Monday, 7 May 2012

3D-யில் உங்கள் ப்ளாக் எப்படி இருக்கும்?




 3D (3 Dimensions) எனப்படும் முப்பரிமாணத் தோற்றத்தைப் பற்றி அனைவரும் அறிந்திருப்போம். அந்த முப்பரிமாணத் தோற்றத்தில் நமது ப்ளாக்கை பார்க்கும் வசதியை மொஜில்லா பயர்பாக்ஸ் உலவி நமக்கு தருகிறது. எப்படி என்று இங்கு பார்ப்போம்.

பயர்பாக்ஸ் உலவியின் சமீபத்திய பதிப்பை (version 10 அல்லது 11) பதிவிறக்கிக் கொள்ளுங்கள்.   

முகவரி: http://www.mozilla.org/en-US/firefox/fx/



 பிறகு உங்கள் ப்ளாக்கையோ அல்லது வேறு தளங்களையோ திறந்து Right Click செய்து Inspect Element என்பதை க்ளிக் செய்யுங்கள்.


 பிறகு  கீழே உள்ள 3D என்ற பட்டனை க்ளிக் செய்யுங்கள்.


அவ்வளவுதான்! நீங்கள் பார்க்கும் தளம் முப்பரிமாணத்தில் தெரியும். அதை க்ளிக் செய்துக் கொண்டு எந்த பக்கம் வேண்டுமானாலும் திருப்பலாம். Zoom செய்தும் பார்க்கலாம். இதிலிருந்து வெளிவர Esc பட்டனை அழுத்தினால் போதும்.

இது பற்றி ஒரு சிறிய வீடியோ உருவாக்கியுள்ளேன். அவசியம் பாருங்கள்.



என்னுடைய Youtube Channel முகவரி: http://www.youtube.com/techminar

அங்கு சென்று நீங்கள் Subscribe செய்து கொள்ளலாம். இறைவன் நாடினால் மேலும் பயிற்சி வீடியோக்களை (Tutorial Videos) பதிவேற்றம் செய்கிறேன்.

நன்றி: பயிற்சி வீடியோக்களை உருவாக்க ஆலோசனை தந்த சகோ. பிரபு கிருஷ்ணா அவர்களுக்கு நன்றி!

பேஸ்புக்கில் கப்பலேறும் மானம்




 சமூக வலைத்தளங்களில் முதலிடத்தில் இருக்கும் பேஸ்புக் தளத்தை நாம் முறையாக பயன்படுத்தவில்லை என்றால் அதுவே நமக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதாக மாறிவிடும். பேஸ்புக் தளத்தில் தற்போது பிரச்சனை ஏற்படுத்துவது Third-Party Applications. இவைகளில் சில நம்முடைய மானத்தை பேஸ்புக்கில் கப்பலேற்றுகிறது.

தற்போது பிரச்சனை தருவது Dailymotion மற்றும் Yahoo பேஸ்புக் அப்ளிகேசன்களாகும்.

Dailymotion

Yahoo
மேலே உள்ளது நண்பர்கள்  பார்த்த வீடியோ எனவும், படித்த கட்டுரை எனவும் பேஸ்புக்கில் வந்த செய்தி. இது போன்று ஆபாச படங்கள் பார்த்ததாகவும் செய்தி வரும். இதை நம்பி நாம் க்ளிக் செய்தால் பின்வருமாறு காட்டும்,


எந்தவொரு பேஸ்புக் அப்ளிகேஷனை பயன்படுத்தினாலும் இது போல காட்டும். அதாவது உங்கள் பேஸ்புக் கணக்கை அந்த அப்ளிகேசன் அணுகுவதற்கு அனுமதி கேட்கும். மேலுள்ள படத்தை நன்றாக பாருங்கள்.

This app may post on your behalf, including videos you watched, films you watched and more.
அதாவது  நீங்கள் அந்த அப்ளிகேஷனை பயன்படுத்தினால் உங்கள் கணக்கில் இருந்து செய்திகளை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பும். இதன் மூலம் Spam செய்திகளை அனுப்புவதற்கு நீங்களே அனுமதி அளிக்கிறீர்கள்.

அவ்வாறு  க்ளிக் செய்த பின் அது அந்த தளத்திற்கு சென்றுவிடும். அங்கு நீங்கள் எதை க்ளிக் செய்கிறீர்களோ அவையும், சில சமயம் க்ளிக் செய்யாதவைகளும் நீங்கள் பார்த்ததாக உங்கள் பேஸ்புக் நண்பர்களுக்கு செய்தி அனுப்பிவிடும்.

இதனை  தவிர்ப்பது எப்படி?

இவற்றிலிருந்து தவிர்க்க வேண்டுமெனில் இது போன்ற சுட்டிகளை க்ளிக் செய்யாமல் இருக்க வேண்டும். தவறுதலாக க்ளிக் செய்தாலும் Dailymotion, Yahoo போன்ற Third-Party Applications-களை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.

ஏற்கனவே நீங்கள் க்ளிக் செய்து அனுமதி கொடுத்துவிட்டீர்கள் என்றால் அந்த அப்ளிகேசன்களை உங்கள் கணக்கிலிருந்து நீக்கிவிடுங்கள்.

அப்ளிகேசன்களை நீக்குவது எப்படி?

உங்கள் பேஸ்புக் கணக்கில் Account settings என்பதை க்ளிக் செய்து, இடது புறம் உள்ள Apps என்பதை க்ளிக் செய்தால், நீங்கள் பயன்படுத்திவரும் அனைத்து அப்ளிகேசன்களையும் காட்டும்.


மேலே உள்ள Dailymotion, Yahoo என்பதற்கு பக்கத்தில் உள்ள X குறியீடை க்ளிக் செய்து அதனை நீக்கிவிடுங்கள். இது போன்ற அனைத்து அப்ளிகேசன்களையும் நீக்கிவிடுவது சிறந்தது.

என் பரிந்துரை: எக்காரணம் கொண்டும் Third Party Application-களை பயன்படுத்துவதை முடிந்தவரை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

சிறு வேண்டுகோள்: இது பேஸ்புக்கில் தற்போது பரவிவரும் முக்கிய பிரச்சனை என்பதால் தாங்கள் பேஸ்புக்கில் இதனை பகிர்ந்தால் பலர் இதன் மூலம் தங்களை பாதுகாத்துக் கொள்வார்கள்.

சைபர் க்ரைம் - ஒரு பார்வை



இணையம் ஒரு விசித்திரம். ஒரு பக்கம் எண்ணற்ற வசதிகள் மூலம் இனிய முகங்களை காட்டி நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன. இன்னொரு பக்கம் ஹேக்கிங், ஸ்பாம், ஆபாசம் போன்ற வக்கிர முகங்களை காட்டி நம்மை துன்பத்தில் ஆழ்த்துகின்றன. சைபர் க்ரைம் எனப்படும் இணைய குற்றங்களை பற்றியும், பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும் சிறிதளவு இங்கு பார்ப்போம்.

இணைய குற்றங்கள் (Cyber Crimes):


1. ஸ்பாம்(Spam) எனப்படும் தேவையில்லாத  மெயில்கள். இவற்றை பற்றி ஈமெயில் ஐடியை பாதுகாக்க சில வழிகள் என்ற பதிவில் பார்த்தோம்.

2. கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் மூலம் இணையத்தில் பணபரிமாற்றங்கள் நடக்கும்பொழுது, கடவுச்சொல் உள்பட கணக்கு விவரங்களை திருடுவது.

3. பாலியல் ரீதியான தொல்லைகள் . சாட்டிங்கில் ஆரம்பித்து டேட்டிங்கில் முடிகிறது இன்றைக்கு சில இணைய நட்புகள். அதுமட்டுமின்றி காதலன் என்ற பெயரில் வக்கிர வெறிபிடித்த கயவர்கள் பெண்களை ஆபாசமாக படம்பிடித்து அதனை இணையத்தில் வெளியிடுகிறார்கள். மேலும் அதனைக் கொண்டே பெண்களை மிரட்டி வருகிறார்கள்.

4. போதை பொருள் விற்பனை. தடைசெய்யப்பட்ட போதை பொருள்களை விற்பனை செய்வதற்கும் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

5. இணையதளங்களை ஹேக் செய்வது. ஹேக்கர்களிடமிருந்து அமெரிக்காவின் சி.ஐ.ஏ-வும் தப்பவில்லை, மின்னணு சாதனங்களில் ஜாம்பவனாக திகழும் சோனி(Sony)யும் தப்பவில்லை. சமீப காலமாக பல தளங்கள் ஹேக் செய்யப்படுகின்றது.

6. இருபது வயதுக்குட்பட்டவர்களுக்கு அல்லது இருபது வயதுக்குட்பட்டவர்களின் ஆபாச புகைப்படங்கள், படங்கள் இன்னும் சிலவற்றை இணையத்தில் பதிவது.  [ஒன்றுமட்டும் புரியவில்லை. அது போன்ற ஆபாச தளங்களுக்கு சென்றால் கேள்வி கேட்கும். நீங்கள் இருபது  வயதுக்குட்பட்டவரா? இல்லையா? என்று. சிறுவர்களும் "ஆம்" என்பதை க்ளிக் செய்தால் எளிதாக அந்த தளங்களை பார்க்கலாம். இது எப்படி இருக்கிறது என்றால், சிகரெட் பாக்கெட்டில் மண்டை ஓடு படத்தை போடுவது போல தான். ஆபாச தளங்களை முழுமையாக தடை செய்வதே இதற்கு சரியான தீர்வாகும்.]

7. இவற்றைவிட கொடியது, குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்கள். மனித உருவில் பல மிருகங்களும் நம்முடன் வாழத்தான் செய்கின்றன. இவர்கள் சிறுவர், சிறுமிகள் உரையாடும் அரட்டை அறைகளுக்கு(Chatting) சென்று தங்களை குழந்தைகளாகவே அறிமுகம் செய்கின்றனர். பிறகு அவர்களின் புகைப்படங்கள், வீட்டு முகவரி, பள்ளி முகவரி என தகவல்களை பகிர்கின்றனர். இது போன்ற கேடு கெட்டவர்கள் ஒரு அமைப்பாகவே செயல்படுகின்றனர். தங்களுக்குள் குழந்தைகளின் ஆபாச புகைப்படங்களையும், தகவல்களையும் பகிர்ந்துக் கொள்கின்றனர்.

பாதுகாப்பு வழிகள்:

1. எந்த நிலையிலும் முகம் தெரியாத நபர்களிடம் உங்கள் தொலைபேசி எண், வீட்டு முகவரி, பள்ளி முகவரி  போன்றவற்றை பகிர வேண்டாம்.

2. ஃபேஸ்புக் போன்ற சமூக தளங்களில் அறிமுகம் அல்லாதவர்களை நண்பர்களாக சேர்க்க வேண்டாம்.

3. குழந்தைகள் தனி அறையில் இணையத்தில் உலவுவதை அனுமதிக்காதீர்கள். குழந்தைகள் பயன்படுத்தும் கணினிகளை பொதுவான இடத்தில் வைப்பது நலம்.

4. இணையம் பற்றியும் பாதுகாப்பு வழிகள் பற்றியும் உங்கள் குழந்தைகளிடம் மனம் விட்டு பேசுங்கள். கணினி பற்றி அவர்களுக்கு என்ன தெரியும்? என்பதை கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள். அவர்களுடன் இணையத்தில் சிறிது நேரம் செலவிடுங்கள். அதிகமான குழந்தைகள் வழிமாறி செல்வதற்கு சரியான அரவணைப்பு இல்லாதே காரணம் என நான் கருதுகிறேன்.

5. உங்கள் குழந்தைகள் பார்வையிடும் வலைத்தளங்களை கண்காணியுங்கள். நீங்கள் செல்லும் போது குழந்தைகள்அவர்கள் பார்த்துக் கொண்டிருந்த வலைத்தளத்தை மூடினால், உடனே கவனிக்கவும்.

6. அறிமுகம் இல்லாத நபர்கள் உங்களை நேரில் சந்திக்க அழைத்தால் மறுத்துவிடுங்கள்.

7. நீங்கள் மற்றவர்களுடன் அரட்டை அடிப்பதை அவர்கள் பதிவு செய்யக் கூடும் என்பதை மறவாதீர்கள்.

8. அறிமுகம் இல்லாதவர்களுடன் முகம் பார்த்து அரட்டை அடிக்கும் வீடியோ சாட்டிங்கை தவிர்த்துக் கொள்ளுங்கள். அதுவும் பதிவு செய்யப்பட்டு, உங்களுக்கு தெரியாமலே இணையத்தில் பரப்பப்படலாம்.

9. இணையத்தில் உங்களை பற்றிய முழு விவரங்களையும் பகிர வேண்டாம். முக்கியமாக ஃபேஸ்புக்கில்.

10. குழந்தைகள், பெண்கள்  புகைப்படங்களை இணையத்தில் பகிர்வதை தவிர்க்கவும். தற்போது உள்ள தொழில்நுட்பங்கள் மூலம் அந்த புகைப்படங்களை ஆபாசமாக மாற்றலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

11. உங்கள் password-ஐ பெற்றோர்களை தவிர வேறு யாரிடமும் தெரிவிக்க வேண்டாம்.

12. பணபரிமாற்றங்கள் செய்யும் பொழுது அந்த பக்கத்தின் முகவரியை பாருங்கள். http::// என இருந்தால் உங்கள் கார்ட் விவரங்களை கொடுக்காதீர்கள். https:// என்று இருந்தால் மட்டுமே பணப்பரிமாற்றம் செய்யுங்கள். https::// என்பது பாதுகாப்பான வழியாகும். 

13. காதலன் என்றாலும் உங்களை படம்பிடிப்பதை அனுமதிக்காதீர்கள்.

பிரச்சனை பெரிதாக ஆனால் ஃசைபர் க்ரைமில் புகார் செய்யலாம். புகார் செய்யும் முன் வக்கீல்களிடம் ஆலோசனை பெறவும்.

சைபர் க்ரைமில் ஏற்றுக்கொள்ளப்படும் புகார்கள்:

1. இண்டர்நெட் கடவுச்சொல் திருட்டு 

2. அச்சுறுத்தும் மின்னஞ்சல்கள் 

3. இணைய பின்தொடர்தல் (Cyber Stalking) [பாலியல் ரீதியிலான தொல்லைகள், வேறொருவர் உங்களை போல இணையத்தில் உலவுவது, மிரட்டல்கள் ஆகியவைகளும் அடங்கும்].  

4. குழந்தைகள் வன்கொடுமை / ஆபாச தளங்கள் 

5. கடன் அட்டை எண் திருட்டு
 

6. வலைத்தள ஹேக்கிங்

தமிழ்நாட்டில் புகார்  கொடுக்க:

சென்னை தவிர பிற மாவட்டங்கள்:
 Tmt.Sonal V.Misra, IPS,
SCB, Cyber Cell
SIDCO Electronics Complex,
Block No. 3, First Floor,
Guindy Industrial Estate,
Chennai -32

மின்னஞ்சல் முகவரி: spcybercbcid.tnpol(at)nic.in

சென்னை:
Tr.S.Aravind,
DSP, CBCID, Cyber Crime Cell
SIDCO Electronics Complex,
Block No. 3, First Floor,
Guindy Industrial Estate,
Chennai -32

தொலை பேசி எண்: 044-22502512
மின்னஞ்சல் முகவரி: cbcyber (at) nic.in

Sunday, 6 May 2012

தோற்றம் பற்றிய அதிருப்தியும் சுயபிம்பத்தை உயர்த்தலும்



‘இது மற்றப் பக்கத்தைவிடப் பெரிசாக இருக்கிறது’ என்றாள் அவள்.
கலந்தாலோசனையை முடித்துக் கொண்டு  வெளியேற எழுந்தபோதுதான் அப்படிச் சொன்னாள். காய்ச்சல், சளி இருமலுக்காக மருந்தெடுக்க வந்திருந்தாள் அந்தப் பள்ளி மாணவி.
தனது வலது கையைச் சுட்டிக் காட்டுவது கண்ணில் பட்டபோது, அடுத்த நோயாளி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்.
“அப்படி இருப்பது இயற்கைதானே. அதிகம் உபயோகிக்கும் கை மற்றதைவிட சற்று மொத்தமாக இருக்கும்” என ஆறுதல் சொல்லி அனுப்பி வைததுவிட்டு அடுத்தவர் பிரச்சனையில் மூழ்கினேன்.
“மூக்கு சற்று வளைவாக இருப்பதாக” அதே பெண் அடுத்த முறை வந்து சொன்ன போது சற்று உசாரானேன். அவளது முகத்தில் சற்று வாட்டம் இருப்பதையும் அவதானிக்க முடிந்தது.
சற்று ஆறுதலாகப் பேசிய போது அவளுக்கு தனது தோற்றம் பற்றிய தற்குறை இருப்பதை உணர்ந்தேன்.
தனது உடற்தோற்றம், அழகு, கவர்ச்சி போன்றவை பற்றிய அக்கறை பதின்ம வயதினரிடையே ஏற்படுவது சகசம்.
  • ஒரு பக்க மார்பு பெரிசாக எனப் பெண்களும்
  • அல்லது ஒரு பக்க விதைப்பை பெரிசாக எனப் பையன்களும் கவலைப்பட்டுக் கொண்டு வருவது அதிகம்.
  • தான் உயரமாக அல்லது குள்ளமாக இருப்பதான உணர்வு,
  • தனது நிறம் குறைவாக இருப்பதாக எண்ணல் இப்படிப் பல.
  • தமது சருமம் மிருதுவாக இல்லை,
  • தனது குரல் கரகரக்கிறது.
  • தனது பல் சற்று பழுப்பு நிறமாக இருக்கிறது.
  • தலைமுடி கொட்டுகிறது.
  • நகம் அசிங்கமாக இருக்கிறது.
இவ்வாறெல்லாம் தமது உடல் பற்றிய மறையான சிந்தனைகள் ஏற்படலாம்.
இப்படியான எண்ணங்கள் உங்களுக்கும் ஏற்பட்டால் அது பற்றி கவலைப்படவோ வெட்கப்படவோ வேண்டாம். நீங்கள் மட்டுமல்ல நிறையப்பேருக்கு இத்தகைய சிந்தனைகள் வருவதுண்டு.
ஆனால் அவ்வெண்ணத்தை மாற்றி மகிச்சியை கைப்பிடிக்க வேண்டும்.

மனத்தாக்கம் ஏற்படலாம்
தனது உடல் பற்றிய எண்ணங்களுக்கும் சுயமதிப்பீடுகளுக்கும் நிறையத் தொடர்பிருக்கிறது. தனது உடல் அழகாக இல்லை, அசிங்கமாக இருக்கிறது என எண்ணுபவருக்கு தன்னைப்பற்றிய தாழ்வுணர்ச்சி ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம் எனலாம். தாழ்வு மனப்பான்மை என்பதும் இதனோடு தொடர்புடையதே.
  • முதலில் குறிப்பிட்ட பெண்ணுக்கு தனது உடற்தோற்றம் பற்றிய திருப்தியின்மையானது மனச்சோர்வாக மாறியிருந்தது.
  • அதேபோல ஒவ்வொருவரும் தமது தோற்றம் பற்றிய தாழ்வுமனப்பான்மை உளம் சார்ந்த நோய்களாக மாறாது தடுப்பது அவசியம்.
அதற்கான துடுப்பு அவரவர் கைகளிலேயே இருக்கிறது.

நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
அப்படியான மறைஎண்ணம் (Negative Thoughts) வந்தால் நீங்கள் செய்யக் கூடியது என்ன?
உங்களிடம் உள்ள தனிச்சிறப்புகளைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பியுங்கள்.
  • நிறம் கறுப்பாக இருந்தாலும் உங்கள் கண்கள் கவர்ச்சியுடையனவாக இருக்கலாம்.
  • சிரிக்கும் ஏதோ ஒரு மோகனம் மற்றவர்களை ஈர்க்கலாம்.
  • அல்லது உங்கள் உரையாடல் திறன் மற்றவர்கள் உங்களோடு மனம் திறந்து பேச வைக்கலாம்.
  • விளையாட்டு, சமையல், கையெழுத்து
இப்படி ஏதாவது ஒரு சிறப்பு அல்லது பல சிறப்புகள் உங்களிடத்தில் மறைந்து கிடக்கலாம். அவற்றைக் கண்டு பிடியுங்கள். கண்டு பிடித்ததை மெருகூட்டுங்கள். மனம் மகிழ்ச்சியில் ஆளும்.
சிறப்புகளை மீள நினைத்தல் நன்று
உங்கள் சிறப்புகளை நினைத்துப் பார்ப்பதுடன் நின்றுவிடாது அவை பற்றி குறிப்புகள் எழுதி வைப்பது இன்னும் மேலானது.
எழுதத் தவறிவிட்டாலும், தினமும் உங்களை மகிழ்வுறச் செய்த சம்பவங்களை படுக்கைக்கு சென்று தூங்கு முன்னர் இரை மீட்டிப் பார்ப்பதுவும் சுயபிம்பத்தை உயர்த்தக் கூடியதாகும்.
தினமும் குறைந்தது மூன்று மகிழ்வூட்டிய நிகழ்வுகளையாவது நினைவுபடுத்துங்கள்.
உதாரணத்திற்கு
  • நீங்கள் கூறிய விடைக்கு ஆசிரியர் திருப்தி எனச் சொல்லியிருக்கலாம்.
  • உங்களுக்கு விடை தெரிந்திருந்தும், விடையளிக்க முன் வேறொருவர் சொல்லிப் பாராட்டைப் பெற்றிருந்தாலும்
  • விடை தெரிந்ததை உங்களுக்குக் கிடைத்த வெகுமதியாக எண்ணி மகிழுங்கள்.
“அட நான் சொல்லாமல் விட்டுவிட்டேனே” எனக் கவலைப்படுவது கூடவே கூடாது.
உங்களது உடை, அல்லது நீங்கள் தயாரித்த உணவு, அல்லது நீங்கள் சொன்ன ஜோக் மற்றவர்களைக் கவர்ந்திருக்கும்.
  • உங்கள் வெற்றிகளை நினைவுபடுத்துங்கள்.
  • அவற்றை உங்களுக்குக் கேட்குமாறு வாய்விட்டு உரத்துச் சொல்லுங்கள்.
  • அல்லது உங்கள் பெற்றொர், அண்ணன், அக்கா அல்லது உங்களைப் புரிந்து கொண்ட ஒருவருடன் பகிர்ந்து மகிழுங்கள்.
இவை யாவுமே உங்களைப் பற்றிய உங்கள் சுயபிம்பத்தை உயர்த்த உதவும்.
உங்களுக்குள் ஏதோ ஒரு அழகு ஒளிந்திருக்கிறது. உங்களின் மனது மற்றவர்களைக் கவருகிறது. உங்களுக்கு மட்டுமே தனித்துவமான ஏதோ ஒரு ஆற்றல் அழகு குணம் குடிகொண்டிருக்கிறது.
அதை நினையுங்கள். அதையிட்டுப் பெருமைப்படுங்கள். மேலும் வளருங்கள்.
ஒளிமயமான எதிர்காலம் உங்கள் வரவிற்காகக் காத்திருக்கிறது. பயன்படுத்தாது தப்ப விட்டுவிடாதீர்கள்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Saturday, 5 May 2012

இணையத்தில் உங்களின் "நேரம்" எவ்வளவு?

தகவல்கள் கொட்டி கிடக்கும் இணையத்தில் காலையில் ஆரம்பித்து மாலை வரை அதிலேயே காலத்தை செலவழிப்பவர்கள் உண்டு. ஒவ்வொருவரும் அவரவரின் விருப்பத்திற்கு ஏற்ப குறிப்பிட்ட இணையதளங்களில் தங்கள் நேரத்தை செலவு செய்கின்றனர். இப்படி நீங்கள் ஒரு நாளைக்கு இணையத்தில் எவ்வளவு நேரத்தை எந்தெந்த தளங்களில் உபயோகப்படுத்துகிறீர்கள் என்பதை புள்ளி விவரங்களோடு உங்களுக்கு தெரிவிக்க ஒரு பயனுள்ள குரோம் நீட்சி உள்ளது.

நீங்கள் செய்ய வேண்டியாது கீழே உள்ள லிங்கில் சென்று இந்த நீட்சியை டவுன்லோட் செய்து உங்களின் குரோம் உலவியில் இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும்.  அவ்வளவு தான் இனி நீங்கள் உங்கள் விருப்பம் போல இணையத்தை சுற்றி வாருங்கள்.
கொஞ்ச நேரம் கழித்து அந்த நீட்சியின் மீது க்ளிக் செய்தால் நீங்கள் எந்தெந்த தளத்தில் எவ்வளவு நேரத்தை செலவழித்தீர்கள் என்ற முழு பட்டியலும் உங்களுக்கு தளத்தின் முகவரியோடு சேர்ந்து வரும்.   Today என்பதில் இன்றைய அறிக்கையும் Total என்பதில் மொத்த செலவான நேரங்களையும் புள்ளி விவரங்களோடு தெரிந்து கொள்ளலாம்.

இந்த நீட்சியை டவுன்லோட் செய்ய - Time Counter

இணையத்தில் "பொன்னியின் செல்வன்"

வணக்கம் நண்பர்களே! "பொன்னியின் செல்வன்" நாவலின் முதற் பாகம் (புது வெள்ளம்). பலிபீடம் வலைப்பூ நாம் iPhone, iPad போன்ற அப்பிள் நிறுவனத்தின் சாதனங்களின் வாசிக்கக்கூடிய வகையில் epub இல் உருவாக்கி வெளியிட்டது.
நான் தற்போது அமரர் கல்கி அவர்கள் எழுதிய ஒப்பற்ற சரித்திரப் புதினமான "பொன்னியின் செல்வன்" நாவலின் இரண்டாம் பாகம் – சுழற்காற்று (மூலம் Project Madurai http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0169_02_02.html)  epub முறையில் மாற்றி பதிவு செய்துள்ளேன் மகிழ்ச்சியுடன் வலையுலக நண்பர்கள் கீழ் உள்ள முகவரியில் பதிவு இறக்கம் செய்து கொள்ளுங்கள்.
IMG_0042IMG_0043
முதற் பாகமேயாகும் (புது வெள்ளம்).
http://cid-d1e9ef060fcd5fa2.office.live.com/self.aspx/Public/Ponniyin%20Selvan%20-%20Volume%201%20-%20Kalki%20Krishnamurthy.epub
பொன்னியின் செல்வன் நாவல் இரண்டாம் பாகம் – சுழற்காற்று பகுதி – 1
http://cid-d1e9ef060fcd5fa2.office.live.com/self.aspx/Public/Poniyin%20Celvn%20Part%202A.epub
பொன்னியின் செல்வன் நாவல் இரண்டாம் பாகம் – சுழற்காற்று பகுதி – 2
http://cid-d1e9ef060fcd5fa2.office.live.com/self.aspx/Public/Poniyin%20Celvn%20Part%202A.epub#resId/D1E9EF060FCD5FA2!258