Tuesday, 31 May 2011

சினிமா பாடல்..பரவசத்தில் மனுசப்புத்திரன்..

மனுஷ்ய புத்திரன் சினிமா பாடல்
மனுஷ்ய புத்திரனைத் தெரியுமா? தீவிர இலக்கியவாதி, உயிர்மை இதழ், பதிப்பகத்தின் ஆசிரியர், வெளியீட்டாளர், அப்புறம் கவிஞர். இவர் சினிமாப் படம் ஒன்றுக்கு பாடல் எழுதிய கதையை குமுதம் 27.05.09 இதழ் வெளியிட்டிருக்கிறது.
கமல் ஒரு நாள் நம்ம கவிஞரை தொலைபேசியில் அழைத்து வருமாறு கேட்டாராம். கவிஞரும் ஆச்சரியத்துடன் பார்க்கப் போனாராம். அங்கே கமல், அவர் மகள் ஸ்ருதி, இயக்குநர் சக்ரி மூவரும் இருந்தார்களாம். “உன்னைப் போல் ஒருவன்” படத்தில் ஒரு முக்கியமான பாடலை எழுதுமாறு கவிஞரை, உலக நாயகன் பணித்தாராம். உடனே கவிஞருக்கு இன்ப அதிர்ச்சியாம். அதுவும் கமல், மோகன்லால் என இரண்டு திரையுலகப் பிரம்மாக்களின் படத்தில் அறிமுகமென்றால் கேட்கணுமா? மகிழ்ச்சியோ மகிழ்ச்சி!
இயக்குநர் சக்ரி பாடல் இடம்பெறும் சூழலை விளக்க, படத்தின் இசையமைப்பாளர் ஸ்ருதி இந்தியில் ஒரு சரணத்தைப் பாடி இசையமைத்து அதைப்பற்றி விளக்கி கவிஞரிடன் கொடுத்தாராம். இந்தி தெரியாதென்றாலும் ஸ்ருதி அந்தப்பாடலில் வெளிப்படுத்திய ஆழ்ந்த துயரம் கவிஞரின் மனதைக் கசியச் செய்ததாம்.
அடுத்து வீட்டில் உட்கார்ந்து கவிஞர் எழுதிய பாடலை ஸ்ருதி அவரது மெட்டுக்கு கச்சிதமாகப் பொருந்துவதாக கூறியதும் கவிஞருக்கு சந்தோஷமாம். அடுத்து கமல் சினிமாவில் பாடும் பாடல்கள் கவிஞருக்கு சின்ன வயதிலேயே பிடிக்குமாம். எண்ணெற்ற பாவங்களும், உணர்ச்சிகளும் வெளிப்படும் குரலாம் அது. அந்தக் குரல்தான் இந்தப் பாடலைப் பாடவேண்டுமென கவிஞர் விரும்பினாராம். அந்த ஆசையும் நிறைவேறியதாம்.
ஸ்ருதியின் இசையில் கமல் அந்தப் பாடலை பாடிய போது மனதைக் கரையச் செய்யும் வேறொரு கலைப்படைப்பாக மாறியதைக் கண்டு கவிஞரின் கண்களில் நீர் தளும்பியதாம். அவருக்கே நீர் வந்துவிட்டதால் இந்தப் பாடல் நம் காலத்தின் மாபெரும் துயரை வெளிப்படுத்தும் பாடலாக எல்லோருடைய இதயத்தையும் தொடுமாம்.
அடுத்து ஸ்ருதியின் ஆளுமையை, ” பல்வேறு ஆற்றல்களைக் கொண்ட நுட்பமான பெண், சினிமாவைத் தாண்டி ஒரு ஆளுமையை உருவாக்கிக் கொண்டவர், மிகப்பெரிய சாதனைகளையும், வெற்றிகளையும் எதிர்காலத்தில் குவிப்பார்” என்றெல்லாம் கவிஞர் உணர்ச்சிகரமாக நெகிழ்ச்சியுடன் விவரிக்கிறார்.
இதற்கு முன்னரே ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற தீவிர இலக்கியவாதிகள் சினிமாவுக்கு வந்திருக்கின்றனர். இதில் மனுஷ்ய புத்திரன் சமீபத்திய வரவு. பொதுவில் இந்த இலக்கியவாதிகளெல்லாம் சினிமாக்காரராக மாறுவதற்கு முன்னர் சினிமாவை சந்தைக் கலாச்சாரம், சதையை விற்கும் வியாபாரம் என்று பயங்கரமாக தாக்குவார்கள். ஆனால் சான்ஸ் கிடைத்துவிட்டால் போதும் மற்ற சினிமா உலகினரை விட நா கூசும் அளவில் வாய்ப்பு கொடுத்த புண்ணியவான்களை பயங்கரமாக ஐஸ் வைப்பார்கள். இதற்கு வாரமலரில் கவிதை எழுதுபவர்கள் தேவலாம்.
மேற்கண்ட சம்பவத்தில் ஒரே ஒரு சினிமாப் பாடல் எழுத சான்ஸ் கிடைத்ததும் கமலையும் அவரது மகளையும் எத்தனை தடவை உணர்ச்சிவசப்பட்டு, நெகிழ்ச்சியுடன், நுட்பம், ஆற்றல் என்றெல்லாம் உருகுகிறார் பாருங்கள். அந்தக்காலத்தில் தமிழ்ப்புலவர்கள் தங்களுக்கு பொற்காசுகள் கொடுக்கும் மன்னர்களை இந்திரனே, சந்திரனே என்று வாய்நிறைய பாடுவார்கள். இந்தக்காலத்து சிற்றிலக்கியவாதிகளோ அந்த வார்த்தைகளை கொஞ்சம் மாற்றிப்போட்டு பாடுகிறார்கள். இதுதான் காலம்காலமாக தொடர்ந்து வரும் தமிழ் மரபு போலும்!

அந்த தாயே சந்திக்க விரும்புகிறிர்களா?


ங்கள் அம்மா பழமையான எண்ணங்களை விடுத்து புதுமையாக இருக்கவேண்டுமென்று எண்ணியிருக்கிறீர்களா?உங்கள் அம்மா வசதியாக சல்வார் அணிந்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணியிருக்கிறீர்களா?  ‘எதுக்கு இவ்ளோ கஷ்டபடறீங்க இந்த  நீளமுடிய வைச்சுக்கிட்டு, கட் பண்ணுங்க‌’ என்று சொல்லியிருக்கிறீர்களா? ‘யாராவது ஏதாவது சொல்வார்கள்’ என்பதற்காக சிரமம் கொடுத்தாலும் தலைமுடியை குறைக்காமல் இருப்பவரா உங்கள் அம்மா?
அப்படியானால், உங்களுக்கும் எனக்கும் ஒற்றுமை இருக்கிறது.
பெரியம்மாவும்,  அம்மாவும் மாடர்னாக இருக்கவேண்டும் என்று நானும் ஆசைப்பட்டிருக்கிறேன்.  பெரியம்மா பொட்டு வைத்துக்கொள்ள வேண்டுமென்று விரும்பியிருக்கிறேன்.  நான் சைக்கிள் ஓட்டும் வயதில், அவர்கள் இருவரும் சைக்கிள் ஓட்டவேண்டுமென்றும், ஸ்கூட்டி ஓட்டியபோது அவர்களும் ஸ்கூட்டி ஓட்டவேண்டுமென்றும் சண்டை போட்டிருக்கிறேன். எட்டாவது படிக்கும்போது ‘சைக்கிள் ஓட்டுங்க’ என்று அம்மாவை நானும் குட்டியும் விழ வைத்து முழங்கையில் காயம் வர வைத்திருக்கிறோம்.
‘டீச்சர்னா கொண்டைதான் போடணுமா, குட்டி முடிலே கூட க்ரோக்கடைல் க்ளிப் வைச்சு கொண்டை போடலாம்’ என்றெல்லாம் முடியை வெட்ட ஐடியா செய்திருக்கிறேன். ‘ரிடையர் ஆகிட்டு என்கூடதானே இருப்பீங்க, அப்போ நான் சொல்றதைதான் கேக்கணும்’ என்று  அதிகாரம் செய்திருக்கிறேன்.
பெரியம்மா, எண்ணத்தில் எனது நண்பர்களின் அம்மாக்களைவிட, முற்போக்காக இருந்தாலும், தோற்றத்தில் பழமையானவரே. எந்த சமூகக் கட்டுபாடுகளையும், அதன் நிழல் கூட என்மேல் படாமல் வளர்த்த பெரியம்மா , நான் கல்லூரி முடிக்கும் தருவாயில்தான் பொட்டிடவும், தலைமுடியை சிறிதாவது வெட்டவும் முன்வந்தார். ஏனெனில், அப்போது அவர் 45 வயதை தாண்டியிருந்தார். ‘வயசுக்கு வந்த பொண்ணு இருக்கு, இந்த அம்மா இப்படி ட்ரெஸ் பண்ணிக்குது’ என்று அந்த வயசுக்கு, இதற்கு மேல் எந்த சமூகமும்  எதுவும் சொல்லவிட முடியாதில்லையா!
தோற்றத்திற்கே, அதுவும் இந்த இருபத்தியொன்றாம் நூற்றாண்டு பெண்மணிக்கே இவ்வளவு  குழப்பங்கள் என்றால்….கடந்த நூற்றாண்டின் பெலகேயா நீலவ்னாவுக்கு எவ்வளவு உள்மனப் போராட்ட்ங்கள், குழப்பங்கள் இருந்திருக்கவேண்டும்?  ஒரு புரட்சியாளரின் தாயாக அவர் தன்னை எத்தனை மாற்றிக் கொண்டிருந்திருக்க வேண்டும்?ஒவ்வொன்றையும் மாற்றிக்கொள்ள எவ்வளவு கடந்து வந்திருக்க வேண்டும்? அந்த வலிநிறைந்த… இல்லை, பழமையை உதறிய வலிமை நிறைந்த போராட்டத் தருணங்களை, உணர்ச்சி ததும்பும் கதை சொல்லல் மூலம் நம்மையும் அந்த காலத்திற்குள் கொண்டு செல்கிறது மாக்சிம் கார்க்கியின் “தாய்” நாவல்.
கார்க்கியின் தாய்
மக்சிம் கார்க்கி
கல்லூரி காலத்தில் ரயில் பயணத்திற்கு வழித்துணையாக வீட்டிலிருந்த ‘தி மதர்’  நாவலை எடுத்து வாசித்திருந்தாலும் முதல் ஒன்பது அத்தியாயங்களுக்கு மேல் தாண்ட முடியவில்லை. அப்போது தாய் நாவலை என்னால் முழுமையாக ஏன் வாசிக்க முடியவில்லை என்று யோசித்து பார்க்கிறேன். அன்றைய இரசிய சமூகத்தின் கொந்தளிப்பான காலத்தைப் போன்றது இல்லை நம் சூழல். கட்டுப் பெட்டியாக மட்டுமே வாழ சபிக்கப்பட்டிருக்கும் தமிழ் சமூகத்தில் ஒரு இளம்பெண் தாய் நாவல் படிப்பதற்கான மன எழுச்சி இங்கே இருக்காதோ?
தற்போது, ‘தாயை’தமிழில் வாசித்தேன். அநேகமாக நாவல் முழுவதும் உண்மையாக நடந்தவையாகவே இருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. அல்லது அந்த காலத்தின் வரலாற்றுணர்வை மாக்சிக் கார்க்கி தனது கலைப் பார்வையின் மூலம் மிகவும் நெருங்கியிருக்கலாமென்றும் தோன்றுகிறது.
பாவெல் எனும் புரட்சியாளரின் தாய் நீலவ்னா கொஞ்சம் கொஞ்சமாக தன் நிலையிலிருந்து எப்படி தனது மகனின் கருத்துகளால் ஈர்க்கப்படுகிறாள்,  உண்மையை புரிந்து கொள்கிறாள்,  புரட்சியாளர்களுக்கு உதவ உத்வேகம் கொள்கிறாள், தனது வாழ்க்கையின் உண்மையான மகிழ்ச்சியை எப்படி கண்டடைகிறாள் என்பதை உணர்வு பொங்க சொல்லுவதோடு நம்மையும் அந்த தாயோடு பயணிக்க வைக்கிறது நாவல்.
ஒரு ஆலைகுடியிருப்பிலிருந்து ஆரம்பிக்கிறது பெலகேயா நீலவ்னாவின் கதை. புகைபோக்கிகளுடனும், தொழிலாளிகளை குறித்த நேரத்தில் வர ஆணையிடும் சங்குடனும் கம்பீரமாக நிற்கும் அத்தொழிற்சாலை அப்பகுதி மக்களை  நாள்முழுதும் சக்கையாக உறிஞ்சியெடுக்கிறது. அவர்களது வாழ்க்கையில் குறிப்பாக ஆண்களது சந்தோஷம் என்பது குடிப்பதும் சண்டையிடுவதுமே. நீலவ்னாவின் கணவனும் இதற்கு விதிவிலக்கல்ல. கிட்டதட்ட இருபது வருடங்கள்  கணவனிடம் அடியும் உதையும் வாங்கியே அவளது இளமைக்காலம் கழிந்துவிடுகிறது. அவளது கணவன் இறந்துவிட, நீலவ்னாவின் மகன் பாவெலும் அதே ஆலையில் வேலைக்குச் சேர்கிறான்.
பாவெலுக்குச் சில தோழர்களுடன் பரிச்சயம் ஏற்படுகிறது. அவனுக்குள் மாற்றங்கள் உண்டாகிறது. ஒரு தொழிலாளி கிட்டதட்ட முப்பது வருடங்கள் உழைத்து கண்ட பலன் ஒன்றுமில்லை, ஆலைதான் வளர்ச்சியடைகிறதே தவிர அவர்களது வாழ்க்கையில் கிஞ்சித்தும் மாறுதல் ஏற்படவில்லை, தமது அடிமை நிலையிலிருந்து விடுவித்துக் கொள்ள வேண்டுமென்றால் தொழிலாளிகள் இறுக்கமாக இணைவதே இதற்கு விடை என்பதை உணர்ந்துக்கொள்கிறான். நிறைய புத்தகங்களை வாசிக்கிறான். அவனோடு இன்னும் பல தோழர்கள் வீட்டிற்கு வருகிறார்கள். ஒன்றாக வாசிக்கிறார்கள். தங்களுக்குள் விவாதிக்கிறார்கள்.
பெலெகேயா நீலவ்னா இவை அனைத்தையும் பார்க்கிறாள். அவர்கள் பேசுவதைக் கேட்கிறாள். அதில் இருக்கும் நியாயத்தை உணர்ந்து கொள்கிறாள். தனது கடந்த கால வாழ்க்கையையும் அவளது தோழிகளின் வாழ்க்கையையும் நினைத்துப் பார்க்கிறாள். பாவெல் பேசுவதைக் குறித்து மகிழ்ச்சியும் புத்துணர்ச்சியை அடைந்தாலும் தனது மகனின் பாதுகாப்புக் குறித்து கலக்கமடைகிறாள். ஏனெனில், பாவெல் படிப்பது அத்தனையும் தடை செய்யப்பட்ட புத்தகங்கள். அவை தொழிலாளிகளின் உண்மை நிலையைப் பேசுவதோடு அந்த நிலைமைய மாற்றுவதற்கான வழியையும் போதிக்கின்றன.
சிறிது சிறிதாக பாவெலின் வீட்டில் கூட்டம் அதிகரிக்கிறது. எங்கிருந்துதான் மனிதர்கள் வருகிறார்களோ தெரியாது, குறித்த நேரத்திற்கு வந்துவிடுவார்கள். அவர்களுக்கு தேநீர் வைத்துக் கொடுப்பதும், வெந்நீர் கொடுப்பதும் அவர்கள் பேசுவதை கேட்பதுமே தாய்க்கு ஆனந்தம். தாயாலும் அவர்களைப் போல வாசிக்க முடிந்தால்…..பாவெலில் நண்பர் அந்திரேய் மூலமாக வாசிக்கக் கற்றுக்கொள்கிறாள் அந்தத் தாய்.
இதன் நடுவில், வீடு போலிசாரால் சோதனையிடப்படுகிறது. பாவெலின் நண்பரை கைது செய்து கொண்டு செல்கிறார்கள். இது தாயை அதிர்ச்சிகுள்ளாக்குகிறது. ஆனாலும், தொழிற்சாலைக்குள் பிரசுரங்கள் பரவுவதை யாராலும் தவிர்க்க முடியவில்லை. தொழிலாளிர்களிடையே பேசிய பேச்சுக்காக போலீஸ் பாவெலை கைது செய்கிறது. தாய்க்கு கதறியழ வேண்டும் போலிருக்கிறது. ஆனால், அமைதியாக ஏற்றுக்கொள்கிறாள்.  கொஞ்சம் கொஞ்சமாக தானே பிரயத்தனப்பட்டு புத்தகங்களை வாசிக்கிறாள். பாவெலின் நண்பர்களுக்கு பிரசுரங்களை ஆலைக்குள் தொழிலாளிகளிடையே தொடர்ந்து விநியோகிப்பது எப்படியென்று தெரியவில்லை.
தாய் இவ்வேலையை செய்ய முன்வருகிறாள். ஒருவேளை விநியோகிப்பது நின்று விட்டால்  செய்தது பாவெல்தான் என்று நிரூபணமாகிவிடும். இதற்கு ஒரேவழி, பிரசுரங்கள் தொடர்ந்து ஆலைக்குள் தொழிலாளிகளுக்குக் கிடைக்கச் செய்வதுதான் என்று நண்பர்கள் பேசுவதைக் கேட்டதும் அவள் அவ்வேலையை செய்வதாக முன்வருகிறாள்.
ஆப்பம் விற்கும் பெண்ணுடன் உதவி செய்பவராக தொழிற்சாலைக்குள் செல்கிறாள் தாய். பிரசுரங்கள் தொழிலாளிகளின் கைகளை அடைகின்றன.
இதில் தாய்க்கு பெரிதும் மகிழ்ச்சி. தனது மகனிடம் இதைப் பற்றி உடனே சொல்லவேண்டும் என்றும் அவன் இதை அறிந்தால் எவ்வளவு மகிழ்ச்சியடைவான் என்றும் எண்ணுகிறாள். இரவுகளில் உறங்கப் போகும் முன் இயேசுவிடம் இந்தக் குழந்தைகளுக்காக பிரார்த்தனை செய்யவும் தயங்குவதில்லை. கொஞ்சம் கொஞ்சமாக தாய் தனது மகனின் புதிய மார்க்கத்திலிருக்கும் உண்மையை அறிந்துக்கொள்கிறாள். அதுவே சத்தியம் என்றும் உழைக்கும் மக்கள் அனைவரும் இதனை உணர்ந்துக்கொள்ள வேண்டும் என்றும் எண்ணுகிறாள். பாவெலும் சிறையிலிருந்து வந்துவிடுகிறான்.
மேநாள் நெருங்குகிறது.
கார்க்கியின் தாய்
'தாய்' திரைப்படத்திலிருந்து
மேநாள் பேரணிக்கான வேலைகள் நடக்கின்றன. மகனின் மேலுள்ள  பாசத்தினால் தாய்க்கு அழுகை முட்டுகிறது. ஏனெனில், பேரணியை தலைமை தாங்கி நடத்தப் போவது பாவெல். போலிஸ் சிறைக்கு அனுப்பினாலும் அனுப்பலாம். தாயால் சிலநேரங்களில் ஒரு தாயாக நடந்துக்கொள்வதை தவிர்க்க முடிவதில்லை. ஆனாலும், தாங்கிக் கொள்கிறாள்.
பெரும் எழுச்சியுடன் மேநாள் பேரணி நடக்கிறது. பெரும் கூட்டம் திரள்கிறது. தாயால் பாவெல் அருகில் கூட நெருங்க முடியவில்லை. ஆனால், பாவெல் தனது மகன் என்று தாயின் மனம் மகிழ்ச்சி கொள்கிறது. பேரணியில் பாவெல் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்படுவதோடு முதல் பாகம் முடிகிறது.
இரண்டாவது பாகத்தில், தாய் ஒரு புரட்சியாளராக பரிணமிப்பதும், நாட்டின் பல பகுதிகளுக்கு பயணம் சென்று பிரசுரங்களை சேர்ப்பிப்பதும், தனது மகனைப் போல பல புரட்சியாளர்களைச் சந்திப்பதும்  உணர்வுமிக்க வகையில் விவரிக்கப்படுகிறது. உழைக்கும் மக்களும்,விவசாயிகளும் ஒன்று சேர்ந்தால்தான் முதலாளித்துவத்தை ஒழிக்க முடியும் என்றும் அதில்தான் மக்களின் விடுதலை இருக்கிறது என்றும் தாய் உண்ர்ந்துக்கொள்கிறாள். புதிது புதிதாக மனிதர்களைச் சந்திக்கிறாள். ஆரம்பத்தில் அவளுக்கு ஏற்படும் தயக்கங்களும், அவர்களுடன் நட்பு கொள்வதும் மிக இயல்பாக எழுதப்பட்டிருக்கிறது.
வாசிக்கும் நமக்கு, அநேக இடங்களில் உணர்ச்சிப் பெருக்கால் கண்களில் நீர் கோர்த்துக்கொள்கிறது.  மக்களின் விடுதலைக்காக தங்கள் இன்னுயிரையும் ஈந்த அநேக இளைஞர்கள்……புதிய உலகை கனவு கண்ட இளைஞர்கள்….
வாசித்துக்கொண்டிருந்தபோது, ஒரு கணத்தில்,  நானும் அந்தத் தாயைப் போல இருக்க மாட்டோமா என்ற ஆசை தோன்றியது. ஏனெனில், இதுநாள் வரை வாழ்ந்து வந்த வாழ்க்கையின் பிழைப்புவாதம் பின்னோக்கி இழுக்க, முற்றிலும் புதுமையான சத்தியமான கருத்துகள் நம்மை முன்னோக்கிச் இழுக்க நமக்குள் நடைபெறும் ஒரு சிறு போராட்டத்தைத்தான் தாயும்  பிரதிபலிப்பதாகத் தோன்றியது. அந்த போராட்டத்தை வாழாமல் நாமும் தாயின் உணர்வை அடைய முடியாது என்றே தோன்றுகிறது.
இவை நடுவில்,  அந்தத் தோழர்களுக்கிடையிலான வாழ்க்கை முறை, அவர்களுக்கிடையிலான காதல், இசை எல்லாம் வெகு இயல்பாக வந்து செல்கிறது. உடல்நிலை சரியில்லாத ஒரு தோழரின் மரணம், அதன் பாதிப்புகள், உழைத்து ஓடாய் தேய்ந்த மனிதனின் வாயிலிருந்து வரும் வார்த்தைகள்,  தாய் ட்ரங்கு பெட்டியில் பிரசுரங்களை கிராமம் கிராமமாக எடுத்துச் சென்று முஜீக்குகளிடம் சேர்ப்பது, தாயை அவர்கள் இனம் கண்டுக்கொள்வது என்று இரண்டாம் பாகம் முழுக்க தாயின் புரட்சிக்கான பயணம் கண்முன் விரிகிறது. இவை நிச்சயம் உண்மை நிகழ்ச்சிகளாகத்தான் நடந்தேறியிருக்க வேண்டும்.
ஆச்சரியப்படுத்தியதென்னவெனில், மக்களனைவரும் பிரசுரங்களை வாசிக்க ஆர்வமாக இருப்பதும், பிரசுரங்கள் கிடைக்காதாவென்று ஏங்குவதும் படிப்பறிவில்லாதவர்களும் கூட தங்களின் அவல நிலைக்கான  உண்மைக் காரணத்தை  அறிந்துக்கொள்ள விரும்புவதும்,  புரட்சிதான்  தீர்வென்று நம்புவதும்தான்.
இன்று நாம் அந்நூற்றாண்டு மக்களைப் போல இல்லை. பலவகைகளில் முன்னே வந்துவிட்டோம். ஆனாலும், அவர்களை போன்ற சிந்தனைகளோ அல்லது சமூகமயமான  தீர்வுகளை நோக்கியோ செல்லாமல் போராட்டக் குணத்தை இழந்து நிற்கிறோம்.
ஒருவேளை பாவெலும்,அவனது நண்பர்களும்,  தாயும் சேர்ந்து கஷ்டபடுபவர்களுக்கு  உணவு கொடுத்தோ அல்லது செருப்பில்லாமல் கஷ்டபடுபவர்க்ளுக்கு செருப்பு வாங்கித் தந்தோ, வேலை வாங்கித்தந்தோ தங்கள் தொண்டுள்ளத்தை நிரூபித்திருக்கலாம். ஒன்றிரண்டு மாதங்களிலோ வருடங்களிலோ அந்த தொண்டும் அணைந்து போயிருக்கும். ஆனால், எதற்கும் சமரசப்படுத்திக்கொள்ளாமல்  மனிதகுல  விடுதலைதான் சமூகமயமான தீர்வு என்று ஏன் தங்கள் வாழ்வையே அர்ப்பணிக்க‌ வேண்டும்?எத்தனையோ ஆபத்துகள் இருப்பது தெரிந்தாலும் அச்செயல்களில் ஏன் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்?
இன்றும் கூட, எண்ணற்ற தோழர்கள் கொள்கை மீது கொண்ட பற்றால்  மனிதகுல விடுதலைக்காக  வாழ்க்கையை முழுவதுமாக அர்ப்பணித்திருக்கிறார்கள். கைது செய்யப்படுவோம் என்று தெரிந்தும் கூட, சற்றும் அஞ்சாமல், சாதிய அடக்குமுறையை எதிர்த்து, அரசாங்கத்தை எதிர்த்து வீதியில் இறங்கி போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள். நாம் வசதி என்று கருதும் அனைத்தையும் அற்பமாக எண்ணி  உதறி தள்ளியிருக்கிறார்கள்.ஆனால் ஹார்வார்டுகளிலும், ஆக்ஸ்போர்டுகளிலும் படித்து வந்த  டாக்டரேட் மேதைகளோ நம்மை சுரண்டுகிறார்கள். நமது உயிரை பணயம் வைக்கிறார்கள். பள்ளியை/கல்லூரியைத் தாண்டாத தோழர்கள், அல்லது அப்படி படித்திருந்தும் அதை தூக்கியெறிந்துதானே சமூகத்திற்காக/நமக்காகக் குரல் கொடுக்கிறார்கள்?
ஆனால், நம்மில் எத்தனை பேர் இதனை உணர்ந்திருக்கிறோம்? ஒன்றிரண்டு பேர்களுக்கு நம்மாலானதை பிச்சையிடுவதைப் போல செய்துவிட்டு தானப்பிரபு பட்டம் கட்டிக்கொள்கிறோம். புரட்சி செய்துவிட்டதைப் போல இறுமாந்து போகிறோம். நாம் சுயநலவாதிகளாக இருந்து கொண்டு, அந்த சுயநலத்திற்கும் காரணம் காட்டிக்கொண்டு தோழர்களை பிழைக்கத் தெரியாதவர்களென்றும்,  ஆக்கப்பூர்வமாக எதையும் செய்யவில்லையென்றும் அவர்களை இழிவுபடுத்தியத்தைத் தவிர வேறு என்ன?
தாயின் உலகில் ஊக்கத்துடன் பயணம் செல்லுங்கள். புதிய மனிதானாகவும், வாழ்க்கையின் பொருளை உணர்ந்தவராகவும் திரும்புவீர்கள்.

Monday, 30 May 2011

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உப்பு மோகம் குறை!


தண்ணீரிலிருந்துதான் சுவை தோன்றுகிறது. அது முதலில் தனிப்பட்ட முறையில் அறியப்படாத ஒரு பொருள். வருடம் என்ற காலம், ஆறு பருவங்களாகப் பிரிக்கப்பட்டிருப்பதாலும் பஞ்ச மஹா பூதங்களான நிலம், நீர், நெருப்பு, வாயு, ஆகாயம் இவற்றின் குணங்களின் ஏற்றத் தாழ்வின் கலப்பினாலும் சுவை என்பது இனிப்பு முதலான ஆறு தனித்த தனிச் சுவையாகத் தோற்றம் அடைகிறது.

நீர் மற்றும் நெருப்பின் அதிகச் சேர்க்கையினால் ஏற்படும் சுவை உப்பு. உப்புச் சுவை உமிழ் நீரை பெருகச் செய்கிறது. உணவிற்குச் சுவையூட்டுகிறது. அதிக சேர்க்கை தொண்டையையும் தாடைகளையும் எரிக்கிறது. உங்களைப் பொறுத்தவரை உப்புச் சுவையிலுள்ள நீர் மற்றும் நெருப்பின் தேவை, உடலில் ஏதோ ஒரு பகுதியின் தேய்மானத்தை ஈடுகட்டுவதற்காக, அதன் மீது நாட்டத்தை ஏற்படுத்துகிறது.

உப்புச் சரியான அளவில் சேர்க்கும் போது, பசித்தீயைத் தூண்டுகிறது. நாக்கிலுள்ள ருசி கோளங்களில் படிந்துள்ள தேவையற்ற அழுக்குகளை நீக்கி சுத்தப்படுத்தி சுவையை உணரும்படி செய்கிறது. உண்ட உணவைச் சீரணிக்க உதவுகிறது. வயிற்றில் ஈரப்பசையை ஏற்படுத்துகிறது. குடல் முழுவதும் எண்ணெய்ப் பசையை ஏற்படுத்தி குடலின் இயற்கையான அசைவுகளுக்கு உதவுகிறது.

வியர்வை கோளங்களைச் சுறுசுறுப்புடன் இயங்கச் செய்கிறது. குடலில் சேர்ந்துள்ள இறுகிய மலத்தை உடைத்து வெளியேற்றுகிறது. உடல் முழுவதும் விரைவில் பரவிவிடும் திறன் உடையது. உடலிலுள்ள எண்ணற்ற ஓட்டைகளைச் சுத்தப்படுத்திவிடும். ஊடுருவும் தன்மையும் சூடான வீரியமும் உள்ள உப்புச் சுவையின் நன்மைகளை நீங்கள் அடைந்தாலும் அதன் அதிக அளவிலுள்ள சேர்க்கையினால் ஏற்படும் கெடுதிகளில்- தலை வழுக்கை, நரை, நாவறட்சி, உடல் எரிச்சல், மயக்கம், தோலின் மேல் பரவும் நோய்கள், வீக்கம், இசிவு எனும் கை,கால்களில் உண்டாகும் வலிப்பு நோய், பித்தம், ரத்தத்தில் கலப்பதால் ஏற்படும் ரத்த பித்த நோய் போன்றவற்றை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும்.

உணவில் நாம் பொதுவாக கடலுப்பைத்தான் பயன்படுத்துகிறோம். பொதுவாக உப்பு என்றால் இந்துப்பையே பயன்படுத்த வேண்டும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. ஆனால் இன்று அது பயன்பாட்டில் இல்லை. இந்துப்பு சிறிதளவு சுவையுடையது. ஆண்மையை வளர்ப்பது. மனதிற்கு நல்லது. வாதம், பித்தம், கபம் மூன்றையும் போக்கவல்லது. இலேசானது, சிறிதளவு உஷ்ணமுள்ளது. நாட்டு மருந்துக் கடைகளில் இந்துப்பு கிடைக்கிறது.

அதனால் உப்பின் மீதுள்ள மோகத்தை நீங்கள் முடிந்தவரை குறைத்துக் கொள்வது நல்லது. அப்படி முடியாமல் போனால் உப்பு வகைகளில் சிறந்ததான இந்துப்பை நீங்கள் பயன்படுத்தலாம். அயோடின் சேர்க்கை தேவை என்று கூறி அதை உப்பில் சேர்த்து விற்பதால் அதன் பயன்பாட்டையும் நாம் உதாசீனப்படுத்த இயலாது என்பதால் நீங்கள் அயோடின் கலந்த உப்பைச் சமையலுக்கும் சாப்பிடும்போது மேலும் உப்பு வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், இந்துப்பையும் சேர்க்கலாம்.

கடலுப்பு சீரண இறுதியில் இனிப்பாக மாறிவிடும். ஆனாலும் அது விரைவில் செரிப்பதில்லை. அதன் அதிக அளவிலான சேர்க்கை கபம் எனும் தோஷத்தைத் தூண்டுகிறது. இந்துப்பு இதற்கு எதிர்மறையான குணங்களைக் கொண்டுள்ளதால் கடலுப்பினால் ஏற்படும் கெடுதல்களைக் கூட இந்துப்பு குறைத்து விடக்கூடும். இதைக் கருத்தில் கொண்டுதான் சில ஆயுர்வேத மருந்துகளாகிய அஷ்ட சூரணம், ஹிங்குவசாதி, வைச்வாநரம் போன்றவற்றில் இந்துப்பு சேர்க்கப்படுகிறது.


ரத்த சோகையை தடுக்கும் கீரைகள்


கீரைகள் சத்துமிக்கவை என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால் கீரை வாங்கி சமைத்து சாப்பிட்டால் மட்டும் நமக்கு முழு பலன் கிடைத்துவிடாது. கீரையின் சத்துக்கள் அப்படியே உடலுக்கு கிடைக்க என்ன செய்ய வேண்டும்?
இந்தியாவில் பல வகை கீரைகள் உணவாக உட்கொள்ளப்படுகிறது. அரைக் கீரை, பாலக் கீரை, தண்டுக் கீரை, புளிச்சக் கீரை, வெந்தயக் கீரை, முருங்கைக் கீரை மற்றும் புதினா ஆகியவை அதிக மக்களின் விருப்பப் பட்டியலில் இடம் பிடித்தவை..
கீரையில் அப்படி என்ன இருக்கிறது...
* கீரைகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் ரத்தசோகை வருவதை தடுத்து, நல்ல உடல்நலனைப் பெறலாம்.
* கீரைகள் சுண்ணாம்புச் சத்து, பீட்டா கரோடின், வைட்டமின் `சி' போன்றவற்றை அதிகம் கொண்ட முக்கிய மூலப்பொருளாகும்.
* இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் 5 வயதிற்குட்பட்ட சுமார் 30 ஆயிரம் சிறு பிள்ளைகள், வைட்டமின் ஏ, குறைபாட்டினால் கண்பார்வை இழக்கும் நிலை ஏற்படுகிறது. கீரைகளில் உள்ள கரோடின் என்னும் பொருளானது உடலில் வைட்டமின் `ஏ' ஆக மாறுவதால் பார்வை இழக்கும் நிலை தடுக்கப்படுகிறது.
* கீரைகள் `பி காம்ப்ளக்ஸ்' வைட்டமின்களையும் கொண்டுள்ளது.
சாப்பிட வேண்டிய அளவு
இவ்வளவு சத்துக்கள் நிறைந்த கீரையை மனிதர்கள் தினமும் உட்கொள்வது நல்லது. ஒவ்வொருவரும் தினமும் சாப்பிட வேண்டிய கீரையின் பரிந்துரைக்கப்பட்ட அளவு இதுதான்...
* பெண்களுக்கு 100 கிராம், ஆண்களுக்கு 40 கிராம்.
* பள்ளி செல்லும் (4-6 வயது) சிறுவர்களுக்கு 50 கிராம்.
* 10 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் இருபாலருக்கும் 50 கிராம்.
* கீரைகளை நன்கு சமைத்து, மசித்து கீரையிலுள்ள நார் பொருட்களை நீக்கிய பின்னரே சிறு குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.
* பாக்டீரியா கிருமிகள், சிறு பூச்சிகள் மற்றும் மாசுப்பொருட்கள், தண்ணீர் அல்லது மண்ணின் மூலம் கீரைகள் மாசுபட வாய்ப்பிருக்கிறது. எனவே நன்கு கழுவி சுத்தம் செய்யாமல் கீரையை உபயோகிக்கக் கூடாது. இல்லாவிட்டால் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகள் வரலாம்.
சத்துக்கள் முழுவதும் கிடைக்க...
* கீரையில் உள்ள சத்துக்கள் முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை நீண்ட நேரம் சமைப்பதை தவிர்க்க வேண்டும். அதிக நேரம் சமைப்பதினால் கீரையிலுள்ள முக்கிய சத்துப்பொருளான கரோட்டின் சிதைந்து விடும். கரோட்டின் பார்வைத்திறனுக்கு உதவும் சத்துப்பொருளாகும்.
* கீரைகளை சமைக்க பயன்படுத்தும் தண்ணீரை கொட்டிவிடக் கூடாது. கீரைகளை சமைக்கும் பாத்திரங்களை சமைக்கும்போது மூடி வைக்க வேண்டும்.
* கீரைகளை வெயிலில் உலர்த்தக் கூடாது. அப்படி செய்தால் அவற்றிலுள்ள கரோட்டீன்கள் வீணாகி விடும்.
* கீரைகளை பொரிப்பதையும் தவிர்க்க வேண்டும்.
* கோடையில் குளிர்ச்சி தரும் கீரைகளை சமைத்துச் சாப்பிடுங்கள்.
* நாள்தோறும் நம் உடலுக்கு அவசியமான சத்தாக சேர்க்கப்பட வேண்டிய கீரையை நாமும் வீட்டுத் தோட்டத்தில் வளர்த்தால் நலமே!

நகங்கள்..சிறு விளக்கம்.


நகங்கள் தேவையற்ற ஒன்றல்ல. அவை அழகிலும், ஆரோக்கியத்திலும் பங்கு வகிக்கின்றன. நகங்களை நலமாக வைத்துக் கொள்ள பின்பற்ற வேண்டிய விஷயங்கள் ஏராளமாக உள்ளன.

நகங்களை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். குழி பறிப்பது, பழங்களின் தோல் உரிப்பது, கண்டவற்றையும் சுரண்டிக் கொண்டிருப்பது போன்ற விஷயங்களுக்கு நகங்களைப் பயன்படுத்தக்கூடாது. இது நகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு, கிருமிகள் தொற்றி நோய் ஏற்படவும் காரணமாகிறது.

இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அதிகப்படியாக வளர்ந்திருக்கும் நகங்களை நறுக்கி விடலாம்.

சருமத்திற்கு பயன்படுத்தும் எண்ணெயை நகங்களிலும் தடவலாம். இது நகங்களின் மேற்புற செல்கள் பாதிக்கப்படுவதை தடுத்து நகங்களை மிருதுவாக வைத்திருக்கும். சமையல் அறை, தோட்டங்கள், கழிவறைகளில் பிளீச்சிங் பவுடர், அம்மோனியா மற்றும் ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படும்போது கண்டிப்பாக கைகளில் உறைகள் அணிந்திருந்தால் நகங்களைப் பாதுகாக்கலாம்.

பசை, தண்ணீரில் கலந்து உபயோகிக்கும் பசை ஆகியவை பயன்படுத்தும் போது, அவை நகங்களில் ஒட்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவை நகங்களை வெகுவாக பாதிக்கும்.

ரசாயனங்கள் சேர்த்த நகப்பூச்சுகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இயற்கை மருதாணியை வேண்டுமானால் நக அலங்காரத்திற்கு பயன்படுத்தலாம்.

நகங்களைப் பற்றிய இன்னும் சில பொய் நம்பிக்கைகளும், உண்மைகளும் இருக்கின்றன. பொதுவாக நகங்கள் தேவையற்று வளரும் ஒரு பொருளாக கருதப்படுகின்றன. ஆனால் அது அப்படியல்ல. நகமே ஒரு கழிவுப் பொருள் தான்.
கெரட்டின் என்னும் உடற்கழிவு தான் நகமாக வளர்கிறது. கழிவுகள் நீங்குவது உடலுக்கு நலம்தானே? நகத்தில் மேட்ரிக்ஸ், நெயில்ரூட் என்று இரு முக்கிய பாகங்கள் உண்டு. மேட்ரிக்ஸ் நகத்தின் இதயப் பகுதியாகும். இதுதான் நக செல்கள் வளர காரணமாக இருக்கிறது. மேட்ரிக்ஸ் பாதித்தால் தொடர்ந்து நகம் சேதத்துடனேயே வளரும்.

நகங்களும் சுவாசிக்கும், வியர்வையை வெளியிடும் என்றால் நம்புவீர்களா? ஆனால் இவை உண்மை தான்.

வெளிப்புறம் நகங்களாக இருக்கும் நெயில் பிளேட் கழிவுப் பொருள் என்பதால் அதற்கு ஒக்சிஜன் தேவையில்லை. ஆனால் உட்புறம் இருக்கும் மேட்ரிக்ஸ், நெயில் பெட், கிஞ்டிகிள் போன்ற பாகங்களுக்கு ஆக்சிஜன் அவசியம். எனவே அவை தேவையான ஒக்சிஜனை சுவாசத்தின் மூலம் பெற்றுக் கொள்கிறது. இதில் கிடிகிள், விரல் பகுதிக்கு அதிக இரத்த ஓட்டம் கிடைக்க உதவுகிறது.

நகத்தில் 18 சதவீத அளவில் ஈரப்பதம் இருக்கிறது. எனவே நகங்கள் குறிப்பிட்ட அளவில் வியர்வையையும் வெளியேற்றும். நகங்கள் நமது ஆரோக்கியம் காட்டும் 'மொனிட்டர்' போலவும் செயல்படும். நகங்களின் நிறம் மாறுவதைக் கொண்டு உடல் நலம் பாதிக்கப்படுவதைக் கண்டுபிடிக்கலாம்.

நகங்களில் ஏற்படும் சில மாற்றங்களும், அவை சொல்லும் உண்மைகளும் வருமாறு:
நகங்கள் உடைசலாக வளர்கிறதா? மேட்ரிக்ஸ் பகுதி பாதிக்கப்பட்டிருப்பது இதற்கு காரணமாக இருக்கலாம். சிறுநீரக பிரச்சினை, தைராய்ட் நோய் போன்றவற்றின் அறிகுறியாகவும் இது கருதப்படுகிறது.

நகங்கள் கடினமாகவும், அகன்றும் வளர்ந்தால் உடம்பில் பிராணவாயு பற்றாக்குறை என்று அர்த்தம். இதைக் கவனிக்காவிட்டால் நுரையீரல் நோய்கள் வரலாம்.

மங்கலான நீண்ட கோடுகள் தென்பட்டால் மூட்டுவலி ஏற்படும்.

நகங்கள் வெளிறி இருந்தால் இரத்தசோகை, சிறுநீரகம் தொடர்பான நோய்கள் இருக்கலாம்.

நகங்கள் சிவந்து காணப்பட்டால் மாரடைப்பின் அடையாளம்.

கீறல்- குழிகள் விழுந்தால் சரும பிரச்சினைகளின் அறிகுறி.

நீலநிறமாக மாறிவிட்டால் இரத்தத்தில் ஒக்சிஜன் அளவு குறைவாக உள்ளது என்று அர்த்தம். இந்த அறிகுறி ஆஸ்துமா, இதயநோய்களைக் கொண்டு வரலாம்.

நகங்கள் உள்நோக்கி குழிந்திருந்தால் அல்லது கருமை நிறமாக காணப்பட்டால் இரும்புச்சத்து, விட்டமின் பி 12 பற்றாக்குறை என்று பொருள்.

மஞ்சள் நிறம் தென்பட்டால் கல்லீரல் பாதிப்பின் அறிகுறி.

விரலுக்கு கிரீடமான நகங்களை, வீண் என்று நினைக்காமல் கவனித்துப் பராமரிப்பது உடல் நலத்துக்கு நல்லது.


சிறுநீரகக் கல்...சிறு விளக்கம்.

உடலில் எந்த இடத்திலும் கல் உருவாகலாம். சிறுநீர் பையில், சிறுநீரகத்தில், சிறுநீர் பாதையில் கல் உருவாவது சகஜம். இந்தியாவில் 80 லட்சம் மக்கள் வரை, இந்த உபாதையால் பாதிக்கப்படுகின்றனர்.

'கிட்னி ஸ்டோன்’ என்பதால், அது சிறுநீரகத்தில் மட்டும் தான் ஏற்படும் என்று கருதக் கூடாது. சிறுநீரை வெளியேற்றக் கொண்டு செல்லும் பாதையில் ஏற்படலாம். சிறுநீரைத் தேக்கி வைக்கும் பையில் ஏற்படலாம். சிறுநீரை வெளியேற்றும் இறுதி உறுப்பில் ஏற்படலாம். மிகச்சிறிய கல்லாகவும் தோன்றலாம்; ஒரு எலுமிச்சை அளவுக்கும் ஏற்படலாம். கல்லின் அளவு பொறுத்து, வலியின் தீவிரம் இருக்கும் எனக் கருதுவது தவறு. பெரிய கல், வலியே இல்லாமல் வளரலாம். கண்ணுக்கே தெரியாத சிறிய கல், அதிக வலி கொடுக்கலாம். கல் உருவாவதால் ஏற்படும் வலியை, பிரசவ வலியோடு ஒப்பிடலாம். எவ்வளவு பெரிய பலசாலியையும் ஆட்டிப் போட்டு விடும் இந்த வலி.

சிறுநீர் செல்வதில் சிரமம் ஏற்படுவதில் துவங்கி, இருபக்க இடுப்பின் பின் பக்கத்திலிருந்து அலை போல வலி உருவாகி, பிறப்புறுப்பு வரை பரவும். சிரமப்பட்டு வெளியேற்றப்படும் சிறுநீர் அதிக மஞ்சள் நிறத்துடன் காணப்படும். சிலருக்கு சொட்டு சொட்டாகவும் வெளியேறும். இதனால் தொற்று ஏற்பட்டால், காய்ச்சல் உண்டாகும். வெப்ப பகுதிகளில் வசிப்போருக்கு, உடலில் நீர்ச்சத்து குறையும் போது, இதுபோன்று கற்கள் அடிக்கடி ஏற்படும். 40 – 60 வயதுள்ள ஆண்களிடையே இந்த உபாதை அதிகம் காணப்படுகிறது.

பரம்பரையாகவும் இது ஏற்படலாம். கல் உருவாகி, சிகிச்சை எடுத்து கொண்டோரில் 50 சதவீதத்தினருக்கு, 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கல் தோன்ற வாய்ப்பு உண்டு. உடலில் உள்ள மொத்த ரத்தமும், சிறுநீரகம் வழியே செல்கிறது. ரத்தத்திலிருந்து நீரையும், ரசாயனங்களையும், சிறுநீரகம் பிரிக்கிறது. ரசாயனங்கள் கல் ஆகாமல் இருக்க, சிறுநீரகமும் சில கரைப்பான்களை சுரக்கிறது. அதையும் மீறி தோன்றும் சிறு கல்கள், ஒன்றாகச் சேர்ந்து பெரிய கல்லாக உருவாகி விடுகின்றன. சிறுநீரகத்தில் கரைப்பான்கள் சுரப்பதில், பரம்பரையாகத் தடை கொண்டவர்களுக்கு, கல் உருவாவது சகஜம். அடிக்கடி தொற்று ஏற்பட்டாலோ, சிறுநீர் அடர்த்தியாக இருந்தாலோ, அடிக்கடி வெகுநேரம் சிறுநீரை அடக்குபவர்களுக்கோ கூட, கரைப்பான்கள் சுரப்பதில் பிரச்னை ஏற்படும். மூட்டு வீக்கத்தால் பாதிக்கப்படுபவர்களின் உடலில் உப்பு அதிகம் சுரப்பதாலும், சிறுநீரகத்தில் கல் உருவாகும்.

எந்த அறிகுறியும் தெரியாத சிறுநீரகக் கல்லை, அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் அல்லது எக்ஸ்-ரே எடுத்து பார்த்து அறிந்து கொள்ளலாம். வலி போன்ற பொதுவான அறிகுறிகளைச் சொன்னாலே, கல் இருக்கிறதா என்பதை பரிசோதிக்க, இது போன்ற பரிசோதனைகளை எடுக்குமாறு, டாக்டர் பரிந்துரைப்பார். சில நேரங்களில், ஐ.வி.பி., என்ற, நரம்பில் சாயம் ஏற்றி, கல் இருக்கும் இடத்தையும், அதன் அளவையும் கண்டறியும் பரிசோதனையும் செய்யப்படுகிறது. கற்களை நீக்க, பெரும்பாலான நேரங்களில் கடுமையான சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. நாள் ஒன்றுக்கு, நான்கைந்து லிட்டர் தண்ணீர் குடிப்பவருக்கு, சிறுநீரகத்தில் கல் இருந்தாலும், சிறுநீர் மூலம் வெளியேறி விடும். வலி ஏற்பட்டால், வலி நிவாரணி மாத்திரைகள் சாப்பிடலாம். கல்லில் உள்ள ரசாயனங்கள் குறித்து அறிந்து கொண்டால், அதை வைத்து, மருந்து, உணவுக் கட்டுப்பாடுகளை டாக்டர் பரிந்துரைப்பார். தொடர்ந்து கடும் வலி, மிகப்பெரிய கல் ஆகியவை இருந்தால், அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே அதை அகற்ற முடியும். கல் வளர்ந்து கொண்டே இருப்பது, தொடர் தொற்று ஆகியவை, சிறுநீரகத்தை பாதிக்கும் என்பதால், இதுபோன்ற நிலைகளில், அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. சிறுநீரகத்தை திறந்து, அறுவை சிகிச்சை மேற்கொள்வது இல்லை. கல் இருக்கும் இடத்தில், உடலின் மேற்புறம், மின் அலைகள் உருவாக்கப்படுகிறது. இந்த அதிர்வலைகள், கல்லைத் தாக்கி, அதை உடைக்கின்றன. பொடியான கற்கள், சிறுநீர் வழியே வெளியேறி விடும். சிறுநீர் பாதையை கல் அடைத்து கொண்டால், செயற்கை குழாய் பொருத்தி கல்லை அகற்றலாம். வேறு சிகிச்சை முறைகளும் உள்ளன. இந்த உபாதை, 21ம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கருத வேண்டாம். 7,000 ஆண்டுக்கு முன்னால் இறந்த மனிதர்களிடமும் இது காணப்பட்டது. தற்போது சிறு வயதினர், குறிப்பாக குழந்தைகளிடம் இந்த உபாதை காணப்படுகிறது. சீனாவில், பால் பவுடரில் உள்ள மெலாமைன் என்ற பொருளால், குழந்தைகளுக்கு சிறுநீரகக் கல் உருவாவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மற்ற நாடுகளில், குழந்தைகள் அதிக உடல் எடையுடன் இருப்பது, உடல் பயிற்சி இல்லாமல் இருப்பது, காற்றூட்டப்பட்ட குளிர்பானங்களை குடிப்பது போன்ற காரணங்களால், கல் உருவாகிறது.

சிறுநீரகக் கல் உருவாவதை தடுக்க இயற்கை வழிமுறைகள் உள்ளன.

பச்சை டீ அல்லது பால் கலக்காத டீ குடிப்பது நல்ல பலனைத் தரும். அதில் உள்ள ஆன்டியாக்சிடன்ட் தன்மை, சிறுநீரகத்தில் தொற்று ஏற்படாமல் தடுக்கும். சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கும்.

சாத்துக்குடி, எலுமிச்சை சாறு குடிப்பது நல்லது. அவற்றில் உள்ள அமிலம், சிறுநீரில் கலப்பதால், கல் உருவாகும் வாய்ப்பைத் தடுக்கிறது.

வாழைத் தண்டு சாப்பிடுவது, அதன் சாறை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை குடிப்பது ஆகியவை நல்ல பலனைத் தரும்.

மட்டன், மீன் சாப்பிடுவதைக் குறைப்பதும் கல் உருவாவதை தடுக்கும்.

தினமும் இரண்டரை முதல் மூன்று லிட்டர் தண்ணீர் பருகுவது மிக மிக நல்லது. கூடவே, தினமும் உடற்பயிற்சியும் செய்ய வேண்டும். தூங்க செல்வதற்கு முன், ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்து விட்டு தூங்குவ துநல்லது

Sunday, 29 May 2011

சிறுமியர் திருமணம்...ஒரு பார்வை.

“எனக்கு திருமணம் நடந்தபோது என்னைச் சுற்றி என்ன நடந்துக்கொண்டிருக்கிறது என்றே என்னால் அறிய முடியவில்லை” என்கிறார் மனியம்மா. ”அப்போது எனக்கு ஆறு வயதுதான். கல்யாணமென்றால் வீட்டை விட்டுச் இன்னொரு வீட்டுக்கு செல்லவேண்டுமென்று மட்டுமே எனக்கு  தெரியும். நான் போக மாட்டேனென்று  அழுது கொண்டேயிருந்தேன். ஆனாலும் என்னை வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்தனர்” என்கிறார் தொடர்ந்து.
மனியம்மா, ஆந்திராவின் ஒரு கிராமத்தில் தனது உறவினர் சூழ அமர்ந்திருக்கிறார். அவர் கட்டியிருந்த சிவப்பு புடவையில் பதினொரு வயதிற்கும் கீழானாவராகவே தெரிந்தார். ஒரு தந்தையால் தன்  குழந்தைக்கு இதை மனமுவந்து செய்ய முடியமா? ஆனால், அவரோ “இங்கெல்லாம் அப்படித்தான் பழக்கம் என்கிறார். இதுதான் எங்களின் பாரம்பரியம், பெண்கள் சிறியவயதில் மணமுடித்துவிடவேண்டும். கணவர்கள் வயதில் எத்தனை பெரியவர்களாக இருந்தாலும் சரி, சூழ்நிலையை அனுசரித்து நடந்து கொள்ளவேண்டும்” என்று முடிக்கிறார்.
உலகிலேயே, அதிகமான குழந்தை மணமகள்களை கொண்டு மூன்றாவது இடத்தை பிடித்திருக்கும் இடமான இந்தியாவிற்கு, 2020-இல் ‘வல்லரசாக’ப் போகும்  நாட்டிற்கு உங்களை வரவேற்கிறோம்.
இந்தியாவில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சிறுமிகளுக்கு இப்படி திருமணமாகிறது. வயதுக்கு வந்ததும் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகின்றனர். இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு 18 வயதுக்கு முன்பே திருமணமாகி விடுவதாக ஒரு ஆராய்ச்சி சொல்கிறது. அப்படி திருமணமான பெண்கள்  உடனடியாக பிள்ளை பேற்றுக்கும் ஆளாகி தங்களது பெண்மையையும் நிரூபிக்க வேண்டும்.
முழுமையாக வளர்ச்சியடையாத சரியான ஊட்டச்சத்தில்லாத இக்குழந்தைகளின் பிள்ளைப்பேறு பெரும்பாலும் மரணத்தில்தான் வந்து முடிகிறது.  ஒவ்வொரு வருடமும் 1,00,000 தாய்களும் ஒரு மில்லியன் குழந்தைகளும் இந்தியாவில் மரணமடைகின்றனர்.
குழந்தை பேற்றுக்கு ஆளாகும் முன்பே மனியம்மாவின் திருமணம் முறிந்துவிட்டது. மணமான இருவருடங்களிலேயே, மனியம்மாவின் கணவர்(வயது 20) மனியம்மாவை வீட்டுக்கு அனுப்பி விட்டார். 20 வயதான அவருக்கு மனியம்மா பாலுறவுக்கு ஏற்ற வகையில் இல்லையென்பதுதான் காரணம். கணவர் உங்களை எப்படி நடத்தினார் என்ற கேள்விக்கு மனியம்மா தயங்குகிறார். “அவரைப் பற்றி எதையும் நான் பேச விரும்பவில்லை” என்கிறார்.
அவர் அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளமுடியாதவராக தென்பட்டார்.  மற்றுமொரு முறை  மணம் செய்துக்கொள்வாரா என்ற கேள்விக்கு இல்லையென்று தலையசைக்கிறார். அக்‌ஷய திருதியை விழாவின் போது, பெரும்பாலான இந்திய கிராமங்கள்  திருமணத்திற்கான ஏற்பாடுகளிலும், பட்டாசுகளிலும் பெண்களின் பாடல்களிலும் மூழ்கியிருக்கும். அந்த திருமணங்களின் மணகள்கள் மனியம்மாவைப் போன்ற குழந்தைகள்தான்.
வடழகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த ஹசீனா பள்ளியை விட்டு நிற்கவில்லை;  அவர் பள்ளிக்கே செல்லவில்லை. ஹசீனாவுக்கு 13 வயதில் முதல் முறையாக மாதவிலக்கு ஏற்பட்டது. ஹசீனாவின் தாய் இறந்ததும் அவரை வளர்த்த அத்தை ஹசீனா உடனே திருமணம் செய்துக்கொள்ள  வேண்டுமென்றார். ஹசீனாவுக்கு அவர் என்ன சொல்கிறாரென்று அப்போது விளங்கவில்லை; தனது வாழ்க்கையை முற்றிலுமாக திருப்பிப்போடுமென்றும் தெரிந்திருக்கவில்லை. “திருமணம் ஒரு விளையாட்டு என்று நினைத்தேன்” என்கிறார் அவர், கணவரது மூங்கில் குடிசையில் அமர்ந்தபடி.
அவரது கைகள் புடவையின் முந்தானையின் ஓரங்களைத் திருகியபடியிருக்கின்றன. ஹசீனாவின் வயது இப்போது 15. அவர் ஐந்து மாத கர்ப்பமாக இருக்கிறார்.பிரசவங்களினால் ஏற்படும் சிக்கல்களும், உடல்நலத்தை பற்றிய அறியாமையும் மருத்துவ வசதியின்மையும் தகுந்த நேரத்துக்கு கிடைக்காத கவனிப்பும் இந்த மரணங்களை அதிகப்படுத்துகின்றன. அதற்கு ஹசீனாவும் விதிவிலக்கல்ல.
ஜெய்ப்பூரைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள் வயது முறையே 11 மற்றும் 13 அஞ்சலி மற்றும் கரிஷ்மா  திருணத்துக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களது குடும்பத்துப் பெரியவர்கள் அவர்களுக்கு தயிரும் மஞ்சளும் சேர்த்து தலையைக் குளிப்பாட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது கைகளிலும் கால்களிலும் மருதாணி இடப்பட்டிருக்கிறது. “ஆமாம், எனக்கு பயமாக இருக்கிறது, இருக்காதா என்ன?” என்கிறார் கரிஷ்மா.  ”நாங்கள் எங்கள் கணவர்களை இன்னும் சந்திக்கவில்லை” என்கிறார்கள், லேசான எரிச்சலுடன்.
எப்படி தனது வீட்டையும், சகோதரியுடன் பள்ளிக்குச் செல்வதையும் நேசித்தார்கள் என்று ரசித்து சொல்கிறார்கள்.தற்போது எல்லாமே முடிவுக்கு வந்துவிட்டது .”கணவரது வீட்டிலிருந்து பள்ளிக்கூடம் செல்வது நடக்காத காரியம். அங்கு சமையலும் வீட்டு வேலைகளையும்தான் செய்ய  வேண்டும். வேறு ஒன்றும் இல்லை. தலையை எப்போதும் துணியால் மூடியிருக்க வேண்டும். எனது மாமியார் என்ன சொல்கிறாரோ அதை கேட்டு நடக்க வேண்டும்”.
குழந்தைத் திருமணங்கள் இந்திய சட்டத்திற்கு புறம்பானவை. குழந்தை திருமண தடுப்புச் சட்டம் பிரிட்டிஷ் காலத்திலேயே, 1929, நிறைவேற்றப்பட்டது. அப்போது பார்ப்பனிய ஆதரவாளர்கள், இந்துமத அமைப்புகள் இதை கடுமையாக எதிர்த்தனர். பின்னர் அம்பேத்கர் அரசியல் சாசனம் எழுதிய காலத்திலும் இந்த எதிர்ப்பு இருந்தது. பார்ப்பனியத்தின் நிலவுடமைப் பண்பாட்டில் ஊறியிருந்த சமூகத்தில் குழந்தைகள் திருமணம் ஆழமாக பதிந்திருந்தது.
திருமணமாவதற்கு பெண்ணுக்கு 18 வயதும் ஆணுக்கு 21 வயதும் நிரம்பியிருக்க வேண்டும். 1947-ல் போலிச் சுதந்திரம் பெற்றபின் இந்திய அரசாங்கம் இந்த சட்டதிட்டங்களை கடைபிடிப்பதில் பெரிய ஆர்வம் காட்டவில்லை. திருமண சீசன்களில் நான்கு வயதான குழந்தைக்கும் கூட மணம் நடப்பதை காணலாம். இந்தியாவிலேயே ராஜஸ்தானில்தான் அதிக  அளவில் குழந்தை திருமணங்கள் நடைபெறுகின்றன. ஜோத்பூரில்  குழந்தைகள் நலவாரியத்தின் அதிகாரிகள் தொலைபேசியில் அது குறித்த புகார் குரலுக்காகக் காத்திருக்கிறார்கள். ஆனால் அப்படி புகார்கள் பெரிய அளவில் வருவதில்லை.
இப்படி சட்டத்திற்கு புறம்பான திருமணங்களைப் பற்றி செய்தியை தெரிவிப்பதற்காக அங்கு ஒரு ஹாட்லைன் இருக்கிறது. ஆனால், இந்த திருமணத்தை நடத்துபவர்கள் மிகவும் சாதுர்யமாக நடந்து கொள்வதாகக் கூறுகிறார்கள் இந்த அதிகாரிகள்.
”அவர்கள் எப்போதும் எங்களைவிட ஒரு அடி முன்பாக இருக்கிறார்கள்.   திருமணத் தேதியை முதலில் அறிவித்து விடுகிறார்கள். பிறகு தேதியையோ அல்லது இடத்தையோ மாற்றிவிடுகிறார்கள். ராஜஸ்தான் ஒரு பெரிய மாநிலம். போலிசாலும் எல்லா இடங்களை கண்காணிக்க இயலாது. தேவையான வாகனங்கள் இருந்தால் திருமணஙக்ளை அவ்விடத்திலேயே நிறுத்திவிடலாம். ஆனால்,  அதற்கு கொஞ்சம்  காலம் பிடிக்கும்” என்கிறார்கள் அவர்கள். அதுவரை அவர்கள் தொலைபேசியைத்தான் நம்பியிருக்கவேண்டும். ராஜஸ்தானில் இன்னும் பல இடங்களில் நிலப்பிரபுக்கள்தான் ஆதிக்கம் செலுத்துவதாக பல அதிகாரிகள் கூறுகின்றனர். இத்தகைய பிராந்தியங்களில்தான் பா.ஜ.க செல்வாக்கோடு இருக்கிறது என்பதிலிருந்து அந்த கட்சியின் பிற்போக்கு அடிப்படையை புரிந்து கொள்ள முடியும்.
சட்டத்தை நிறைவேற்றுவதற்கும் அதை நடைமுறைப்படுத்துவதற்கும் இடையில் ஒரு பாரிய இடைவெளி இருக்கிறது. ஆந்திராவில் இந்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட 4 நான்கு வருடங்களுக்குப் பிறகும் கிராம அளவில் கூட அதிகாரிகளை நியமிக்கவில்லை. போலீசும் வழக்கம்போல கண்ணை மூடியபடி இருக்கிறது.
ஆந்திராவின் வாரங்கலில் உள்ளூர் சமூக ஆர்வலர் ஒருவர் குழந்தைத் திருமண வதையைப் பொறுக்க முடியாமல் நடக்கவிருந்த 60 குழந்தைத் திருமண விவரங்களை சேகரித்து போலிசிடம் கொடுத்தார். தடுத்து நிறுத்த உடனடியாக ஏற்பாடு செய்யும்படியும் கோரினார். ஒவ்வொரு கிராமம் கிராமமாக நடந்து சென்று இந்த விபரங்களைச் சேகரித்தார் அவர்.  இன்ஸ்பெகடர் மோகிலி துர்கையாவோ இதுவரை தான் ஒரு குழந்தைத் திருமணத்தைக் கூட தடுத்து நிறுத்தவில்லை என்கிறார்.
யூனிசெஃப்பின் தென்னிந்தியத்தலைவர் இதுபற்றி கூறுகையில்,”போலீசும் இந்த பாரம்பரிய பின்னணியிலிருந்தே வந்தவர்கள். அவர்கள் தங்களது சொந்த குடும்பங்களுக்கெதிராக பேச விரும்புவதில்லை. பல நூற்றாண்டு காலமாக தொடரும் இந்த பழக்கத்தை தவறென்று சொல்ல அவர்கள் விரும்புவதில்லை. இதுபற்றி அவர்களுக்கே பயிற்சியும்  அறிவும் தேவைப்படுகிறது” என்கிறார். இதுமட்டுமல்ல எல்லா மக்கள் பிரச்சினைகளிலும் அதிகாரத்திமிரோடும், ஆதிக்கத்தில் இருப்பவர்களையும் ஆதரிக்கின்ற போலீசை எப்படித் திருத்த முடியும்?
இந்த பயிற்சியும் அறிவும் வரும் வரையும்  தங்களது வாழ்க்கையை  குழந்தைத் திருமண மேடையில் தியாகம் செய்யும் பல்லாயிரக்கணக்கான சிறுமிகளின் நிலைமை என்ன? குழந்தைத் திருமணம் நமது நாட்டில் பால்ய விவாகம் என்ற பெயரில் தொடர்ந்து  வந்துள்ளது. இதற்கு சாதிய படிநிலையும் ஒரு காரணம். பிறப்பால்  வரும் சாதியும், சொத்துடைமையும்  திருமணத்தை பல்வேறு சாதிகளுக்குள் நடைபெறுவதை அனுமதிப்பதில்லை.
மேலும், இளைய தலைமுறையினர் இவ்விதிகளை உணர்ச்சிவசத்தில் மீறுவதைத் தடுக்கவும் இந்த குழந்தைத் திருமணங்கள் பயன்படுகின்றன. மேலும், தற்போது இப்பழக்கம் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவர்களிடமே பெருமளவில் காணப்படுகிறது. ஆனால் இந்தி பேசும் மாநிலங்களைப் பொறுத்த வரை கிராமங்களில் உள்ள ஆதிக்க சாதி – வர்க்கத்தினரிடமும் இந்த பழக்கம் காணப்படுகிறது. இவர்களெல்லாம் ஏழைகள் அல்ல.
ஒரு சில சமூகங்கள் முன்னேறிக் காணப்பட்டாலும் பல சமூகங்களுக்குள் பெரும் வித்தியாசம் இருக்கிறது. படிப்பு, சாதிநிலை, மதம், வருமானம் மற்றும் வட்டாரங்கள் முதலியவை சமூகப் பொருளாதார வேற்றுமைகளில் பிரதிபலிப்பதோடு குழந்தைபேறு உடல்நலத்தில் பிரதிபலிக்கின்றன.
எடுத்துக்காட்டாக, ஹசினா வாழும் அஸ்ஸாம், சில பத்தாண்டுகளாகவே வளர்ச்சியில் பின் தங்கியுள்ளது. நிர்வாக அலட்சியமும், ஊழலும், ராணுவ அடக்குமுறையும் தொடர்ந்து இருக்கிறது. இது பிரசவகால மரணங்களை பெருமளவு உயர்த்தியுள்ளது. அரசாங்க புள்ளிவிவரப்படி, 100,000 பிரசவங்களில் 480 மரணங்கள் ஏற்படுகின்றன.
ஹைதராபாத்தின் மகாத்மா காந்தி மருத்துவமனையில் 15வயதுப்பெண் அவசர கால சிகிச்சைக்கு விரைந்து எடுத்துச் செல்லப்படுகிறாள்.. வலியால் துடித்தபடி இருக்கும் இந்தப்பெண்ணே, ஒரு குழந்தையே குழந்தையை சுமந்தால் ஏற்படும் நிலைக்கு, ஒரு சிறந்த உதாரணம் என்கிறார் டாக்டர் ஷைலஜா. ”அவளுக்கு ரத்தக்கொதிப்பு உயர்திருக்கிறது. அவளது இடுப்பு மிகவும் சிறியதாக  இருப்பதால் குழந்தை  வெளியே  வர முடியாமல் மாட்டிக்கொள்ளும். இந்த நேரங்களில் சிசேரியனைத் தவிர வேறு வழியில்லை,” என்கிறார் அவர்.
அப்பெண் 200 கிமீ பிரயாணம் செய்து  சரியான நேரத்துக்கு வந்திருக்கிறாள்.ஆனால், பெரும்பாலானவர்கள் வீட்டிலேயே  பிரசவிக்கிறார்கள்.  இம்மாதிரியான சிக்கல்களால் தாயும் குழந்தையும் ஒருசேர இறக்கிறார்கள். சிறுவயதிலேயே இக்குழந்தைகள் திருமணத்தின் பெயரால்  தொடர் கற்பழிப்புக்கும் பாலியல் வன்முறைக்கும் உள்ளாகிறார்கள்.  எதிர்ப்பதற்கோ தடுப்பதற்கோ வழியில்லாமல் இந்த வன்முறைக்கு பழக்கப்பட்டு விடுகிறார்கள்.
”Broken Voice” என்ற புத்தகத்தில் ஒரு பெண் 13  வயதில் திருமணம் என்றால் எப்படி இருக்கும் என்பதை “என் கணவனை பார்த்து எனக்கு மிகவும் பயமாக இருந்தது. அவர் என்னைவிட மிகவும் பெரியவராக இருந்தார்.. அவர் என்னைத் தொடக்கூடும் என்பதால்,  வீட்டுக்கு அவர் வருவதையே நான் விரும்பவில்லை.” என்கிறார்.
18 வயதுக்குள்ளான பெண்களிடம்தான் அதிகளவு எச்ஐவி நோய்த்தொற்று இருப்பதாக ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது. பாதுகாப்பில்லாத பாலுறவு, ஒருவருக்கு மேற்பட்டவர்களுடன் உறவு போன்றவற்றை ஆண்களுக்கிடையே முறைப்படுத்துவது இன்றுவரை சவாலாக இருக்கிறது. குழந்தைத் திருமணங்கள் நடைபெறும் சமூகங்களில் அது இன்னும் அதிகமாக இருக்கிறது.
திருமணமான குழந்தைகளோ பெண்களோ கணவன் மூலமாக  எச்ஐவிக்கு ஆளானால், அவர்களது குடும்பமும் சமூகமும் கணவனது உடல்நிலைக்கு காரணமாக மனைவியையே குற்றவாளிகளாக்குகின்றனர். அதுவும், கருவுற்றிருக்கும்போது உடல்நிலை பாதிக்கப்பட்டால் வீட்டைவிட்டு வீதிக்குத் துரத்திவிடப்படும் குழந்தைகள் இன்னும் அதிகமான ஆபத்துக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
ஹைதராபாத்தின் அந்த மருத்துவமனையில் பிரசவ அறைகளிலொன்றில் நிற்கிறார் டாக்டர் ஷைலஜா. “விரைவில் மகப்பேறுக்கு ஆளானால் ஏற்படும் கதியை பாருங்கள்” என்று சொல்லி, அப்பெண்ணின் நாக்கை உள்அன்னத்தில் மடக்கச் சொல்கிறார். தாய் அனீமிக்காக இருப்பதோடு, குழந்தையும் மிகுந்த எடைகுறைவாக இருப்பதாகச் சொல்கிறார். அதிர்ஷ்டமிருந்தால் இவன் பிழைப்பான் என்று ஆங்கிலத்தில் சொன்னதை அந்தத்தாய் புரிந்து கொள்ளவில்லை.
அங்கிருந்து, பெண்கள் நலப்பிரிவுக்கு சென்றால்,  ஹிஸ்டெரக்டமிக்கு ஆளான அநேக பெண்களை பார்க்க முடிந்தது. 23 வயதுக்கும் குறைவான பெண்கள் அவர்கள். அவர்கள் வீட்டுக்கு செல்லும் போது இனி குழந்தைப்பேற்றுக்கு ஆளாகாத நிலையில் இருப்பார்கள். வீட்டு வேலைகளிலும் அவர்களால் ஈடுபடமுடியாது. பெரும்பாலானோரை அவர்களது கணவர்கள் வீட்டைவிட்டு அனுப்பி விடுவார்கள்.
அஸ்ஸாமைச் சேர்ந்த ஹசீனாவின் நிலைமை இன்னும் மோசம். அவரைப் போன்று மூன்று மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த கிராமங்களில் சிலவற்றிற்கு இன்னும் மின்சார வசதி கூட இல்லை. சாலைகளும்,  பள்ளிகளுமோ அல்லது  பொதுவசதிகளோ எதுவும் இல்லை.பெரும்பாலும் ஆற்றில் மீன் பிடித்தோ விவசாயம் செய்தோதான் வாழவேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.
30 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த மாநிலத்தில் விவசாயத்துக்கு போதிய நிலையில்லா விட்டாலும் எங்கும் செல்ல வசதிவாய்ப்பின்றி இங்கேயே வசிக்க நிர்பந்திக்கப்படுகிறார்கள். ஹசீனா அருகிலிருக்கும் ஒரு வடகிழக்கு ஆராய்ச்சி நிலையத்தின் மருத்துவமனைக்குச் செல்கிறார்.அரசாங்க உதவி பெறும் அந்த மருத்துவமனையிலிருந்துதான் பிரம்மபுத்திரா நதியைக் கடந்து மருத்துவ உதவிகள் ஹசீனாவின் கிராமத்துக்கு வரவேண்டும்.
அந்த மருத்துவமனையின் நர்ஸ் ஹசீனாவின் உடல்நிலையைக் குறித்தும் நலங்களைக் குறித்தும் கேள்விகள் கேட்கிறார். ஹசீனாவுக்கு மருத்துவ வசதிகளுடன் வரும் படகுகளைக் குறித்து தெரிந்திருக்கவில்லை. ஏனெனில், ஹசீனாவின் வீடு இன்னும் ஒரு ஓடையைக் கடந்து இருக்கிறது.அங்கு எந்த மருத்துவ வசதிகளோ வாய்ப்போ இல்லை.மேலும், ஹசீனாவுக்குத் தெரிந்த ஆர்வலரும் அதனைப் பற்றி சொல்லவில்லை.
ஹசீனாவை பரிசோதித்த நர்ஸ் அஸ்ஸாமின் மற்ற எல்லா கருவுற்றிருக்கும் பெண்களைப் போலவே ஹசீனாவும் அனிமிக்காக இருப்பதாக தெரிவிக்கிறார். ஹசீனாவின் ஹீமோகுளோபின் 6.4 என்றும் சொல்கிறார். இந்தியப்பெண்களுக்கு  ஒரு டெசிலிட்டருக்கு 11 கிராம் இருக்கவேண்டும். கருவுற்றிருக்கும் பெண்கள் அனிமிக்காக இருக்கும்போது குறித்த நேரத்துக்கு முன்பாக குழந்தை பிறக்கும் வாய்ப்பு மிகவும் அதிகம். அதோடு நோய்தொற்றுக்கான வாய்ப்புகளும் அதிகம். அதுவும் மருத்துவ வசதிகளெதுவும் இல்லாத அவசரத்துக்கு மருத்துவ வசதிகள் கிட்டாத இப்பெண்கள் மரணத்தின் வாயிலிலிருக்கிறார்கள்.
பேறுகாலத்தில் மருத்துவமனைக்குச் செல்வதைவிட வீட்டில் இருப்பதையே ஹசீனா விரும்புகிறார். அரசாங்க மருத்துவமனைக்குச் சென்றால் அரசாங்கத்திலிருது 1400 ரூபாய்கள் வருமென்றாலும் ஹசீனாவின் வீட்டிலிருந்து மருத்துவமனைக்குச் செல்வது 1500 ரூபாய்களாகும் என்றும்  அதோடு மருத்துவமனைக்கும் ஆரம்பத்தில் பணம் செலுத்த வேண்டியிருக்குமென்றும்  கூறுகிறார். அதோடு, பேறுகாலத்தில் ஆண் மருத்துவர்கள் தன்னை உடலில் துணியில்லாமல் பார்ப்பதை விரும்பவில்லை என்றும் கூறுகிறார்.
பெற்றோர் சொல்வதைப் போல மருத்துவ வசதியில்லாமல் வீட்டில் பிரசவித்தால் இறப்பை சந்திக்க நேரிடும் என்கிறார், நர்ஸ் ஒரு குழந்தைக்குச் சொல்வதைப் போல.  “செத்தா செத்துட்டு போறேன்” என்கிறாள்  ஹசீனா தனது தலையிலிருக்கும் துணியை இழுத்துவிட்டபடி.  ஹசீனாவைப் போன்ற எண்ணற்ற குழந்தை மணமகள்களுக்கு வாழ்க்கை என்பது அவ்வளவுதான்.
இந்தியாவின் கிராமங்களில் அதுவும் பின்தங்கிய மாநிலங்களில் ஏழ்மை காரணமாக சிறு வயதுத் திருமணங்கள் அதிகம் நடக்கின்றன. இந்தி பேசும் மாநிலங்களில் வலுவான பார்ப்பனிய பண்பாட்டு ஆக்கிரமிப்பு காரணமாகவும் நடக்கின்றன. இத்தகைய பின்தங்கிய மாநிலங்கள், கிராமங்களை அரசும், முதலாளிகளும் எப்போதும் புறக்கணித்தே வருகின்றனர். அவர்களுக்கு இலாபம், வருமானம் இருக்கும் பகுதிகளில்தான் வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வருகிறார்கள்.
சாதி, மதம் பிற்போக்குகளுடன் கூடவே மறுகாலனியாக்கம் ஏற்படுத்தியிருக்கும் இத்தகைய ஏற்றத்தாழ்வான வளர்ச்சி, புறக்கணிப்பு காரணமாக இந்த குழந்தைகள் குறிப்பாக பெண் குழந்தைகள் சிறுவயதிலேயே இறக்கின்றனர். அல்லது ஆயுள்கைதிகளைப் போல வாழ்கிறார்கள். சிறுவயது பெண் குழந்தை திருமணம் என்பது அந்தந்த குடும்பங்களில் ஊதியமின்றி வேலை செய்யும் பணியாளின் இடத்திற்கு ஒப்பானதுதான்.
ஆண்டுக்கு ஒரு இலட்சம் தாய்மார்களும், பத்து இலட்சம் குழந்தைகளும் கொல்லப்படும் நாட்டில்தான் விரைவில் வல்லராசகப் போகிறதென்ற கூச்சலை ஊடகங்கள் வாயிலாகவும், அப்துல்கலாம் டைப் நடுத்தர வர்க்கதின் மூலமாகவும் கேட்டுக் கொண்டிருக்கிறோம். கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வைத்து பெருமைப்படும் இவர்கள் மரண கண்டத்தோடு வாழ்வதற்கு சபிக்கப்பட்ட இந்த குழந்தைகளை கொசுக்களைப் போல ஒதுக்குகிறார்கள்.
எனவே குழந்தைகள் திருமணத்தை எதிர்த்து சட்டங்கள் மட்டும்  போதுமானவையல்ல. நடைமுறையில் நாம் பார்ப்பனியத்தையும், மறுகாலனியாக்கத்தையும் எதிர்த்து போராடுவதினூடாகத்தான் நமது குழந்தைகளை மீட்க முடியும்.