றவையும் அமைந்துள்ளன. இந் நூல்களில் உடல்நலம் பற்றிய குறிப்புகளும், நோய் பற்றிய செய்திகளும், மருத்துவம் பற்றிய விபரங்களும், மூலிகைகள் பற்றிய செய்திகளும் காணப்படுவதாக அறிஞர்கள் கூறுகிறார்கள்.

திருமூலரின் திருமந்திரம்


இன்றைய நவீன மருத்துவ உலகில் ஆரோக்கியம் அல்லது சுகநிலை என்பது வெறுமனே உடற்சுகத்தை மட்டும் குறிப்பதில்லை. உடல், உள்ளம், சமூகம், ஆன்மிகம் ஆகிய நான்கு நிலைகளிலும் ஒருவன் பூரண சுகத்துடன் இருப்பதையே குறிக்கிறது. இதனையே உலக சுகாதார ஸ்தாபனமும் வலியுறுத்துகிறது. உடல் ஆரோக்கியத்ததைப் பேணினால் மாத்திரமே ஞானமும் கைகூடும் என்பது தெளிவு. இதனையே திருமூலர் தனது பாடலில் உறுதியோடு சொல்கிறார்.

‘உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’

மேற் கூறிய பாடலில் மட்டுமின்றி திருமூலரின் திருமந்திரத்தில் உடல் நலம், மருத்துவம், ஆகியன தொடர்பான பல பாடல்கள் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். திருமந்திரம் தமிழுக்கு கிடைத்த மிக அற்புதமான நூல்களில் ஒன்று. அதில் உள்ளடங்கும் சுவார்ஸமான மற்றொரு பாடல் சொல்வதைப் பாருங்கள்.

ஆண்குழந்தையா பெண்குழந்தையா

குழவியும் ஆணாம் வலத்தது வாகில்
குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில்
குழவியும் இரெண்டாம் அபான னெதிர்க்கில்
குழவியும் அலியாகும் கொண்டகால் ஒக்கிலே.

இந்தப் பாடலிலே ஒரு தம்பதியினர் தமக்கு வேண்டியது ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என்பதைத் கணவனே தீர்மானிக்கக் கூடிய ஒரு வழியைச் சொல்லியிருக்கிறார். நவீன மருத்துவத்தின் படி குழந்தையின் பாலை நிர்ணயிப்பது ஆண்கள். தயவு செய்து பெண்ணியம் பேசுபவர்கள் என்னுடன் சண்டைக்கு வரவேண்டாம். இது ஒரு விஞ்ஞானத் தரவு. இதன் படி ஒரு கருவின் பாலை நிர்ணயிக்கும் X, Y குரோமோஸோம்கள் ஆணிடத்தில் இருந்துதான் உருவாகிறது. குரோமோஸோம்கள் தாமகவே நிர்ணயிக்கின்றனவே ஒழிய ஆணின் தன்னிச்சையான முயற்சியால் அல்ல என்பதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

ஆனால் திருமூலரின் கூற்றுப்படி கலவியின்போது ஆணினுடைய மூச்சு வலது பக்கமாக வெளிப்படுமெனில் குழந்தை ஆணாகப் பிறக்குமென்றும், இடப்பக்கமாக இருக்குமெனில் பெண்ணாக இருக்குமென்றும், இரண்டு மூக்கிலும் வெளிப்பட்டால் பாலியல் குறைபாடுள்ள குழந்தை பிறக்குமென்றும் குறிப்பிடுகிறார். ஆயினும் நாம் வழமையாக இரு நாசித்துவாரங்கள் ஊடாகவுமே ஒரே நேரத்தில் மூச்சை உள்ளெடுக்கவோ வெளிவிடவோ செய்கிறோம். யோகாசனம் போன்ற பயிற்சிகளின்போதே ஒரு மூக்கால் உள்ளெடுத்து மறு மூக்கால் வெளிவிடுவதுண்டு.

எனவே இக் கூற்றின் சாத்தியப்பாடு கேள்விக்குரியதாகவே இருக்கிறது. இருந்தபோதும் ஆணின் விந்தின் மூலமே பிறக்கப் போகும் குழந்தையின் பால் தீர்மானிக்கப்படுகிறது என விஞ்ஞானம் இன்று சொல்வதை அவர் அன்றே சொல்லியிருப்பது வியப்பளிப்பதாக இருக்கிறது. மாறாக இது திருமூலர் என்ற ஆணாதிக்கவாதியின் கற்பனையான ஒரு பக்கக் கருத்து என்று ஒரு சிலர் ஒதுக்கிவிடவும் கூடும்.


திருக்குறளில் நலவியல்


ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வள்ளுவன் திருக்குறளில் உடல் ஆரோக்கியம், மருத்துவம், அளவோடு உண்ணுதல், கள்ளுளான்மை போன்ற பல தலைப்புகளில் நலவியல் பற்றிப் பேசுகிறார்.

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.

அதீத உடற்பருமனானது நீரிழிவு, உயர்அரத்த அழுத்தம், இருதயநோய்கள், மூட்டுவாதம் போன்ற பல நோய்களுக்கு அடிப்படையாக இருப்பதை இன்றைய மருத்துவம் அறியும். இதையே வள்ளுவர் அளவோடு உண்டால் அதாவது அற்றது போல உண்டால் உடலுக்கு மருந்தே தேவைப்படாது என்று அன்றே கூறுகிறார்.

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.

அதேபோல மனஅழுத்தமானதும் பிரஸர், நீரிழிவூ, இருதய நோய்கள், பாலுறவுப் பிரச்சனைகள், மனச்சோர்வூ, பதகளிப்பு போன்ற பல்வேறு நோய்களுக்கு அடிப்படையாகிறது. இதையே அவர் ..

‘காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்’ என்கிறார்.

விருப்பு, வெறுப்பு, தெளிவில்லாமை என்னும் மூன்றினதும் அழுத்தம் (Stress)இல்லையானால் பிரஸர், நீரிழிவு, மாரடைப்பு போன்ற பல நோய்கள் வராமல் தடுக்கலாம் என இன்று அதற்குப் பொருள் கொள்ளலாம்.

சங்க காலப் புலவர் ஒருவரால் இயற்றப் பெற்ற ‘ஆற்றுப்படை’ என்னும் மருத்துவ நூலின் ஒரு பகுதி கிடைத்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இதன் மூலம் சங்க காலத்திலேயே மருத்துவ நூல்கள் எழுந்துள்ளன என்பதை அறியக் கூடியதாக இருக்கிறது.

சிலப்பதிகாரத்தில்

சிலப்பதிகாரத்தில் அரைப்பு முறையால் செய்யூம் மருந்துகள் பற்றிய சில குறிப்புகள் கிடைத்துள்ளதாக தமிழ் மருத்துவ அறிஞர் முனைவர் இர.வாசுதேவன கூறுகிறார். அவையாவன

சந்தான கரணி - முறிந்த உறுப்புகளை ஒட்டுவது.
சல்லிய கரணி - வேல் தைத்த புண்ணை ஆற்றுவது.
சமனிய கரணி - புண்ணின் தழும்பை மாற்றுவது.
மிருத சஞ்சீவினி - இறந்த உடலை உயிர்க்கச் செய்வது.

இவற்றில் சந்தான கரணி, சல்லிய கரணி ஆகிய இரண்டும் அதாவது, முறிந்த எலும்பு உறுப்புகளை பொருத்துவது, புண்ணை ஆற்றுவது போன்றவை இன்றைய நவீன மருத்துவத்தில் மிகச் சாதாரணமாக செயற்படுத்தக் கூடியதாக இருப்பதை அறிவீர்கள்.
ஆயினும் புண்ணின் தழும்பின் வலியையும், அசிங்கத்தன்மையையும் மாற்றும் சமனிய கரணி இன்றும் நவீன மருத்துவத்திற்கு சவாலாகவே உள்ளது. ஸ்டீரொயிட் போன்ற ஊசி மருந்துகளால் தழும்புகளின் பருமனை ஓரளவு மட்டுமே குறைக்கக் கூடியதாக உள்ளது. அல்லது பிளாஸ்டிக் செர்ஜரி போன்ற மிகத் தேர்ச்சியான செலவு கூடிய மாற்று சிகிச்சை முறைகளே உள்ளது.

ஆயினும் அதில் இறுதியாகச் சொல்லப்பட்டுள்ள மிருத சஞ்சீவினி எனும் இறந்த உடலை உயிர்க்கச் செய்வதானது நவீன மருத்துவத்தில் இப்போதைக்கு சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது.

இத்தகைய மருத்துவ முறைகள் பற்றி சிலப்பதிகாரம் குறிப்பிட்டபோதும் அவற்றை எவ்வாறு செய்வது என்பது பற்றிய விபரமான விளக்கங்கள் எதுவும் சிலப்பதிகாரத்திலோ ஏனைய பழம்தமிழ் இலக்கியங்களிலோ சொல்லப்படவில்லை. சிகிச்சை முறைகள் பற்றி வெளிப்படையாக மற்றோர் அறியக் கூறாமல் இரகசியம் பேணியமை தமிழ் மருத்துவத்தின் சாபக்கேடு என்றே கூறவேண்டும்.

இன்று இறந்தவர் உடலை வெளிநாட்டிலிருந்து அல்லது தூர இடங்களிலிருந்து உறவினர்கள் வரும்வரை பாதுகாத்து வைப்பதை நாம் அறிவோம்.
கோழி இறைச்சியானது தேவைப்படும் காலம் வரை வீட்டிலுள்ள பிரிட்ஜ்க்குள் போய்வந்து கொண்டிருப்பது போல உறவினர்கள் வரும் இறந்தவரது உடலானது மரணச்சடங்கு நடக்க இருக்கும் மலரச்சாலையின் குளிர் அறைக்குள் போய் வந்துகொண்டே இருக்கும். இத்தகைய தேவை அந்தக் காலத்திலும் இருந்திருக்கும் போல.

உயிர் பிரிந்தபின் அந்த உடம்பு சில காலத்திற்குக் கெட்டுவிடாமல் பாதுகாத்து வைப்பதற்காக ஒருவகை எண்ணெயில் அதனை இட்டு வைப்பதை கம்பராமாயணம் (தைலமாட்டு படலம், பாடல் 608) மூலம் அறிய முடிகிறது.

போகர் ஏழாயிரத்தில் மூளைச் சத்திரசிகிச்சை

மண்டை ஓட்டை வெட்டி மூளைக்குள் சத்திரசிகிச்சை செய்வது இன்று நடைமுறையில் இருந்தாலும் சற்று ஆபத்தான தீவிர சிகிச்சை என்பதில் ஐயமில்லை. ஆயினும் சங்க காலத்திலேயே இவ்வாறான சத்திரசிகிச்சை செய்யப்பட்டதாக அறிய முடிகிறது.
'போகர் ஏழாயிரம்' என்றொரு நூலில் இச்செய்தி இருப்பதாக டொக்டர்எஸ்.ஜெயபாரதியின் கட்டுரையில் அறியக்கிடக்கிறது. போகர் என்ற முனிவர் வானத்தில் பறக்கும் வித்தை அறிந்தவர். மெக்கா, சீனா எனப் பறந்து திரிந்தவர். பழனிமலைக் கோவிலின் திருவுருவை அமைத்தவர் அவரே என்றும் சொல்லப்படுகிறது. அவரது நூலில் வரும் பாடல் மூலம் இச்செய்தி தெரியவருகிறது.

திரணாக்கிய முனிவருக்கு 10 ஆண்டுகளாக தாங்க முடியாத தலைவலியாம். பல வைத்தியர்கள் பார்த்தும் குணமாக்க முடியாத நிலையில. அகத்தியரை நினைத்தார்கள். அங்கு கருணையுடன் வந்த அகத்தியர் தனது ஞானக் கண்ணால் நோக்கியபோது முனிவரின் முளைக்குள் தேரை ஒன்று இருப்பதைக் கண்டார். இன்றைய MRI யை நிகர்த்தது அவரது ஞான ஆற்றல் போலும். கபாலத்தை சத்திரசிகிச்சையால் திறந்து, உள்ளிருந்த தேரையை அவர் கொடுக்கியால் எடுக்க முனைந்தபோது அவரது சீடரில் ஒருவராகிய பொன்னரங்கன் என்பவர் தடுத்தாராம்.

அப்படியே தேரையை எடுத்தால் அது மூளையைப் பிய்த்துக்கொண்டு வந்துவிடும். ஆகவே பொன்னரங்கனார் ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் கொண்டுவரச் செய்தார். அந்தப் பாத்திரத்தைத் தேரையின் அருகே பிடித்தார். தண்ணீரைக் கண்ட தேரை உடனே மூளையை விட்டுவிட்டு தண்ணீருக்குப் பாய்ந்தது. தொல்காப்பியரின் மூளைக்குச் சேதமில்லாமல் கபாலத்தை மூடிவிட்டார்கள். பூரண குணமடைந்தார்.

எமது மூலிகைள் வளங்கள் மாற்றார் கைகளில்

சரி பழம் தமிழ் இலக்கியங்களை விட்டு இன்றைய காலகட்டத்திற்கு வருவோம். வேப்பமிலை, வேப்பங்கொட்டை, இஞ்சி, உள்ளி, அதிமதுரம், கொத்தமல்லி,
கருஞ்சீரகம், வல்லாரை, மஞ்சள், பட்டிப்பூ, கற்றாளை, நெல்லி, நிலவேம்பு, குங்கிலியம், கீழ்காய்நெல்லி, புளித்தோடை, பருத்தி, சோயா, திராட்சை, பூக்கோவா போன்ற பலவும் தமிழ் மருத்துவத்தில் மூலிகைகளாக மட்டுமின்றி நமது நாளாந்த வாழ்விலும் மருத்துக் குணங்களுக்காகப் பாவனையில் உள்ளன. ஆயினும் இவை பற்றி ஆய்வு ரீதியான தரவுகள் தமிழ் மருத்துவத்தில் உள்ளனவா? இல்லை!

ஆனால் இவற்றில் பல பற்றிய நவீன மருத்துவ ஆய்வுகள் உள்ளன. அவற்றிலும் பெரும்பாலானவை மேலைத் தேசங்களில் செய்யப்பட்ட ஆய்வுகளாகும்.
நாம் செய்ய வேண்டியவற்றை அவர்கள் செய்கிறார்கள் என்று பெருமிதம் கொள்ள வேண்டாம். அவர்கள் செய்வது தமது சுயநலத்திற்காக, பொருளாதாரப் பேர் இலக்குகளை அடைவதற்காக.

உண்மையில் எமது மருத்துவம் பற்றிய ஆய்வுகளை நாம்தான் செய்ய வேண்டும். அதையும் எமது சூழலில் செய்ய வேண்டும். எமது மக்களின் விமோசனத்திற்காகச் செய்ய வேண்டும். ஆனால் அதைச் செய்வதற்கான வாய்ப்புகளோ பொருளாதார வசிதிகளோ, ஆய்வுகூட வசதிகளோ இங்கு கிடையாது என்பது மிகவும் கவலைக்குரியது. ஆயினும் தஞ்சை, யாழ் மற்றும் மலேசிய பலகலைக் கழகங்களின் சுதேசிய வைத்திய பீடங்களில் பல ஆய்வுகள் நடாத்தப்படுவதாகத் தெரிகிறது. இது போற்றத் தக்க முயற்சி என்றபோதும் போதியதாக இல்லை.

உரிமம் பறிபோதல்

இதன் காரணமாக எமது பாரம்பரிய மூலிகைகளும் அவற்றின் மீதான எமது உரிமைகளும் பறிபோகின்ற அவலநிலை ஏற்பட்டுள்ளது. ஆனைக்கோட்டையிலிருந்து 1980ல் கடத்திச் செல்லப்பட்ட ஒரு வகை (Streptosporangium fragile) பூஞ்சணம் அதாவது பங்கசிலிருந்து fragilomycin என்ற நுண்ணுயிர் கொல்லி மருந்து கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால் எமது மண்ணிலிருந்து பெறப்பட்ட அம்மருந்துக்கான காப்புரிமை அமெரிக்க பல்தேசிய கம்பனியிமே உள்ளது. நாம் எமது நாட்டிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டதற்கு உரிமை கோர முடியாதுள்ளது. இவ்வாறே தமிழ் மருத்துவத்தில் பல்வேறு நோய்களுக்கு பயன்பட்டு வந்த பாகல், நாவல், நெல்லி, சீயக்காய், கடுகு, மிளகு, இஞ்சி, ஆமணக்கு போன்ற பல தாவரங்களின் மருத்துவப் பண்புகளுக்கு அவர்கள் காப்புரிமை பெற்று வைத்திருப்பதை அண்மையில் பொ.ஐங்கரநேசன் பத்திரிகைக் கட்டுரை ஒன்றில் வெளிப்படுத்தியிருப்பதை படிக்க முடிந்தது.

இவ்வாறாக எமது மருத்துவ அறிவை, மூலிகைகளை வெளிநாட்டவர் திருடிச் செல்வதற்கும், அவற்றிற்கு சர்வதேச சட்டங்களின் கீழ் காப்புரிமையூம் பெறுவதற்கு எமது அறியாமையும் அசண்டையீனமும்தான் காரணமாகிறது. எமது விஞ்ஞானிகளில் சிலர் தமது பொருளாதார நன்மைகளுக்காகவும், உயர் பதவிகளுக்காவும் எமது உயிரியல் வளங்களின் விஞ்ஞானத் தகவல்களை சட்டவிரோதமாக கடத்த உதவியதாகவும் சில பத்திரிகைச் செய்திகள் சொல்லுகின்றன. இவற்றைத் தடுக்க வேண்டும். இவற்றுக்கு எதிராக நாம் போராட வேண்டும்.

அத்துடன் எமது பாரம்பரிய அறிவை விஞ்ஞான யூகத்திற்கு ஏற்ப நவீனப்படுத்த வேண்டும். தஞ்சை, யாழ், மலேசிய போன்ற பல பல்கலைக்கத்தின் சுதேசிய வைத்திய பகுதிகள் இத்தகைய ஆய்வுகள் சிலவற்றைச் செய்ய முனைந்துள்ள போதும், வளப் பற்றாக்குறை தடையாக இருக்கிறது. யாழ் பல்கலைக் கழகத்தின் சித்த மருத்துவப் பிரிவு சிக்கன்குனியா நோயுக்கான மருந்தைக் கண்டுபிடித்திருப்பதாக பத்திரிகைச் செய்தி ஒன்று கூறியது. மகிழ்ச்சிக்குரியது. தரமான விஞ்ஞான மருத்துவ சஞ்சிகைகளில் அத்தகைய ஆய்வு பற்றிய விபரங்களை வெளிப்படுத்தி அதற்கான உரிமையைப் பெறவேண்டு

18.05.2008 அன்று கம்பன் விழாவில் பேசப்பட்டதின் கட்டுரை வடிவம்.

Post Comment

1 comment:

  1. kandipaga naam tamizhargal ethu pondra araichigalai nichayam seiyapovathu kidayathu ... avargalavathu (melai nataar) seiyatume , avargal nichayam ulaguku than alipargal apadiyavathu payan paduthamal kidakum namathu maruthuvam payanuku varatum ... thanum seiyamal matravargalum seiyavidamal thadupathe tamizhanathu vadikaiya ? engu ungalal seiyamudinthal matum avatrai thadungal pls .

    ReplyDelete