Tuesday 26 June 2012

பெண்களுக்கும் பங்குண்டு




 



இஸ்லாமிய வரலாற்றை புரட்டிப் பார்க்கும்போது பெண்மணிகளின் பங்களிப்பு பாரிய அளவில் இருந்திருக்கிறது. ஒரு தாயாக, மனைவியாக, சகோதரியாக, மகளாக முஸ்லிம் பெண் சமூகத்தை தாங்கி நிற்கிறாள். ஆண்களில் சிலர் தாம் மட்டும் புகழுக்குரியவர்கள் என நினைக்கின்றனர். தாமே போராட்டங்களின் முன்னோடிகள் எனவும், நாகரிகங்களின் சொந்தக்காரர்கள் எனவும் கருதுகின்றனர். அறிவும், பலமும், பதவியும் அவர்களிடம் மாத்திரமே இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். பெண்களைப் பற்றி கூறப்பட்டால், அவர்களால் வேலைகளை திறன்பட செய்ய முடியாது, வீட்டு வேலைகளை செய்வதும் கணவனுக்கு பணிவிடை செய்வதும் தான் அவர்களது பணி என்று கூறுகின்றனர்.
உண்மையில் பெண்களுக்கு அல்லாஹ் நிறைய அருள்களை வழங்கியிருக்கின்றான். இஸ்லாமிய வரலாற்றை திரும்பிப் பார்க்கும்போது பெண் என்பவள் எவ்வாறு காணப்பட்டாள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். ஜாஹிலிய்யா காலத்தைப் பற்றி விளங்கிக் கொள்ளும்போதுதான் இஸ்லாம் பெண்களுக்கு எவ்வளவு சுதந்திரம் வழங்கியிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடியும். ஜாஹிலியா காலத்தில் பெண் இழிவுப் பொருளாக கருதப்பட்டாள். ஓர் ஆணின் உடலியல் தேவைகளை நிறைவேற்றும் அடிமைதான் பெண் என அக்கால மக்கள் நம்பியிருந்தனர்.
பெண் சமூகத்தின் அங்கமாகவே பார்க்கப்படவில்லை. பெண் குழந்தைகள் உயிருடன் புதைக்கப்பட்டன. அவர்களது மனோநிலை பற்றி திருமறை கூறும்போது "அவர்களில் ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்து விட்டது என்று நன்மாராயம் கூறப்பட்டால் அவன் முகம் கறுத்து கோபமுடையவனாகிறான்" (நஹ்ல்: 58) என்று வர்ணிக்கிறது. இந்த அநியாயங்கள், கொடுமைகளிலிருந்து பெண்ணுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தது இஸ்லாம். கண்ணியம் வாங்கிக் கொடுத்தது இஸ்லாம். ஆணைப் போலவே சகல உரிமைகளையும் பெற்றுக் கொடுத்தது இஸ்லாம், "ஆணாயினும் பெண்ணாயினும் யார் நற்செயல்கள் புரிகின்றார்களோ அவர்களுக்கு மணமான நல்ல வாழ்க்கையைக் கொடுப்போம்" (நஹ்ல்: 97) என்று அல்குர்ஆன் கூறுகின்றது.
பெண்ணுக்குரிய சகல உரிமைகளையும் வென்றுகொடுத்த மார்க்கம் இஸ்லாம். (நிஸா - பெண்கள்) என்ற பெயரில் ஒரு முழு ஸூறாவையே அல்லாஹ் இறக்கி வைத்துள்ளான். "மனிதர்களே! உங்கள் இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள். அவன் யாவரையும் ஓர் ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்து அவரது மனைவியைப் படைத்தான். பின்னர் அவ்விருவரிலிருந்து அநேக ஆண்களையும் பெண்களையும் படைத்தான் (அந்நிஸா-01) ஒரு பெண் பிள்ளையைப் பராமரிப்பதிலும், பாதுகாப்பதிலும் இஸ்லாம் கூடிய அக்கறை செலுத்துகிறது.
இஸ்லாமிய சமூகத்தை கட்டியெழுப்புவதில் ஆணுக்குள்ள அதே பங்கு பெண்ணுக்குமுண்டு. நபி (ஸல்)  அவர்கள் காலம் முதல் இன்று வரை இஸ்லாத்தைப் பாதுகாப்பதில் பெண்களின் பங்கு அளப்பரியது. கல்வி, பொருளாதார, போராட்ட விடயங்களில் பங்கு கொண்டு இஸ்லாத்தை வளர்க்க முடிவு செய்து கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஆண்களைப் போலவே பெண்களும் வணிகத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இஸ்லாமிய தஃவாவை பாதுகாத்த பெருமை ஆண்களைப் போலவே பெண்களையும் சாரும். குடும்ப வாழ்வில் பெண்ணுக்கு விஷேடமான பங்கிருக்கிறது. குடும்ப வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் சக்தி பெண்ணுக்கிருக்கிறது.
நபி (ஸல்) அவர்களின் தஃவாவை ஆரம்பமாக ஏற்றுக் கொண்டவர்களுள் அவரது மனைவி கதீஜா (றழி) அவர்களும் ஒரு வராவார். அப்பெண்மணி தனது செல்வம் முழுவதையும் இஸ்லாத்திற்காக தியாகம் செய்தார். நபியவர்களின் தஃவாவுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கினார். இஸ்லாத்திற்காக நிறைய தியாகங்கள் செய்தார். பல இழப்புகளை சந்தித்தார். இதனால்தான் நபியவர்களின் ஒரு ஹதீஸ் "சுவனப் பெண்களில் சிறந்தவர்கள் கதீஜா பின்த் ஹுவைலித், பாதிமா பின்த் முஹம்மத், ஆஸியா (பிர்அவ்னின் மனைவி), மர்யம் பின்த் இம்ரான்" என்று குறிப்பிடுகின்றது.
தியாகம், போராட்டம் என்று நோக்கும்போது கூட அதிலும் பெண்ணுக்கு பெரிய பங்கிருக்கிறது. இஸ்லாத்தை பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தபோது அதை ஏற்றுக் கொண்டதற்காக அம்மாரின் தாய் ஸுமையா பின்த் ஹம்மார் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். போராட்டங்களின்போது முஸ்லிம் படையணிக்கு உதவியாக முஸ்லிம் பெண்மணிகள் செயற்பட்டடிருக்கிறார்கள். நபியவர்களின் காலத்தில் இஸ்லாத்திற்காக வீரத்துடன் செயற்பட்டவராக ஹவ்லா பின்த் அஸ்வர் (றழி) அவர்கள் காணப்படுகின்றார்கள். யுத்தத்தில் காயப்பட்ட முஸ்லிம் வீரர்களுக்கு மருந்து உதவிகளை முஸ்லிம் பெண்களே செய்துவந்தனர்.
நவீன காலத்தில் முஸ்லிம் பெண்களை நோக்கும்போது இரண்டு வகையினரை காண முடியும். இஸ்லாமிய உணர்வுடன் வாழ்பவர்கள் ஒரு பகுதியினர். மேற்கத்தேய கலாச்சாரத்தில் மூழ்கி இஸ்லாமிய பெயர்களில் மாத்திரம் வாழ்பவர்கள் இன்னொரு வகையினர். சிறந்த இஸ்லாமிய குடும்பத்தை உருவாக்கியெடுப்பதில் முக்கிய பொறுப்பு ஒரு குடும்பப் பெண்ணின் கையில்தான் இருக்கிறது. அரை நூற்றாண்டுக்கு மேலான பலஸ்தீனப் போராட்டத்தில் பெண்களின் தியாகம் பாராட்டப்பட வேண்டிய தாகவுள்ளது. அவர்கள் தமது கணவனையும், பிள்ளைகளையும் உற்சாகமூட்டி போராட்டத்துக்கு அனுப்பி வைப்பதைப் பார்த்து எந்த உள்ளமும் அழாமல் இருக்க முடியாது.
கல்வித் துறையிலும் முஸ்லிம் பெண்மணிகள் சாதனை புரிந்திருக்கிறார்கள். பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களாக, விரிவுரையாளர்களாக செயற்படுகின்றார்கள். மருத்துவர்களாக, பொறியியலாளர்களாக, வழக்கறிஞர்களாக, கணக்காளர்களாக, ஆசிரியைகளாக தமது சேவையை சமூகத்திற்கு வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள். எமது பெண்கள் பல துறைகளையும் சார்ந்த புத்த ங்கள் எழுதியிருக்கிறார்கள். ஊடகவியலாளர்களாக முஸ்லிம் பெண்கள் செயற்பட்டு வருகிறார்கள்.
அரசியலிலும் நவீன கால முஸ்லிம் பெண்கள் ஈடுபடுகின்றார்கள். அரச நிறுவனங்களிலும் முக்கிய பதவிகளில் முஸ்லிம் பெண்கள் இணைந்திருக்கிறார்கள். பல நாடுகளில் பாராளுமன்ற உறுப்பினர்களாக எமது பெண்கள் இருக்கின்றார்கள். அமைச்சுப் பதவிகளைக் கூட பொறுப்பேற்றிருக்கிறார்கள். பாராளுமன்றத்தில் பெண்கள் உரிமைகள் சம்பந்தமாகப் பேசுகின்றார்கள். பெண்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கின்றானர். முக்கியமான நிறுவனங்கள், கம்பனிகளின் உரிமையாளர்களாகவும் எமது பெண்கள் இருப்பது முஸ்லிம் பெண்களின் அந்தஸ்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கான சில உதாரணங்களாகும்.
உண்மையில் இஸ்லாத்தில் பெண்ணுக்கு மிக உயரிய இடம் உண்டு. அவளை மிகவும் கண்ணியத்துடனேயே இஸ்லாம் நோக்குகிறது. இஸ்லாமிய வரலாற்றை புரட்டிப் பார்த்தால் முஸ்லிம் பெண்களின் சாதனைகளைப் புரிந்து கொள்ளலாம். முஸ்லிம் பெண்களையும் இணைத்துத்தான் இஸ்லாமியக் குடும்பம், இஸ்லாமிய சூழல், இஸ்லாமிய நாடு அமைக்கப்பட வேண்டும் என்ற கருத்தை அனைவரும் ஆழமாகப் புரிய வேண்டும். அவளுக்குரிய உரிமைகள் முழுமையாக வழங்கப்பட வேண்டும். உலகில் மிகப் பெரும் இயக்கமாக வளர்ந்துள்ள இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை வளர்த்த பெருமை ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்குமுண்டு.
கலாநிதி அலி-அல்-ஹம்மாதி அவர்களது கட்டுரையை தழுவி எழுதப்பட்டது.

No comments:

Post a Comment