Wednesday, 14 September 2011

காதல் தொடங்குவது கண்களிலா, இதயத்திலா இல்லை மூளையிலா?

நாம எல்லாரும் காதலில் விழனும்னா, இதயம் மட்டும் இருந்தா போதும், அதை பரிமாறிக்கிட்டு அப்படியே காதல்ல விழுந்துடலாம்னு நம்மில் சிலர்/பலர் நெனச்சிக்கிட்டு இருந்திருப்போம் இதுவரைக்கும்! ஆனா, காதலில் விழ இதயம் எந்த அளவுக்கு அவசியமோ அதே அளவு நம்ம மூளையும் அவசியமாம். அப்படீன்னு நான் சொல்ல, காதலை புரிந்துகொள்ள ஆய்வுகளை செய்த நியூயார்க்கின் சைரகியூஸ் பல்கலைக்கழகத்தின் ஸ்டிஃபேனி ஆர்டிக் சொல்றாங்க……


அதாவது, ஒரு பொண்ணைப் பார்த்த உடனே ஒரு பையனோ அல்லது ஒரு பையனப் பார்த்த உடனே ஒரு பொண்ணோ, “உள்ளமே உனக்குத்தான்….உசுரே உனக்குத்தான்” அப்படீன்னு காதலால் உருகி, மயங்கி, கசிந்து பாடி காதல்வயப்படும்போது (அல்லது அப்படி காதல்வயப்படனும்னா) நம்ம மூளையோட சுமார் 12 பகுதிகள் பொறுப்பா வேலை செய்கிறதாம் (செய்யனுமாம்!). இந்த காதல் ஆய்வுல, அதைவிட முக்கியமான ஒரு விஷயத்தை கண்டுபிடிச்சிருக்காங்க ஸ்டிஃபேனி.

அது என்னன்னா, ஒருத்தர் காதல்ல விழனும்னா அதுக்கு வெறும் 1/5 நொடி நேரம் மட்டுமே போதுமாம்! ஓஹோ, இதனாலதான் நம்ம ஆளுங்க ‘கண்டதும் காதல்’னு சொல்லியிருப்பாங்களோ…..?! இருக்கும் இருக்கும், எதுக்கு அவங்கள ஒரு முறை கேட்டுப்பார்த்தா தெரியும்…..??!!


காதல் ஆய்வுகளும், சில ஆச்சரியங்களும்…..!

என்னதான் கல்தோன்றி மண்தோன்றா காலத்தில் முன் தோன்றிய மூத்தக் குடியில ஆரம்பிச்சி, தொடர்ந்து உலகத்துல தோன்றின எல்லா ‘குடி’ மக்களும் பல ஆயிரம் வருஷமா காதல் செஞ்சுகிட்டு இருந்தாலும், காதல் பத்தின ஒரு தெளிவான புரிதல், அறிவியல்பூர்வமான விளக்கம் இப்படி எதுவுமே இல்லைங்கிறதுனால, நம்ம ஸ்டிஃபேனி சில ஆய்வுகள் செஞ்சு அதைத் தெரிஞ்சிக்க முயற்சி செஞ்சுருக்காங்க!

ஒருத்தர் காதல்ல விழும்போது, யூஃபோரியா அப்படீங்கிற மகிழ்ச்சியுணர்வை ஏற்படுத்தக்கூடிய வேதியியல் பொருள்களான டோப்பமைன், ஆக்ஸிடோசின் (இதுக்கு காதல் ஹார்மோன்னு பேரு!), அட்ரீனலின் மற்றும் வேசோப்ரெஸ்ஸின் ஆகிய பல்வேறு வேதியியல் பொருள்கள் மூளையிலிருந்து வெளியாகின்றனவாம்!

மேலும் சில ஆய்வுகள்ல, ஒருவர் “கண்டதும் காதல்வயப்படும்போது” அவருடைய ரத்தத்திலுள்ள, நரம்பு வளர்ச்சி காரணி மற்றும் மூளையின் செல்களின் வளர்ச்சி மற்றும் பராமரிப்பு ஆகியவற்றுக்கு அடிப்படையான “nerve growth factor (NGF)” அப்படீங்கிற ஒரு புரதத்தின் அளவுகள் அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

இம்மாதிரியான ஆய்வு முடிவுகள் காதல் அப்படீங்கிற ஒரு உணர்வுக்கு அறிவியல் பின்புலம் அல்லது அறிவியல்பூர்வமான ஒரு காரணம் இருக்கிறது என்பதை உறுதிசெய்கின்றன அப்படீங்கிறாங்க ஸ்டிஃபேனி!

மன்மத/ரொமான்டிக் காதல்!

காதல்ல மன்மதக் காதல், தாய்-சேய் காதல், சகோதர அன்பு இப்படி பல வகை உண்டுன்னு நம்ம எல்லாருக்கும் தெரியும். இந்த எல்லாக் காதலுக்கும் ஒரே மூளைப்பகுதி காரணமில்லையாம்! மாறாக, ஒவ்வொரு வகையான காதலுக்கும் வெவ்வேறு மூளைப் பகுதிகள்தான் காரணமாம்! உதாரணமா, ஒருத்தர் மேல ஒருத்தர் பைத்தியமா, உருகி உருகி காதலிக்கிற சுமார் 17 பேரை ஆய்வு செஞ்சதுல, டோப்பமினர்ஜிக் சப்கார்டிகல் சிஸ்டம் அப்படீங்கிற மூளைப்பகுதியானது செயல்பட்டது கண்டறியப்பட்டது. இந்தப் பகுதியானது, கொக்கெய்ன் மாதிரியான போதைப்பொருள்களை எடுத்துக்கொள்ளும்போது செயல்படக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமில்லாம, ஒருத்தர் தெய்வீக காதல்வயப்படும்போது செக்ஸ் உணர்வைத் தூண்டும் மூளைப்பகுதிகளும் தூண்டப்படுகின்றன என்பது தெரியவந்துள்ளது! ஆக, ஒரு காதல் தம்பதியோட காதல் உணர்வுகளும், செக்ஸ் உணர்வுகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்பது அறிவியல்பூர்வமான உண்மை அப்படீங்கிறது உறுதிப்படுத்தப்படுகிறது!

தாய்-சேய் காதல் (தாயன்பு)!

தாய்-சேய் காதல் பத்தின தெளிவான ஒரு புரிதலை பெற, கடந்த 2004 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வுல, சுமார் 20 தாய்மார்களிடம் அவர்களுடைய குழந்தைகளின் புகைப்படங்களையும், அவர்களின் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களின் குழந்தைகளின் புகைப்படங்களையும் கொடுத்து பார்க்கச் செய்து, அவர்கள் அப்புகைப்படங்களைப் பார்க்கும்போது எந்தெந்த மூளைப்பகுதிகள் தூண்டப்பட்டஎன்பது ஆய்வு செய்யப்பட்டது.

(மன்மதக் காதலுடன் ஒப்பிடுகையில்) தாய்-சேய் காதலின்போது மூளையின் தாய்-சேய் உறவுக்கு அடிப்படையான பகுதியான “பெரிஅக்விடக்டல் க்ரே மேட்டர் (Periaqueductal gray matter,PAG)” என்னும் மூளைப்பகுதி தூண்டப்படுவது கண்டறியப்பட்டது!

கடந்த 2009 ஆம் ஆண்டு, நிபந்தனையற்ற காதல் குறித்த ஒரு ஆய்வுக்காக சுமார் 17 பேரிடம், புத்திசுவாதீனமற்ற குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் புகைப்படங்களைக் கொடுத்து, அப்புகைப்படங்களில் இருப்பவர்கள் மீது அன்பு செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. அப்போது அவர்களின் மூளையை பரிசோதித்தபோது, தெய்வீக காதல் மற்றும் தாய்-சேய் காதலுடன் தொடர்புடைய மூளைப்பகுதிகளும், PAG மூளைப்பகுதியும் தூண்டப்படுவது கண்டறியப்பட்டது. ஆக, நிபந்தனையற்ற காதல் மற்றும் தாய்-சேய் காதல் இவையிரண்டுமே ஒரு குறிப்பிட்ட மூளைப்பகுதியின் செயல்பாட்டைப் பொறுத்தே அமைகின்றன என்கிறார் ஸ்டிஃபேனி!

இதுலேர்ந்து என்ன தெரியுதுன்னா…….

காதல் அப்படீங்கிற ஒரு அடிப்படையான உணர்வு மட்டுமல்ல. மாறாக, மனிதனின் அறியும் ஆற்றலுடன் தொடர்புடைய பிரத்தியேகமான மூளைப்பகுதிகளின் செயல்பாட்டின் அடிப்படையில் உருவாகும் ஒரு அறிவுப்பூர்வமான மனித உணர்வே காதல் என்பது தெரியவருகிறது!!

No comments:

Post a Comment