Sunday, 29 May 2011

பித்அத் என்றால் என்ன? பித்அத் பற்றிய நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கைகள் என்ன?

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِஅன்புள்ள சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்...... பித்அத் என்றால் என்ன? பித்அத் பற்றிய நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கைகள் என்ன? இஸ்லாமிய மார்க்கத்தில் அல்லாஹ்வோ (திருமறையோ) அல்லது நபி (ஸல்) அவர்களோ கற்றுத்தராத புதிய அமல்களைச் செய்வதற்கு பித்அத் என்று பெயர். புதிய அமல்களைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் மிகக் கடுமையாக எச்சரித்திருக்கிறார்கள். ஏனென்றால் அல்லாஹ் தனது மார்க்கத்தை முழுமைப்படுத்தி விட்டதாக தன்னுடைய திருமறையில் கூறுகிறான். நபி (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ் சென்றிருந்தபோது அல்லாஹ் பின்வரும் வசனத்தை இறக்கினான்.

“….இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூரணமாக்கி விட்டேன். மேலும், நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன். இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்….” (அல்குர்ஆன்: 5:3)

இவ்வாறு அல்லாஹ் மற்றும் நபி (ஸல்) அவர்களால் சம்பூர்ணமாக்கப்பட்ட இஸ்லாமிய மார்க்கத்தில் புதிதாக ஒரு அமலைச் சேர்ப்பது என்பது அல்லாஹ்வுக்கோ நபி (ஸல்) அவர்களுக்கோ தெரியாத ஒன்றை நாம் கற்றுத்தருவது போன்ற அதிகப்பிரசங்கித்தனமானதாகும். அல்லாஹ் நம்மை அத்தகைய தீய எண்ணங்களிலிருந்து காப்பாற்றுவானாகவும், இன்று நமது இஸ்லாமிய மார்க்கம் இத்தனைக் கூறுகளாக சிதறுண்டுக் கிடப்பதற்கு மூலக்காரனம் புதிய புதிய பித்அத்களைச் செய்வதேயாகும். நபி (ஸல்) அவர்களின் பித்அத் குறித்த மிகக் கடுமையான எச்சரிக்கைகளில் சிலவற்றைக் இங்கே காண்போம். 

நபி (ஸல்) அவர்கள் ஒரு சொற்பொழிவில் கண்கள் சிவக்க குரலை உயர்த்திக் கூறினார்கள். 

‘….செய்திகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். நேர்வழியில் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களின் நேர்வழியாகும். விஷயங்களில் கெட்டது மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டது (பித்அத்) ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும்’ அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘நமது அனுமதியில்லாமல் ஓர் அமலை எவரேனும் செய்தால் அது நிராகரிக்கப்படும்’ அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி, முஸ்லிம். பித்அத்துகள் அனைத்துமே நரகத்திற்கு இட்டுச் செல்லும் வழிகேடு என்று நபி (ஸல்) அவகள் எச்சரித்திருக்க நமது முஸ்லிம்களில் சிலர் பித்அத்களை நல்ல பித்அத் (பித்அத்துல் ஹஸனா) என்றும், கெட்ட பித்அத் என்றும் தரம் பிரித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஏனோ தெரியவில்லை, நமது சமுதாயத்திற்கு மார்க்கத்தை போதிக்கும் அறிஞர் பெருமக்களும் நபி (ஸல்) அவர்களின் எச்சரிகையையும் மீறி மார்க்கத்தில் உருவாக்கப்பட்ட புதிய அமல்களுக்கு ஆதரவு தந்து அவைகள் நடைபெறும் இடங்களுக்குச் சென்று அவற்றில் கலந்து கொள்கின்றனர். இன்று நமது சமுதாய மக்களிடையே பரவலாகக் காணப்படும் மிக மோசமான பித்அத்கள் சிலவற்றைக் காண்போம். 

இறைவனால் மன்னிக்கப்படாத ஷிர்க் என்னும் இணைவைத்தல் அடங்கிய மவ்லிது பாடல்களை பக்தி பரவசத்துடன் நன்மையை நாடிப் பாடுவது. தரீக்காக்கள் என்ற பெயரில் இறைவனால் படைக்கப்பட்ட மனிதர்களுக்கு ‘ஷைகு, பீர்’ என்றெல்லாம் கூறி அவர்களுக்கு இறைவனுடைய தன்மைகளைக் கொடுப்பது மற்றும் அவர்களின் காலில் விழுவது. 

மீலாத் விழா, பிறந்த நாள் விழா போன்ற விழாக்களைக் கொண்டாடுவது.

நபி (ஸல்) அவர்களால் ‘புனித நாட்கள்’ என்று கூறப்படாத நாட்களை புனித நாட்களாகக் கருதி அந்த நாட்களில் நோன்பு நோற்பது. உதாரணங்கள்: மிஹ்ராஜ் இரவு மற்றும் பராஅத் இரவு.
16 நோன்பு நோற்பது.திக்ர் செய்கிறோம் என்ற பெயரில் ஆடல், பாடலுடன் கூடிய திக்ர் (ஹல்கா) செய்வது. இதில் இறைவனை அழைப்பதாகக் கூறிக்கொண்டு இறைவனின் அழகிய திருநாமங்களை திரித்துக் கூறுவதோடு, அவர்கள் புதிதாக வெளிவந்த சினிமாவின் பாடலுக்கேற்ற இசையில் இராகங்களை வடிவமைத்துக் கொண்டு ஆடிப்பாடுகின்றனர். இவ்வாறு செய்வதனால் இறந்தவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று எண்ணி இறந்தவர்களின் 7-ஆம் நாள் மற்றும் வருட பாத்திஹாக்களில் இந்த பித்அத்துகளை நிறைவேற்றுகின்றனர்.

இறந்தவர்களுக்காக 3, 7, 40-ஆம் நாள் மற்றும் வருடாந்திர பாத்திஹாக்கள் ஓதுவது.
நபி (ஸல்) அவர்களால் கற்றுத்தரப்படாத ஸலவாத்து நாரியா என்ற ஷிர்க் வார்த்தைகள் அடங்கியதை 4444 தடவை ஓதுவது.

இவைகளைச் செய்யக்கூடிய நமது சகோதர, சகோதரிகள் இவைகளைச் செய்தால் அதிக நன்மைகள் கிடைக்கும் என்ற அறியாமையினால் தான் செய்கின்றனர். ஆனால், இவைகள் எல்லாமே பித்அத்கள் ஆகும். இவைகளை அல்லாஹ்வோ, நபி (ஸல்) அவர்களோ கற்றுத்தரவில்லை. இவைகள் அனைத்தும் சில போலிகளால் தம் வயிற்றை வளர்ப்பதற்காக இஸ்லாத்தில் நுழைக்கப்பட்ட நூதன அனுஷ்டானங்களேயாகும். இவைகளைச் செய்வதால் எவ்வித பலன்களும் கிடைப்பதில்லை. நன்மையைத்தானே செய்கிறோம் செய்தால் என்ன தவறு என்று யாரேனும் கேட்பார்கள் என்றுதான் அன்றே நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘நமது அனுமதியில்லாமல் ஓர் அமலை எவரேனும் செய்தால் அது நிராகரிக்கப்படும்’ அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி, முஸ்லிம். மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்;

‘(அமலில்) ஒவ்வொரு புதுமைப் பழக்கமும் வழிகேடுதான். வழிகேடுகள் அனைத்தும் நரகத்திற்கு உரியவைதான். என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்’ ஆதாரநூல்: அஹ்மத்.

உன்மை பேசினால் எதிர்ப்பு வரும், ஆதாயம் வருமானம் தேயும் என அறிந்து சிலர் அசட்டு தைரியத்துடன் மார்க்கத்தில் புதிது புதிதாக உருவானவைகளை ‘பித்அத்துல் ஹஸனா’ (அழகான பித்அத்) என்ற புதுப்பெயரிட்டு அனுமதி வழங்கி ஆதரிக்கின்றனர். நபி (ஸல்) அவர்களோ நல்ல பித்அத், கெட்ட பித்அத் என பித்அத்களை வேறுபடுத்திக் காட்டவில்லை. பித்அத்கள் அனைத்தும் வழிகேடுகள் என்றுதான் சொன்னார்கள்.

எனவே சகோதர, சகோதரிகளே! நபி (ஸல்) அவர்களால் கடுமையாக எச்சரிக்கப்பட்ட இந்த பித்அத்களை நாம் தவிர்த்துக் கொள்வதோடு, மற்றவர்களுக்கும் இத்தீமைகளைப் பற்றி எடுத்துக்கூற வல்ல இறைவன் நமக்கு அருள்பாலிக்க இறைவனிடம் பிரார்த்திப்போம்

No comments:

Post a Comment