Tuesday 4 October 2011

கண்களில் அழுத்தம் "குளூகோமா"


குளூகோமா என்பது, கண்களில் அழுத்தம் காரணமாக, "ஆப்டிக் நரம்பு' பாதிக்கப்படுவதாகும். இதில், நரம்பு விரிவடைவதுடன், கண் பார்வை திறனும் குறையும். குளூகோமாவில் கண்களின் அழுத்தம் அதிகமாக இருக்கும். சாதாரணமாக இருக்கும் கண்களில் அழுத்தம் 11 முதல் 21 ட்ட்ஏஞ் வரை இருக்கும். ஆனால், குளூகோமா வந்துவிட்டால், கண் அழுத்தம் அதிகம் ஏறும்.

கண் பார்வை குறைவதால் கண் வலி, ஒரு பகுதியில் பார்வை மங்குதல் ஆகிய பிரச்னைகள் வரும். கண் வலியுடன் சிவப்பாக மாறுதலும் வரலாம். சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோய், இதய நோய் ஆகிய உடல் பிரச்னைகள் உடையோருக்கு, குளூகோமா வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. பெரும்பாலும் 50 வயது மேல் உள்ளவர்களுக்கு வரும்.

கண்களில் ஏற்படும் பிரச்னைக்கு, "ஸ்டிராய்டு' மருந்து அதிகமாக பயன்படுத்தினாலும், குளூகோமா வரலாம். பெற்றோருக்கோ அல்லது சகோதரர்களுக்கோ குளூகோமா இருந்தால், பரம்பரை நோயாகவும் இது வரும். முதலில் கண் பார்வை குறைபாடு இருக்காமல், கண்களில் அழுத்தம் மட்டும் அதிகம் இருக்கலாம். மேலும், நரம்பின் சில பகுதிகள் செயல்பாட்டை இழக்கும். இதன் காரணமாக, பார்வை மெதுவாக குறைய துவங்கும்.

நரம்பின் எல்லா பகுதியும் செயல்பாட்டை இழக்கும் நிலையில், கண் பார்வை முழுவதுமாக குறையும். எனவே, இதை முதலிலேயே கண்டுபிடித்து, தகுந்த சிகிச்சை செய்து கொள்ள வேண்டும். இப்பிரச்னைகள் யாருக்கு இருந்தாலும், அவர்கள் கண் பார்வை, கண் அழுத்தம், நரம்பு பகுதி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மேலும், கண்களின், "ஆப்டிக்' நரம்பின் நிலையை மருத்துவர்கள் பரிசோதித்து குளூகோமா இருக்கிறதா என்று தீர்மானிப்பர்.

கண் அழுத்தம் இருந்தால், சொட்டு மருந்துகள் மூலம் முதல் நிலையிலேயே சரி செய்யலாம். சொட்டு மருந்துகள் மூலம் கட்டுப்படுத்த முடியாத நிலையில், அறுவை சிகிச்சை செய்யப்படும். குளூகோமாவின் ஒரு வகையில், லேசர் சிகிச்சையும் தரப்படும்.

குளூகோமா நோயை முதலிலேயே கண்டறிந்து, சிகிச்சை பெற வேண்டும். முற்றிய நிலையில் சிகிச்சை செய்தாலும் பலன் முழுவதுமாக கிடைப்பதில்லை. இதற்கு, "ஆப்டிக்' நரம்பின் தன்மையே காரணம். ஒருமுறை, "ஆப்டிக்' நரம்பின் பகுதி செயல் இழந்து விட்டால், அது மீண்டும் சரி செய்யப்பட முடிவதில்லை. எனவே, முதல் நிலை குளூகோமா சிகிச்சை பெரிதும் உதவும். குளூகோமா அறுவை சிகிச்சை, 15 முதல் 20 நிமிடங்களில் முடிந்து விடும். மருத்துவமனையில் தங்க வேண்டியதில்லை. இருப்பினும், சொட்டு மருந்துகளும், மாத்திரையும் சரியாக பின்பற்ற வேண்டும். நோயின் தன்மையை பொறுத்து, ஒரு மாதம் அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை குளூகோமா நிபுணர்களிடம் கண்களை பரிசோதித்து கொள்ள வேண்டும். பிறந்த குழந்தைக்கும் குளூகோமா நோய் வரலாம். இதை, "கன்ஜெனிடல் குளூகோமா' என்பர். கண்களின் கருவிழி பெரிதாக இருக்கும். கண்களும் பெரிதாக இருக்கும். கருவிழியில் வெள்ளை நிறம் படிதல், நீர் வடிதல் ஆகிய மாற்றங்கள் ஏற்படும்.

இவ்வாறு இருந்தால், குழந்தையை அருகில் உள்ள கண் மருத்துவமனையில் உடனே காண்பிக்க வேண்டும். சிறுவயதில் குளூகோமா பிரச்னை வந்தால், அது பார்வையை அதிவேகத்தில் பாதிக்கும். சரியான கண் அழுத்தம் உள்ளவர்களுக்கும், குளூகோமா வரலாம். இதை, "நார்மல் டென்ஷன் குளூகோமா' என்பர். இதற்கும் சிகிச்சைப் பெற வேண்டும்.

இப்போதுள்ள நவீன ஓ.சி.டி., - ஸ்வாப், பில்டி டெஸ்ட் போன்ற பரிசோதனைகள் மூலம் கண்களின், "ஆப்டிக் நரம்பு' எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறது என்று விரிவாக தெரிந்து கொள்ளலாம். இந்த பரிசோதனைகள் ஓ.பி.டி., முறையில் செய்யப்படும். அறுவை சிகிச்சைக்கு முன்னும், பின்னும் சிகிச்சை வேலை செய்கிறதா, இல்லையா என்பதை கண்டறியவும் இதை பயன்படுத்தலாம். குளூகோமா நோய் முதலிலேயே அறியவும், இந்த வகை பரிசோதனைகள் பயன்படும். குளூகோமா நோய் முழுமையாக வருமுன், பரிசோதனை செய்து சிகிச்சையை துவங்க, இந்த வகை பரிசோதனை முறைகள் உறுதுணையாக இருக்கின்றன.

No comments:

Post a Comment