Tuesday, 4 October 2011

குழந்தைகளின் பாலியல் வன்முறைகளை தடுப்பது எப்படி?


குழந்தைகளுக்கு அவர்கள் நான்கு வயதாக இருக்கும் போதே பாலியல் வன்முறைகளின் சில கூறுகளை அவர்களுக்கு விளக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

மிக முக்கியமாக எது “நல்ல தொடுதல்”, எது “மோசமான தொடுதல்” எது “பாலியல் தொடுதல்” என்பதை குழந்தைகளுக்கு புரிய வைப்பது அன்னையின் கடமையாகும்.

நல்ல தொடுதல் அன்னையின் அரவணைப்பைப் போல ஆனந்தமாய், பாதுகாப்பாய், உற்காசமூட்டுவதாய் இருக்கும். இவை இன்னும் மிச்சமிருக்கும் மனித நேயத்தின் வெளிப்பாடுகள்.

மோசமான தொடுதல் என்பதை அடித்தல், உதைத்தல், காயப்படுத்துதல் போன்ற வலி ஏற்படுத்தும் நிகழ்வுகளாகச் சொல்லிக் கொடுங்கள்.

மூன்றாவதாக மிக முக்கியமான “பாலியல் தொந்தரவுத்” தொடுதல் பற்றி விளக்குங்கள். இந்தியாவில் 72.1 % குழந்தைகள் தங்களுக்கு நேரும் பாலியல் தொந்தரவுகளைப் பற்றி வெளியே யாரிடமும் சொல்வதில்லை என்கிறது அரசு ஆய்வு. எனவே பாலியல் தொடுதல் பற்றிய விழிப்புணர்வை குழந்தைகளிடம் தெளிவாக விளக்கி விடுதல் மிகவும் அவசியமாகிறது.

தினமும் குழந்தைகளிடம் அன்றைய தினம் நடந்த செயல்கள், சந்தித்த மனிதர்கள் போன்ற அனைத்தையும் விரிவாக கேட்டு அறியுங்கள். ஏதேனும் பிழை நடந்திருப்பதாக உணர்ந்தால் பதட்டப்படாதீர்கள். முழுமையாய் கேளுங்கள்.

குழந்தை எதைச் சொன்னாலும் முழுமையாய் நம்புங்கள். பாலியல் தொந்தரவுகளை குழந்தைகள் ஒரு போதும் உருவாக்கிச் சொல்வதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஏதேனும் “விளையாட்டு” எனும் பெயரில் குழந்தைகள் பெரும்பாலும் ஏமாற்றப்பட்டு பாலியல் தொந்தரவுக்கு ஆளாவதுண்டு என்பதை அன்னையர் கவனத்தில் கொள்ள வேண்டியது மிக அவசியம்.

தாய்க்கும் குழந்தைக்கும் இடையேயான வெளிப்படையான, நட்புறவும் நம்பிக்கையும் கூடிய உரையாடல் மிக மிக முக்கியம். இல்லையேல் குழந்தைகள் தங்கள் பிரச்சனைகளை வெளிப்படுத்தாமலேயே போய்விடும் அபாயம் உண்டு.

சில சூழல் அல்லது சில நபர்களுடைய அருகாமை சந்தேகத்தைத் தருவதாக இருந்தால் அந்த சூழலைத் தவிருங்கள். குறிப்பாக குழந்தை யாருடனாவது நெருங்குவதை விரும்பவில்லையெனில் சுதாரித்துக் கொள்ளுங்கள். அங்கே ஏதேனும் பிழை இருக்கலாம் !

உங்கள் குழந்தைகளை மூன்றாவது நபரிடம், நீங்கள் கூடவே இல்லாதபோது, ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கும் அதிகமாக செலவிட அனுமதிக்காதீர்கள்.

உங்கள் குழந்தையின் உடல் குழந்தைக்கு மட்டுமே சொந்தமானது. அதை வேறு யாரும் தொடும் உரிமை இல்லை என்பதை வெகு தெளிவாக, அழுத்தமாகவே குழந்தைகளிடம் சொல்லுங்கள். அதை மீறி யாரேனும் தொந்தரவு கொடுத்தால் கண்டிப்பான “நோ” சொல்ல குழந்தைகளைப் பழக்குங்கள்.

குழந்தைகளுடைய நடவடிக்கையில் பதட்டம், கோபம், மன அழுத்தம், சோகம் போன்ற உணர்வுகள் மேலோங்கியிருப்பதைக் கண்டாலோ, உடலில் ஏதேனும் அடையாளங்களைக் கண்டாலோ உஷாராகிவிடுங்கள்.

குழந்தைகளிடம் ஏதேனும் விரும்பத் தகாத நிகழ்வு நடந்தால் யாரைச் சந்திக்க வேண்டும், யாரிடம் பேசவேண்டும் என்பதைச் சொல்லி வையுங்கள்.

குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கையை வளருங்கள். வீட்டில் பெற்றோர் முன்மாதிரிகையாக இருப்பதும், குழந்தைகளிடம் நேரத்தைச் செலவிட்டு அவர்களுக்கு பாதுகாப்பு உணர்வை வழங்குவதும் மிக மிக முக்கியம்.

குழந்தைகள் தவறு செய்தால் பக்குவமாய் திருத்துங்கள். பிழை செய்வது மனித இயல்பு, அதைத் திருத்துவதில் தான் மனித மாண்பு இருக்கிறது என்பதை உணர்த்துங்கள். இல்லையேல் பிழைகளை உங்களிடமிருந்து மறைக்கும் வழியையே குழந்தைகள் யோசிக்கும்.

திரையரங்கு, பேருந்து, பள்ளிக்கூடம், விளையாட்டுப் பூங்கா போன்ற இடங்களில் கவனமாக இருக்கவேண்டிய வழிமுறைகளை விளக்குங்கள். எதையும் பயமுறுத்தும் விதமாகச் சொல்லாமல் இருப்பது மிகவும் முக்கியம்.

“அம்மா, அப்பாவிடம் சொல்லாதே” என யாராவது ஏதாவது சொன்னார்களா, செய்தார்களா என்பதை குழந்தைகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். பாலியல் விஷயத்தில் வாக்குறுதிகளை உடைப்பதில் எந்தத் தவறும் இல்லை என்பதை குழந்தைகளுக்கு புரியவையுங்கள்.

அம்மாவிடம் சொல்லுவேன், அப்பாவிடம் சொல்லுவேன் “என பயமுறுத்தி யாராவது தொந்தரவு செய்தார்களா என்பதையும் கேட்டறியுங்கள். இத்தகைய “பிளாக் மெயில்” கள் பெரும்பாலும் தொடர்ச்சியான பாலியல் தொந்தரவுக்குள் குழந்தைகளை இட்டுச் செல்லும்.

யாராவது ஏதாவது அன்பளிப்புகள், இனிப்புகள் தந்தார்களா ? அல்லது தருவதாக வாக்களித்திருக்கிறார்களா என்பதை கேளுங்கள். அப்படியெனில் யார் எதற்காக போன்ற செய்திகளையும் கவனமாய் கேட்டறியுங்கள். அவை பாலியல் தொந்தரவுக்கான முன்னுரையாய் இருக்கலாம்.

படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரர் என எந்த விதத்திலும் இருக்கலாம் குழந்தைகளைத் தொந்தரவு செய்யும் நபர். எனவே ஒரு பொதுவான எச்சரிக்கை உணர்வை குழந்தைகளுக்கு ஊட்டுதல் அவசியம்.

குழந்தைகளிடம் திடீர் பாசம் பொழியும் உறவினர்கள் யாராவது இருந்தால் அவர்கள் மீது ஒரு கண் வைப்பது அவசியம். குழந்தைகளை கடைக்கு அழைத்துப் போகிறேன், திரையரங்கு அழைத்துச் செல்கிறேன் என முன்வந்தால் நாகரீகமாக தவிர்த்து விடுங்கள்.

ஆபாசப் புத்தகங்கள், படங்கள் போன்றவற்றை குழந்தைகளுக்கு காண்பித்து அவர்களை பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்குவதும், பின்பு அதை வைத்தே அவர்களை மிரட்டி, பயமுறுத்தி தொடர் தொந்தரவுகளை கொடுப்பதும் பரவலாக நிகழும் செயல் என்பதால் எச்சரிக்கையுடன் கவனித்தல் அவசியம்.

நம்பிக்கைக்குரியவர் அல்லாத நபர், புகைப்படம் வீடியோ போன்றவற்றை எடுத்தால் “வேண்டாம்” என கண்டிப்புடன் மறுக்க குழந்தைகளைப் பழக்குங்கள். தனியே குழந்தைகளை வைத்து தகாத படங்கள் எடுக்கும் நிலையிலிருந்து தப்பிக்கலாம்.

90 விழுக்காடு பாலியல் தொந்தரவுகளும் குழந்தைகளுக்கு நன்கு தெரிந்த நபர்களாலேயே வருகின்றன. எனவே குழந்தைகள் உண்மையை விரைவில் பெற்றோரிடம் தெரிவிப்பது மிகவும் அவசியம். தாயும், மகளுமான மிகவும் தனிமையான சூழலில் நிகழும் உரையாடலே உண்மையை முழுமையாய் வெளிக்கொணரும்.

தன் சிறகின் கீழ் குஞ்சுகளைப் பாதுகாப்பது போல தனது குழந்தைகளைப் பாதுகாக்கும் கடமை அன்னையர்க்கு உண்டு. அதை சரிவரச் செயல்படுத்த குடும்பம் எனும் கட்டமைப்பிற்கு உள்ளேயும் வெளியேயும் அன்னையர் வழிகாட்டிகளாய் இருக்கவேண்டியது அவசியம்.

நல்ல தொடுதல் – தீய தொடுதல் விளக்க  ஒளிப்படம் கீழே இருக்கிறது.

2 comments:

  1. Sherkhan Sir, This is such an eye opener and for a new mother like me, i wished to teach my son about this but did not know how to start with him, This is a such a simple and wonderful presentation and the video the doctor explained in a very simple language that kids can understand. Many thanks for your efforts in bringing out the awareness. God bless you.

    ReplyDelete
  2. really very MR.SASI.
    just now i see your comment. thanks...!

    ReplyDelete